2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

யால மிருகங்களை பாதுகாக்க உதவ முன்வந்துள்ள ஒடெல்

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யால தேசிய வனவிலங்கு பூங்கா பகுதியில் பெறுமதி மிக்க பல வன விலங்குகளின் உயிர்கள் பலியாகி வருகின்றன. இந்த விடயத்தில் தனது பொறுப்பை உணர்ந்த ஒடெல் நிறுவனம் 'உயிர்களை மதிப்போம் - யாலவை பாதுகாப்போம்' என்ற தொனிப் பொருளில் உயர் மட்ட பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. இங்கு வருபவர்கள் மத்தியில் பொறுப்பான நடத்தையை ஊக்குவிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.வருகை தருபவர்கள் மத்தியில் பொறுப்பான நடத்தையை ஊக்குவித்து பெறுமதி மிக்க உயிர்களையும் அரிய தாவர இனங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்தப் பிரசாரத் திட்டம் அமையவுள்ளது.

இலங்கையின் முன்னணி நவநாகரிக சில்லறை வர்ததக முத்திரையான ஒடெல் இதற்கென ஐம்பதுக்கும் அதிகமான அறிவித்தல் பலகைகளை யால வனப்பிரதேசத்தில் வைக்கவுள்ளது. ஒரு இயற்கை வனப் பிரதேசத்துக்குள் நுழைபவர்கள் அங்கு எதை செய்ய முடியும் எதை செய்யக் கூடாது என்பன பற்றிய தகவல்களைத் தாங்கியதாக இந்த அறிவித்தல் பலகைகள் விருந்தினர்கள் நடமாடும் பிரதேசங்களில் வைக்கப்படவுள்ளன. இந்த முயற்சிக்கு விரிவான ஊடக பிரசாரமும் பெற்றுக் கொள்ளப்படும். இயற்கை வனப்பிரதேசங்கள் அதில் வாழும் உரிமை கொண்ட உயிரினங்கள் என்பனவற்றை பாதுகாப்பதில் மக்களுக்கு உள்ள பொறுப்பை விளக்கும் வகையில் ஊடக பிரசாரங்கள் இடம்பெறவுள்ளன.

2015 வனவிலங்கு தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள இந்த பிரசாரத் திட்டத்தில் தனது வாடிக்கையாளர்கள் பங்களிப்பு வழங்கவும் ஒடெல் வாய்ப்பினை வழங்கவுள்ளது. அதற்கென புதிய வகை ஆடைகள் அணிகலன்கள் மற்றும் காகிதாரிகள் என்பனவற்றை ஒடெல் அறிமுகம் செய்கின்றது. மேற்படி பிரசாரத் திட்டத்தோடு இவற்றை பிரத்தியேகமாக இணைக்கும் வகையில் 'Luv SL' என்ற முத்திரையின் கீழ் இவை அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த பொருள்களின் விற்பனைகளின் ஒரு பகுதி மேற்படி பிரசாரத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும்.

'யால பகுதிக்கு விஜயம் செய்யும் பொறுப்பற்ற, அஜாக்கிரதையான நபர்களிடம் இருந்து மிருகங்களைப் பாதுகாக்க வேண்டியது முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு அவசர விடயமாக உள்ளது' என்று கூறினார் ஒடெல் சில்லறை வர்த்தக செயற்பாடுகளுக்கு பொறுப்பாக உள்ள சொப்ட் லொஜிக் குழுமத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் டெஸிரி கருணாரட்ண. 'ஒடெல் அர்ப்பணத்துடன் செயற்படவுள்ள ஒரு பெரிய விசாலமான பிரிவின் ஒரு ஆரம்பம் தான் யால பகுதியாகும். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ள வனப் பிரதேசங்களுக்கும் சரணாலயங்களுக்கும் விஜயம் செய்கின்றவர்கள் மத்தியில் வனப் பிரதேசங்களின் முக்கியத்துவம் அவற்றில் வாழும் உயிரினங்களின் பெறுமதி என்பனவற்றை விளக்குவதற்கு ஒடெல் உறுதி பூண்டுள்ளது. நவநாகரிக சில்லறை விற்பனையில் நாட்டில் முன்னோடிகளாக இருக்கின்ற நாம் மக்கள் மத்தியில் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தி வனப்பிரதேசங்களுக்கு செல்பவர்கள் வனவிலங்கு திணைக்களத்தின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டல் என்பனவற்றை பின்பற்றச் செய்ய பங்களிப்புச் செய்ய முடியும் என நம்புகின்றோம். யால, வில்பத்து, மின்னேறியா, வஸ்கமவ, வீரவில, புந்தல என்பன இவற்றுள் குறிப்பிடக் கூடிய சில இடங்களாகும்' என்று அவர் மேலும் கூறினார்.

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்னாயக்க 'வனவிலங்கு பாதுகாப்புக்கு கை கொடுக்க ஒடெல் எடுத்துள்ள முயற்சியை நாம் பெரிதும் வரவேற்று பாராட்டுகின்றோம். எதிர்கால தலைமுறைக்காக எமது இயற்கை செல்வங்களை பாதுகாக்க எமது திணைக்களம் எடுத்து வருகின்ற  நடவடிக்கைகளுக்கும் அவர்கள் கைகொடுக்க முன்வந்துள்ளமை வரவேற்கத் தக்கதாகும். ஓடெல் போன்ற கூட்டாண்மை நிறுவனங்களின் இத்தகைய முயற்சிகள் ஏனையவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாகும். எமது தேசிய பூங்காக்களுக்கு விஜயம் செய்கின்றவர்கள் இந்த வழிகாட்டி அறிவித்தல்களைப் பின்பற்றி நடந்து எமது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் நம்புகின்றோம்' என்று கூறினார்.

யால வன பிரதேசம் வருகை தருபவர்களுக்காக மூடப்பட்டிருக்கும் செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 7 வரையான காலப் பகுதியில் 4’x4’ அளவு கொண்ட அறிவித்தல் பலகைகளை உரிய இடங்களில் ஒடெல் நிறுவும். உலகம் முழுவதும் அக்டோபர் நான்காம் திகதி வன விலங்குகள் தினம் அனுஷ்டிக்கப்படும் போது இந்தப் பணிகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். 'விலங்குகள் கடக்குமிடம். மெதுவாக ஓட்டுங்கள்' 'வாகனத்தில் இருந்து இறங்காதீர்கள்' 'விலங்குகளுக்கு உணவூட்டாதீர்கள்' 'புகைப்பிடிப்பதும் மதுவருந்துவதும் தடுக்கப்பட்டுள்ளது' 'தேகிய வனத்தில் குப்பை போடாதீர்கள்' 'ஹோர்ன் அடித்துத் தொந்தரவு செய்யாதீர்கள்' 'வேக எல்லை 25 கி.மீ' 'அனுமதியற்ற பிரவேசத்திற்குத் தடை' போன்ற வாசகங்களைக் கொண்டதாக இந்த அறிவித்தல்கள் அமைந்திருக்கும். பூங்காவுக்குள் வாகனங்கள் பிரவேசிக்கும் பகுதிகளின் இரு மருங்கிலும் இவை வைக்கப்பட்டிருக்கும். வருகை தருபவர்கள் தாங்கள் ஏதாவது வேண்டத்தகாத விடயங்களை அவதானித்தால் அது பற்றி அறிவிப்பதற்கான அவசர தொலைபேசி இலக்கமும் இந்த அறிவித்தலில் சேர்க்கப்பட்டிருக்கும்.

இந்தத் திட்டத்தோடு இணைந்ததாக அறிமுகம் செய்யப்படவுள்ள Luv SL தொகுப்புக்கள் 'உயிர்களை மதிப்போம் - யாலவை பாதுகாப்போம்' எனும் கருப்பொருளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டீஷேர்ட்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், துணிப் பைகள், தொப்பிகள், சாரம், கப்புகள், காந்தம், சாவி சங்கிலி, குறிப்பு புத்தகங்கள், புத்தக அடையாளங்கள், ஏனைய நினைவுப் பொருள்கள் என பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இருக்கும். ஒடெல்லின் Luv SL பிரசார கரும பீடங்களில் முன்னர் குறிப்பிட்ட சுலோகங்கள் அறிவித்தல்கள் என்பனவற்றை தாங்கிய படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இவற்றுக்கு மேலதிகமாக அலக்ஸாண்டிரா பிளேஸில் உள்ள ஒடெல்லின் பிரதான காட்சியக அட்ரியம் வரவேற்பு பிரிவு இந்த தொனிப் பொருளுடன் கூடிய மாற்றங்களுக்கு உட்படும். இங்கு எட்டு அடி நிர்மாணம் ஒன்று ஏற்படுத்தப்படும். கற்பாரை ஒன்றின் மேல் உள்ள ஒரு சிறுத்தையின் முப்பரிமாண காட்சியை அது கொண்டிருக்கும். உலக மிருக தின நிகழ்ச்சிகளுக்கான கம்பனியின் பங்களிப்பை பெருமையாக விளக்கும் வகையில் இது அமைந்திருக்கும்.  

இவற்றுக்கு மேலதிகமாக ஒடெல்லின் முக்கிய காட்சியகமான அலக்ஸாண்டிரா பிளேஸ் காட்சியத்தில் அட்ரியம் வரவேற்பு பகுதி கம்பனியின் உலக வனவிலங்கு தின பிரசாரத் திட்டத்தை பிரதி பலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

வன விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள யால வனப் பிரதேசம் ஒரு தேசிய பூங்காவையும் உள்ளடக்கியது. 1900 த்தில் இது வனவிலங்கு சரணாலயமாகவும் பின்னர் 1938ல் தேசிய பூங்காவாகவும் பிரகடனம் செய்யப்பட்டது. 44 வகையான முலையூட்டிகளும், 215 வகையான பறவை இனங்களும் இங்குள்ளன. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு தான் சிறுத்தைகளும் செறிவாகக் காணப்படுகின்றன. ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுன்ன இந்த வனப் பூங்கா 130000 ஹெக்டயர் பாதுகாக்கப்பட்ட பிரதசங்களையும் கொண்டுள்ளது. எளிய காடுகள், புதர்கள், புல்வெளிகள், குளங்கள் குட்டைகள் என்பன இதில் அடங்கும். யானைகள், கரடிகள், சம்பூர் மான்கள், ஓநாய்கள், மயில்கள், முதலைகள் என பல்வேறு வகையான உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன.

நவநாகரிக ஆடைகள் அணிகலன்கள் மற்றும் இதர பொருள்களுக்கு வீட்டுக்கு வீடு பரிச்சயமான ஒடெல் சொப்ட் லொஜிக் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இலங்கையில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் பன்முகத் தன்மை கொண்ட வர்த்தக சாம்ராஜ்ஜியமான சொப்ட் லொஜிக் சில்லறை வர்த்தகம், சுகாதார நலன்;, நிதிச் சேவை, தகவல் தொழில்நுட்பம், விடுமுறை, மோட்டார் வாகனம் என பல பிரிவுகளில் வர்த்தக முயற்சிகளைக் கொண்டுள்ள நிறுவனமாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X