2025 மே 07, புதன்கிழமை

10 கிலோமீற்றர் தூரத்திலிருந்து 3 வயது சிறுமி மீட்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க 

கருவலகஸ்வெவ பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) காணாமல் போயிருந்த மூன்று வயது சிறுமி, சாமி பார்க்கும் பெண்ணொருவரின் உதவியுடன் இன்று புதன்கிழமை (30) அதிகாலை 3 மணியளவில் பஹரிய காட்டுப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். 

பெண்கள் மூவரே அச்சிறுமியை மீட்டுள்ளனர். கருவலகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 3 வயதான தினிதி அஹிங்ஷா ஹர்ஷணி எனும் சிறுமியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த சிறுமியை செவ்வாய்க்கிழமை காலை முதல் காணவில்லையென குடும்பத்தாரும் பிரதேசவாசிகளும் சேர்ந்து தேடுதல் நடத்தினர். 

எனினும், செவ்வாய்க்கிழமை மாலை வரை சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாமையினால் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்நிலையில் பஹரிய காட்டுப் பகுதிக்கு அண்மையில் சிறுமியின் குடுப்பத்தாரிடம் அப்பகுதியில் வசிக்கும் சாமி பார்க்கும் வயோதிப பெண்ணொருவர் சிறுமியை காட்டேறி கடத்திச் சென்றுள்ளதாகவும் தற்போது சிறுமி பஹரிய காட்டுக்குள் தனியாக இருக்கின்றார் எனவும் கூறியுள்ளார். 

அத்துடன், சிறுமியை மீட்க ஆண்கள் செல்ல வேண்டாம் எனவும் பெண்கள் மூவர் செல்லுமாறும் அப்பெண்கள் எலுமிச்சைப்பழம் மற்றும் தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு செல்லுமாறும் கூறியுள்ளார். 

அப்பெண் கூறியபடியே பிரதேசவாசிகள் மேற்கொண்டு பஹரிய காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கே பெரிய கல்லின் மீது சிறுமி இருப்பதைக் கண்டு மீட்டு வந்துள்ளனர். 

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைகளுக்காக கருவலகஸ்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

குறித்த சிறுமி, வீட்டிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் எவ்வாறு சென்றார் என்பது தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X