2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட 4 பேர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

பதினாறு 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் மற்றும்  நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 04 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களாக பிங்கிரியப் பகுதியில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலிலிருந்து விடுதலை பெற்றுவந்த ஒருவரைக் கைதுசெய்தபோது, அவரிடமிருந்து இரண்டு 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.  இந்தச் சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து மற்றொரு சந்தேக நபருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து இரண்டு 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதுடன், இந்தச் சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டார்.  
இந்த இரு சந்தேக நபர்களிடமும்  தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மூன்றாவது சந்தேக நபர் மினுவாங்கொடைப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதுடன், இவரிடமிருந்து போலி நாணயத்தாள்கள் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி, அச்சு இயந்திரத்தையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில், அச்சிடுவதற்கான மூலப்பொருள்களை வழங்கிய நான்காவது சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து பன்னிரண்டு 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.   

இதுவரையில் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மூன்று தொகுதி இலக்கத் தொடர்களில் அச்சிட்டு பிங்கிரிய, ஹெட்டிப்பொல போன்ற பிரதேசங்களில் இவர்கள் விநியோகித்துள்ளதாகவும் அவர்களால் அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள் போலியானதென இலகுவாக இனங்காண முடியாத வகையில் மிகவும் நுட்பமாக அச்சிடப்பட்டதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X