2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விவசாய கிராமங்கள் மேம்படுத்தப்படும்

Princiya Dixci   / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

கல்பிட்டி பிரதேச நிலப்பரப்பிலிருந்து பத்து விவசாயக் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அதன் விளைச்சல் தொடர்பாக அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.

விவசாயக் கிராமங்களை அரசாங்கத்தின் உதவியோடு மேம்படுத்தும் நோக்கில் பாலக்குடா விவசாய ஆராய்ச்சி மத்திய நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (19) மாலை நடைபெற்ற கல்பிட்டி பிரதேசத்தின் விவசாய அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

விவசாய அபிவிருத்தி அதிகாரி எம்.சுக்கூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து  உரையாற்றுகையில், 

நாவற்காடு தொடக்கம் கல்பிட்டி வரையிலான விவசாய பிரதேசமானது சுமார் 16,031 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பாரிய விவசாய பிரதேசமாகும். இறப்பர் மற்றும் தேயிலை பயிர்களைத் தவிர ஏனைய அனைத்து பயிரினங்களும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. சரியான முறையில் இவைகளை நாம் திட்டமிட்டு செயற்படுத்தாததன் காரணமாக இங்கு உள்ள விவசாயிகள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதோடு இங்கிருந்து  மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை எடுத்துச் செல்பவர்கள் பணம் படைத்தவர்களாக மாறிவிடுகின்றனர்.

இங்கு மணல் திட்டுகள் கூடுதலாக இருப்பதால் அதனை சரியாக பண்படுத்தாததன் காரணமாக அதிகமான நீர் வீண் விரயமாகுவதோடு , அதிகமான உர வகைகளும் பாவிக்கப்படுகின்றன. அதிகரித்த உர பாவனையால் சிறுநீரக நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை கூடுகின்றது.

இதனைத் தவிர்த்து சேதன பசளைகளை பாவிப்பதற்கு விவசாயிகளை ஊக்கிவிக்க வேண்டும். நுவரெலியா போன்ற 10 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அதனை அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் பின்னர் விளைச்சல் அதிகரிக்கும் காலத்தில் அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பயிரினத்தை உடனடியாக தடை  செய்யும்போது உள்ளூர் விவசாயிகளும் வியாபாரிகளும்  பெரிதும் நன்மையடைவர்.
 
அதிகமான விளைச்சல் காலத்தின் போது பழ வகைகள் மற்றும் பயிரினங்களைப் பாதுக்காப்பதற்கான குளிரூட்டி வசதிகளும் இந்த பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளன. 

பழ வகைகளை அமைச்சர் றிஷாட் பத்யுதீனின் அமைச்சின் மூலமாக பதனிடும் வழிவகைகளையும் மேற்கொள்ளவுள்ளோம். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தின் போது உள்ளூர் உற்பத்திகளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் வழங்கினார்களோ அதே நிலைமையை மீள ஏற்படுத்துவதன் மூலமாக உள்ளூர் விவசாயிகள் நிச்சயம் முன்னேற்றம் காண முடியும் எனக்கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X