Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
S.Sekar / 2021 ஜூன் 19 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச.சேகர்
இரசாயன உரப்பாவனை தடை தொடர்பில் எழக்கூடிய நீண்ட கால மற்றும் குறுங்கால பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்ட வண்ணமுள்ளனர், ஆனாலும், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்ட அரசும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவும், தாம் மேற்கொண்ட தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாகவும், இந்தத் தீர்மானத்தினால் எழக்கூடிய இழப்புகள் அல்லது பாதிப்புகள் குறித்து அக்கறை அற்றவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், 30 விஞ்ஞானிகளும் துறைசார் வல்லுநர்களும், இந்தத் தீர்மானத்தினால் எழக்கூடிய பாதிப்புகளைக் குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதில், இரசாயன உரப் பயன்பாடு நிறுத்தப்படுமானால் அதன் தாக்கம் ஒவ்வொரு பயிர்ச் செய்கையிலும், விளைச்சலிலும் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது பற்றிய விளக்கத்தை வழங்கியிருந்தனர். படிப்படியான இரசாயன உரப் பாவனையை நிறுத்துமாறும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அபிவிருத்தியடைந்த நாடுகளில், தொற்றுப் பரவலுக்கு முன்னர் எவ்வாறான முறையில் இந்த மாற்றத்தை எதிர்கொள்ளப்பட்டிருந்தது என்பது அவதானிக்கப்பட வேண்டியுள்ளது.
நாடு தற்போது தொற்றுப் பரவலுக்கு முகங்கொடுத்துள்ளது, சமூகத்திலிருந்து மிகவும் வேகமாகப் பரவும், அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய டெல்டா வகை தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமடையலாம் என்பதுடன், இவ்வாறான கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டில் பொருளாதார சிக்கல்கள் மேலும் மோசமடையும். இந்நிலையில், உணவுப் பஞ்சமும் ஏற்படுமாயின், அது பொது மக்களை பெரிதும் பாதித்துவிடும். குறிப்பாக, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தை தொடர்ந்து, நாட்டில் கடல் உணவுகளை உட்கொள்வதில் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் காணப்படுகின்றது. பெருமளவானோர் கடல் உணவுகளை தவிர்த்து வருவதை மீன் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரணமாக நான்கு முதல் ஐந்து பேர் வரை மிதி வண்டிகளிலும், மோட்டார் சைக்கிள்களிலும் மீன் விற்பனையில் ஈடுபடும் நிலையில் தற்போது ஒருவரை காண்பதும் அரிதாக உள்ளது. இந்நிலையில், மக்கள் தாவர உணவுகளில் அதிகளவு தங்கியுள்ளனர். குறிப்பாக மலைநாட்டு மரக்கறி வகைகள் அதிகளவு நுகரப்படுகின்றன. இந்நிலையில், இந்த இரசாயன உரப்பாவனைத் தடையினூடாக, மலைநாட்டு மரக்கறிகளின் விளைச்சல் 30 – 50 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என ஜனாதிபதிக்கு விஞ்ஞானிகள் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையர்கள் நுகரும் மற்றுமொரு பிரதான உணவு வகையாக உருளைக் கிழங்கை குறிப்பிடலாம். இதன் விளைச்சலும் 30 – 50 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான ஏற்றுமதி வருவாயீட்டும் துறைகளில் தேயிலை உற்பத்தியும் அடங்குகின்றது. தேயிலை உற்பத்திக்கு இரசாயன உரப்பாவனை அத்தியாவசியமானதாக அமைந்திருப்பதாக தேயிலைத் துறைசார் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். ஜனாதிபதிக்கு விஞ்ஞானிகள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இரசாயன உரப் பாவனை நிறுத்தப்படுவதால் தேயிலை விளைச்சல் 50% வரை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அந்நியச் செலாவணிக்காக போராடும் நாட்டின் பொருளாதாரம், தேயிலைத் துறை உற்பத்தி பாதிப்பினால் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து எழும் இழப்புகளை ஜுரணித்துக் கொள்ள முடியாது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு மற்றும் இதர விநியோகப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விலை அதிகரிப்புக்காக காத்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இவை பேரிடியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.
இந்நிலையில் விவசாயத்தில் தங்கியுள்ள மக்களுக்கு தமது விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியாத வகையில் இந்த இரசாயன உரப் பாவனைத் தடை அமைந்திருக்கும். தொற்றுப் பரவலுடனான இந்த நெருக்கடியான சூழலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படுவது சரியானதா?
அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் மீளச் சிந்திக்குமா? கடந்த காலங்களில் மக்களின் எதிர்பால் பல தீர்மானங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அண்மைய சிறந்த உதாரணம், ஒன்லைனில் மதுபானங்களை ஓடர் செய்து பெற்றுக் கொள்வது என்பதைக் குறிப்பிடலாம். தற்போதைய சூழலில், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பது, போதியளவு சேதன உரம் இறக்குமதி செய்யப்பட்டு கையிருப்பிலுள்ளது. உர இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சேதன நெல் விளைச்சலை உயர் விலையில் அரசு கொள்வனவு செய்யும் என்பதாக அமைந்துள்ளது.
எவ்வாறாயிலும், இந்த தீர்மானங்கள் மற்றும் முயற்சிகள் அனைத்திலும் பின்னடைவுகளையே காண முடிகின்றது. உதாரணமாக, உரத்துக்கு நிலவும் கேள்வி தற்போது இறக்குமதியினூடாக நிவர்த்தி செய்யப்படுகின்றது. உர விலைகள் பெருமளவில் அதிகரிக்கும் எனக் கருதி, சந்தையில் தட்டுப்பாடு நிலவுவது போன்றதொரு தோரணை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவலுடனான கட்டுப்பாடுகள் மற்றும் இதர வளங்களில் எழுந்துள்ள சவால்கள் காரணமாக, தேவையான கேள்வியை நிவர்த்தி செய்வதற்கு சேதன உரப் பாவனை உயர்த்தப்படுவது என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன.
உயர்ந்த விலையில் சேதன நெல்லைக் கொள்வனவு செய்யும் எனும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால், உயர் உற்பத்தி விலை என்பதால், உயர் சந்தை விலை என்பதை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. சந்தையில் ஏற்கனவே அரிசியின் விலை பெருமளவு அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் சம்பா அரிசி ஒரு கிலோகிராமின் சராசரி விலை ரூ. 120 ஆக காணப்பட்ட நிலையில், தற்போது ரூ. 155 முதல் ரூ. 160 வரை விற்கப்படுகின்றது. ஏப்ரல் மாத பண வீக்கம் 3.9% ஆக குறைந்திருந்தது. மார்ச் மாதத்தில் 4.1% ஆக காணப்பட்டது. உணவுகள் மீதான பண வீக்கம் என்பது 9% ஆக பதிவாகியிருந்தது. இது அந்தப் பெறுமதியில் சுமார் மூன்று மடங்காகும்.
இரசாயன உர பாவனையை குறுகிய காலப்பகுதியில் பெருமளவு குறைப்பதனால், விளைச்சல் பெருமளவு பாதிக்கும், தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி விலை அதிகரிப்புக்கு காரணமாக அமையும் என பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆயிரக் கணக்கான விவசாயிகளை கடன் நிலைக்கு தள்ளி, கிராமிய பொருளாதாரங்களை மோசமடையச் செய்யும். இலங்கையில் காணப்படும் விவசாயத்துறை ஏற்கனவே உற்பத்தித்திறன் குறைந்தாக காணப்படுவதுடன், மொத்தத் தேசிய உற்பத்தியில் 7% பங்களிப்பை மாத்திரமே வழங்குவதுடன், மொத்த பணியாளர்களில் 27% ஐ தன்வசம் கொண்டுள்ளது.
அரசாங்கத்துக்கு வாக்களிக்கும் சமூகத்தில் பிரதான அங்கமாக விவசாய சமூகமும் அடங்குகின்றது. எனவே, இந்தப் பிரச்சனை தொடர்பில் அவர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். துரதிர்ஷ்டவசமாக, தேர்தல் காலப்பகுதியில் மாத்திரம் இந்தச் சமூகத்தாரைப் பற்றி வாக்குறுதிகள் வழங்கப்படுவதுடன், தேர்தலின் பின்னர் அவை பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதில்லை.
எவ்வாறாயினும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் நிர்வாகத்தில் பிரதான கொள்கைகளில் ஒன்றாக சேதனச் செய்கைக்கு மாற்றம் பெறுவது என்பது அடங்கியிருந்தாலும், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற தேர்ந்தெடுத்த நாட்டின் சூழல் சரியானதா என்பதை அரசாங்கமும், ஜனாதிபதியும் மீளச் சிந்தித்து, இந்தத் தீர்மானம் தோல்வியை தழுவிய, தவறான தீர்மானமாக அமைந்துவிடாமல், பலனளிக்கும் வெற்றிகரமான முடிவாக, நீண்ட கால அடிப்படையில் படிப்படியாக மேற்கொள்ளவது சிறந்தது. அரசினால் அண்மைக் காலங்களில் பல தீர்மானங்களுக்கு U-திருப்பம் அடித்தது போல, இரசாயன உரம் தொடர்பிலும் ஒரு U-திருப்பம் வருமா?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
6 hours ago
6 hours ago