2025 மே 17, சனிக்கிழமை

முறைசாரா நிதிச் சேவைகளிலிருந்து மக்களுக்கு விடிவு காலம் கிடைக்குமா?

ச. சந்திரசேகர்   / 2020 ஜூன் 28 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இயங்கும் அனுமதி பெறாத லீசிங், நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து, அது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி, மூன்று நபர்களைக் கொண்ட குழுவொன்று, கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தது.   

இந்த ஆவணம் தயாரிக்கப்படும் பட்சத்தில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும். குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல்கள் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிக்கை பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படுமாயின், அதன் உள்ளடக்கங்கள், மக்களின் தீர்மானத்திலும் இந்தத் துறையின் எதிர்காலத்திலும் மிகவும் தீர்மானம்மிக்கவையாக அமைந்திருக்கும்.   

இலங்கையில், முறைசாராப் பொருளாதார நிலை, பரந்தளவில் காணப்படுகின்றது. இதற்குள் பெருமளவான மக்கள், தம்மை உள்வாங்கிக் கொண்டுள்ளனர். 

அனுமதி பெற்ற வங்கிகள், வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், நாட்டுக்குள் அளவுக்கு அதிகமாக இயங்குகின்ற போதிலும், முறைசாரா அல்லது பகுதியளவு மற்றும் முறைசார் பொருளாதாரத்தில் ஈடுபடும் நபர்கள், பெருமளவில் சிறியளவிலான ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட ஆர்வம் செலுத்துகின்றனர். 

இவர்களின் இந்தத் தெரிவுக்குப் பல காரணங்களைக் குறிப்பிட முடியும். குறைந்த வட்டிகள், இலகுவில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடிகின்றமை போன்றன உள்ளடங்குகின்றன. இந்த மூலங்களைப் பயன்படுத்தும் மக்கள், பெரும்பாலும் முறைசார் நிதிக் கட்டமைப்புகளின் ஊடாகத் தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியாதவர்களாக அமைந்திருப்பார்கள். இதன் காரணமாகவே, நுண்நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், மிக நீண்ட காலமாக ஒழுக்கமற்றதும்  மோசடியானதுமான செயற்பாடுகளைத் தொடர்கின்றமைக்கு வழிகோலியுள்ளன.   

துரதிர்ஷ்டவசமாக, கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டிய தெளிவற்ற பகுதிகள், பாரியளவிலான நிதி, பொருளாதார  ஒழுங்குபடுத்தல் பலவீனங்கள் காரணமாக மழுங்கடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, முறைசார் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமொன்றில், கடனைப் பெற்றுக் கொள்வது கடினமானதாகும். 

ஆனாலும், இலங்கையில் சேமிப்பு வட்டி வீதங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதால், மக்கள் பலர் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். முறைசார், அனுமதி பெற்ற நிறுவனங்கள், இவ்வாறான மக்கள் மத்தியில் செல்வதைத் தவிர்க்கின்றன. ஏனெனில், இவர்கள் உயர் இடர் நிலையைக் கொண்டவர்கள் என்பதால் ஆகும். நன்கு வியாபித்துள்ள நிறுவனங்கள், தம்வசம் உறுதியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதுடன், இவர்களுக்கு அப்பால் செல்வதற்கு, இந்நிறுவனங்கள் விரும்புவதில்லை.   

வறுமையான பின்னணியைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள், நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எதிர்பார்ப்பில் உள்ளடங்கி இருக்கமாட்டார்கள். இந்தப் பிரிவில் காணப்படும் ஏனைய குழுக்களுக்குப் போதியளவு தகவல்கள் கிடைக்காமை, பாகுபாடு, ஒப்பந்தங்களில் ஏற்படும் தாமதங்கள், தகவல் வழங்கப்படும் சூழல், தீர்வுகளில் காணப்படும் குறைபாடுகள் போன்ற காரணிகளால், சில வாடிக்கையாளர்களுக்குப் பொருத்தமற்றதாக அமைந்துவிடுகின்றது. 

உயர் பெறுமதிகளில், சனத்தொகையின் பெருமளவு பகுதி உள்வாங்கப்படவில்லையெனில், முறையாக வளர்ச்சியடையாத நிறுவனசார் உட்கட்டமைப்புகளுக்கு ஒழுங்குபடுத்தல் தடைகள்,  போதியளவு போட்டிகரத்தன்மை இன்மை போன்றன அமைந்துவிடுகின்றன.   

உலக பொருளாதார நெருக்கடியின் ஊடாக, முறையாக இனங்காணல், கண்காணிப்பு நியமங்கள் பின்பற்றப் -படாமையால் நுகர்வோருக்கும் நிதி உறுதிப்பாட்டுக்கும் பாரிய எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் உணர்த்தப் பட்டிருந்தது. 

எனவே, கடன் வழங்கலைப் பொறுத்தமட்டில், சந்தைச் சமத்துவமின்மையை நீக்கி, விநியோகத்தை அதிகரித்து, அவ்வாறான இடையீடுகளினூடாக நிதிசார் உள்ளடக்கத்தை ஊக்குவிக்க முடியும். உதாரணங்களாக, கொடுக்கல் வாங்கல் செலவீனங்களைக் குறைக்கும் புதிய கடன் வழங்கல் தொழில்நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட கடன் பெறுநர் அடையாளம் போன்றவற்றால், பொறுப்புக்கூறல் சமச்சீர்மையற்ற தகவல்கள் சார் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.   

தனிநபர்கள், குடும்பங்கள், முழுச் சமூகங்களும் கடன் எனும் வலையமைப்புக்குள்  சிக்கிப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கடன்பெற்றுக் கொண்ட நபர்கள், தம்மை இந்தக் கடன் நெருக்கடியிலிருந்து மீட்டுக் கொள்ளும் வரையில், நிதிசார் பாதுகாப்பற்ற தன்மைக்கு ஆழமாக உட்செல்வதுடன், அதனால் ஆபத்தான சமூகப்பொருளாதாரத் தாக்கங்களும் எழுகின்றன. 

குறிப்பாக, பெண்கள் இவ்வாறான கடன் பெறுகைகளால், அதிகளவு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதுடன், சமூக நடமாட்டத்துக்கான வாய்ப்பையும் அவர்களுக்குக் குறைத்துள்ளது.   

இலங்கையில் நீண்ட காலமாக நிலவும் பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய கொள்கைச் செயற்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முழுமையான, புத்தாக்கமான, நிலைபேறான தீர்வுகள் தேவைப்படுகின்றன. இந்த அடிப்படைக் கொள்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளாமல், எழுந்தமானமான தற்காலிகத் தீர்மானங்களின் காரணமாக, நீண்ட கால அடிப்படையில் பெருமளவு சேதங்களைத் தோற்றுவிக்கக்கூடும். 

இந்தப் பிரச்சினை தொடர்பில், முன்னைய அரசாங்கத்தால் சில கடன்களை மீளச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்த போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, வெளிப்படைத்தன்மையானதும் கலந்தாலோசிப்புடனானதுமான நடவடிக்கை தேவையாக அமைந்துள்ளது.  

குறிப்பாக, நாட்டின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நுண்நிதிச் சேவைகளைப் பெற்றுள்ளமையால் கடந்த காலங்களில் பெருமளவு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தமை தொடர்பில் அறிந்து கொள்ள முடிந்தது. இவர்களில் பலருக்கு தவறான அறிவுறுத்தல்கள் வழங்கியே, நுண் கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு தெளிவான அறிவித்தல்கள் வழங்கப்படாமல், அவர்களுக்கு வழங்கிய தொகையை மீள வட்டியுடன் சேர்த்து அறவிட முனையும் நுண்நிதிச் சேவை வழங்கும் அமைப்புகளின் அதிகாரிகள், குறித்த கடன்பெறுநர்களுடன் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டமை தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருந்தன.  

குறிப்பாக, கடன் பெற்றுக் கொண்ட பல பெண்கள், தற்கொலை செய்யும் நிலைக்குக்கூட முகங்கொடுத்திருந்தனர். இவ்வாறான விடயங்கள் தொடர்பில், இந்தப் பகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் அபேட்சகர்கள் கவனம் செலுத்தி, அவர்களுக்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்பதுடன், இந்த நுண்நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த முன்வர வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் பல எதிர்பார்ப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .