2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

புதிய மிருக நலன் சட்டத்தை கோரும் ஒடாரா மன்றம்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிருகங்களின் நலன் பேணும் புதிய சட்டங்களை அமுல் செய்யுமாறு அரசாங்கத்துக்கு அமுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை ஒடாரா மன்றம் தொடங்கவுள்ளது. இதற்கான பாரிய அளவிலான பொதுமக்கள் ஆதரவையும் அது திரட்டவுள்ளது. அக்டோபர் மாதம் நான்காம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள மிருக தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக ஒரு லட்சம் கையொப்ப்;பங்களைத் திரட்டும் பணிகளும் தொடங்கவுள்ளன.

இலங்கையின் மிகப் பழமையான 1906ம் ஆண்டின் மிருக வதை தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு  அதற்கு பதிலாக நவீன அம்சங்களுடன் கூடிய புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதே இந்தத் திட்டமாகும். இந்த சட்டம் தயாரான போதும் 2006ம் ஆண்டு முதல் அது இணைத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்த சட்டம் மீளாய்வு செய்யப்பட்டு புதிய அரசாங்கத்தால் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் எமது கோரிக்கை மகஜரில் ஆர்வமுள்ள பிரஜைகளும் இனி ஒப்பமிடலாம். www.otarafoundation.com என்ற எமது இணையத்தளத்துக்கு விஜயம் செய்தும் www.facebook.com/otaradel மற்றும் www.twitter.com/otaradel ஆகிய பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகளுக்கு விஜயம் செய்தும் இணைய வழியாக இதில் ஒப்பமிடலாம். 

இந்தக் கோரிக்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முகவரி இடப்பட்டுள்ளது. மிருக நலன் தொடர்பான புதிய சட்டத்தை மறு பரிசீலனை செய்தோ அல்லது புதிய வடிவத்திலோ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இரு தலைவர்களையும் கேட்டுக் கொள்ளும் வகையில் இந்த கோரிக்கை அமைந்துள்ளது. அப்போது தான் ஒரு நாடு என்ற வகையில் இலங்கையில் மிருகங்கள் மீது அன்றாடம் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடியதான சட்டங்கள் அமுலில் இருக்கும்.

'இன்று எமது மிருகங்கள் கட்டாக்காலிகளாக இருந்தாலும் சரி, அடைக்கப்பட்டு உள்ளவையாக இருந்தாலும் சரி, வீடுகளில் உள்ளவையாக இருந்தாலும் சரி அல்லது காடுகளில் இருப்பவையாக இருந்தாலும் சரி மனிதர்களால் அவை பல கஷ்டங்களை எதிர் நோக்குகின்றன. அவை தாக்கப்படுகின்றன, துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன, அடிக்கப்படுகின்றன, கல்லெறியப்படுகின்றன, வலைவிரிக்கப்படுகின்றன, கொல்லப்படுகின்றன. இவை அன்றாடம் இடம்பெறுகின்றன. எனவே திருத்தி அமைக்கப்பட்ட முன்னர் இல்லாதது போன்ற உறுதியான மிருக நலன் சட்டங்கள் மூலம் இவற்றை நிறுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது'என்று கூறினார் ஒடாரா குணவர்தன.

'இலங்கை ஒரு காருண்ய தேசமாகக் கருதப்படுகின்றது. இத்தகைய சட்டமூலம் ஒன்றை அமுல் செய்வதைத் தவிர மிருக நலனில் எமது அக்கறையை உலகுக்கு வெளிப்படுத்தக் கூடிய நல்லதோர் வாய்ப்பு கிடைக்காது. இதை செய்வதன் மூலம் எமது அடுத்த தலைமுறைக்காக எமது மிருகங்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய தலைமுறையாக நாங்கள் இருப்போம்'

எமது இணையத்தளத்துக்கு விஜயம் செய்கின்றவர்களுக்கு இந்த கோரிக்கை மகஜரின் சிங்கள பிரதி, மிருக நலன் சட்டத்தின் நகல் வரைவு, அதன் வரலாறு தொடர்பான தரவு அறிக்கை என்பனவற்றையும் பார்வையிடலாம்.

மிருக நல சட்டத்தின் நகல் வரைபு முன்னைய ஜனாதிபதிக்கு 2006ல் சமர்ப்பிக்கப்பட்டது. 2010ல் அதுரலியே ரதன தேரர் இதை தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆனால் அந்த ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டபோது இந்தப் பிரேரணையும் வலுவிழந்தது. அதைத் தொடர்ந்து இந்த மசோதா சம்பந்தமாக அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வர பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை எதுவும் பலனளிக்கவில்லை. பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 2015 மார்ச்சில் சமூக சேவைகள் நலன்புரி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஸன் இதை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பித்தார். அன்று முதல் அது கருத்தாடலுக்கு உட்பட்ட ஒரு விடயமாக இருந்து வருகின்றது.

ஒடாரா மன்றத்தின் பணியானது இலங்கையிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் நிலையான மாற்றங்கள் மற்றும் மாற்றங்களுக்கு ஊக்கியாகத் திகழ்வதோடு காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடல், அரிப்புக்கள் மூலம் மிருகங்களுக்கும் தாவர இனங்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை நீக்குதல், அவை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், நல்லாட்சி மற்றும் கொள்கை மாற்றம் என்பனவற்றுக்காகவும் ஒரு தூண்டுதல் சக்தியாக இருத்தல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X