2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

தேயிலை தொழிற்துறைக்கு போதியளவு உர விநியோகத்துக்கு அரசு உறுதி

S.Sekar   / 2021 ஜூலை 30 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேயிலைத் தொழிற்துறைக்கு அவசியமான உரத்தை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளது.

சேதன உரத்தை கொள்வனவு செய்யும் விலைமனுக்கோரல்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்பதுடன், முதல் தொகுதி உரம் ஒக்டோபர் மாதமளவில் இலங்கையை வந்தடையும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி. ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அதுவரையில் நாட்டில் போதியளவு இரசாயன உரம் கையிருப்பிலுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மே மாத இறுதியில் எம்மிடம் 49000 டொன்கள் எடையுடைய இரசாயன உரம் காணப்பட்டது. கடந்த வாரம் நாம் 25000 டொன்களை விநியோகித்திருந்தோம். கைவசம் 24000 டொன்கள் எஞ்சியுள்ளது. இவை அடுத்த நான்கு முதல் ஆறு வார காலப்பகுதியில் படிப்படியாக விநியோகிக்கப்படும். ஒக்டோபர் மாதத்தில் எமது சேதன உர கொள்வனவு வந்தடையும் வரை, எம்மிடம் போதியளவு இரசாயன உரம் கையிருப்பிலுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.

எஞ்சியிருக்கும் இரசாயன உரங்கள் தொழிற்சாலைகள் மத்தியில் நேரடியாக பகிர்ந்தளிக்கப்படும். ஆனாலும் இது படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு, நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

இலங்கையின் தேயிலைத் துறைக்கு வருடாந்தம் 150,000 டொன்கள் உரம் தேவைப்படுகின்றது. ஆனாலும் அரசாங்கம் 100% சேதன உரத்துக்கு மாற்றமடைந்துள்ள நிலையில், சந்தையில் தட்டுப்பாடுகள் மற்றும் விளைச்சலின் தரம் தொடர்பில் துறைசார்ந்தவர்கள் கரிசனை கொண்டுள்ளனர்.

இரசாயன உர தடை காரணமாக எழக்கூடிய வேறுபட்ட தாக்கங்கள் தொடர்பில் அரசாங்கம் முறையாக கவனம் செலுத்துவதுடன், சேதன உரப் பாவனையால் எழக்கூடிய அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு தற்போது முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேயிலை உரத்தின் அடிப்படை தேவை நைதரசன் ஆகும். நாம் இந்த நிலையை கவனமாக அவதானித்து வருகின்றோம். சேதன உரப் பாவனை தொடர்பில் சில மாறுபட்ட கருத்துகள் நிலவினாலும், அதன் வினைத்திறனை தற்போது எதிர்வுகூர முடியாது என்றார்.

நாட்டின் தேயிலை உற்பத்தி முதல் அரையாண்டு காலப்பகுதியில் 31 மில்லியன் கிலோகிராம்களினால் அதிகரித்து 161.49 மில்லியன் கிலோகிராம்களாக பதிவாகியிருந்தது. நாட்டின் தேயிலை உற்பத்தி வரலாற்றில் பதிவாகிய மிகவும் உயர்ந்த பெறுமதியாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .