2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'வட மேல் மாகாண இரண்டு மு.கா உறுப்பினர்களின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்'

Super User   / 2013 ஜூன் 28 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தமை கண்டிக்கத்தக்கதாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளர் ஷஹாப்தீன் ஹாஜியார் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

"இந்த அரசாங்கத்தின் இனவாத போக்கின் உச்ச கட்ட வெளிப்பாடுதான் அரசியல்யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் கைவைக்க அரசு எடுத்துள்ள முயற்சியாகும். உள்நாட்டில் சிறுபான்மை மக்களின் ஏகோபித்த எதிர்ப்புக்கு இது ஆளாகி உள்ளது. சர்வதேச மட்டத்திலும் இந்த அரசின் நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாக்கியுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளும் இடதுசாரி மற்றும் தாராளபோக்கு சிந்தனையாளர்களும் இதற்கு எதிராக கடும்தொனியில் குரல் கொடுத்து வருகின்றனர். தமது அமைச்சுப் பதவிகள் பறிபோனாலும் பரவாயில்லை என்று சில அமைச்சர்கள் அரசுக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர். இன்னும் பலர் அவர்களுக்குப் பின்னால் காத்திருக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு அதற்குள்ளேயிருந்து கிளம்பியுள்ள முதலாவது பாரிய எதிர்ப்பு இதுவாகும். அரசாங்கத்தின் பங்காளியான முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கு இடமே இல்லை என்றும் எந்தவிதமான சவாலுக்கும் முகம் கொடுக்கத் தயார் என்றும் கூறி வருகின்றது.

கட்சித் தலைவரும் செயலாளரும் மாறிமாறி இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அறிக்கைகள் பேட்டிகள் என அன்றாடம் பத்திரிகைகள் வாயிலாகவும் ஏனைய ஊடகங்கள் வாயிலாகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டிலுள்ள சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்தமாக இதுபற்றி கவலை அடைந்துள்ள நிலையில் மிகவும் பொறுப்பற்ற விதத்தில் அரசாங்கத்துடன் சேர்ந்து ஆதரவாக வாக்களித்து விட்டு கட்சித் தலைமையுடன் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்க முற்பட்டோம் ஆனால் முடியவில்லை அதனால் ஆதரவாக வாக்களித்தோம் என்று பகிரங்கமாகப் பேட்டி அளிப்பது சிறுபிள்ளைத்தனமான அரசியலாகும்.

செய்வதை எல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியவில்லை அதனால் ஆதரவளித்தோம் என்று கூறியதன் மூலம் அவர்கள் தங்களை தாங்களே கேவலப்படுத்தி உள்ளனர்.

தேசிய ரீதியாகக் காரசாரமாகப் பேசப்படும் ஒரு விடயம் பற்றி தனது கட்சியின் நிலைமையை ஊடகங்கள் வாயிலாகக் கூட தெரிந்து வைக்கவில்லை என்றால் அவர்களை புத்திசாலிகள் பட்டியலிலோ அல்லது நாட்டு நடப்புக்களைப் பற்றி தெரிந்து கொள்ளாதவர்களை பொறுப்பான அரசியல்வாதிகள் பட்டியலிலோ அல்லது மக்கள் பிரதிநிதிகள் பட்டியலிலோ இணைத்துக் கொள்ள முடியாது.

இவர்கள் இருவரும் தான்தோன்றித்தனமாக அரசுக்கு ஆதரவு வழங்க எடுத்த முடிவுக்காக இவர்களுக்கு வழங்கப்பட்ட கைமாறு அல்லது பிரதி உபகாரம் என்ன? என்று இப்போது மக்கள் சந்தேகப்படத் தொடங்கியுள்ளனர்.

அரசியல் தார்மீகத்தை ஓரளவாவது இவர்கள் கற்றிருந்தால் உண்மையிலேயே தன்மானம் உள்ள அரசியல்வாதிகளாக இவர்கள் இருப்பார்களானால் தமது கட்சியையும் தமக்கு வாக்களித்த மக்களையும் அரசியல் சுய இலாபங்களுக்காக அடகு வைத்து காட்டிக்கொடுத்து, தலைகுனியச் செய்த குற்றத்துக்காக இவர்கள் இருவரும் தாமாகவே முன்வந்து இராஜினாமாச் செய்யவேண்டும்.

இவர்கள் இருவரையும் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கிவைக்க கட்சித் தலைவர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை பாராட்டத்தக்கது.முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு இப்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக எதிர்வரும் வாரங்களில் இதே விடயம் கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு வரவுள்ளது. அங்கும் தமது கட்சி உறுப்பினர்களை ஒருமித்த கருத்தில் கட்டுக் காப்பாக வைத்திருப்பதற்கு கட்சித் தலைமை உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த அரசுக்கு நல்லதோர் பாடம் புகட்ட கிழக்கு மாகாண சபையில் அரியதோர் வாய்ப்பு காத்திருக்கின்றது. வழமையாக கடைசி நேரத்தில் தனிப்பட்ட பேரம் பேசல்கள் மூலம் சமூகத்தின் காலைவாரும் விளையாட்டை முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் செய்யாமல் பொறுப்புணர்ந்து நடந்து நல்லதோர் முடிவை எடுக்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X