Gavitha / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார வளர்ச்சியில் அதிகளவு வாய்ப்பைக் கொண்ட துறையாக விவசாயத் துறை அமைந்துள்ளது. இந்த வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கு அறிவூட்டல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றினூடாக, சிறியளவில் இயங்கும் விவசாயிகளின் உற்பத்தித்திறனையும் வருமானத்தையும் மேம்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இலங்கையில் உற்பத்தியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை தற்போது நிலவும் தொற்றுப் பரவல் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் இலங்கை தனது e-விவசாய தந்திரோபாயத்தை அறிமுகம் செய்திருந்ததுடன், விவசாயத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள், படிமுறைகள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை அறிமுகம் செய்வதில் இலங்கை அரசாங்கம் தன்னை உறுதியாக அர்ப்பணித்துள்ளது.
அண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் “விவசாயத்துறையை நவீன மயப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவி நிகழ்ச்சித்திட்டம்” (TAMAP) ஊடாக, “விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு e-விவசாயத்தில் சர்வதேச அனுபவம்” எனும் தலைப்பில் வெபினார் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனூடாக இந்தியாவின் விவசாயத் துறையில் டிஜிட்டல் நுட்பங்கள் மற்றும் சிறந்த செயன்முறைகள் போன்றவற்றினால் அந்நாட்டின் விவசாயிகளுக்கும், அந்நாட்டுக்கும் எவ்வாறு விவசாயத்துறை வளர்ச்சியை பதிவு செய்வதில் பங்களிப்பு வழங்கியிருந்தது என்பதை புரிந்து கொள்வது இலக்காக அமைந்திருந்தது.
இலங்கைக்காக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் நிகழ்ச்சி முகாமையாளர் சந்தன ஹேவாவசம் இந்த வெபினாரில் பங்கேற்றவர்களை வரவேற்றுக் குறிப்பிடுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் TAMAP ஊடாக, இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான e-விவசாயம் அடங்கலாக தொழில்நுட்ப உதவிகள் பலவற்றை வழங்கப்படுகின்றது என்றார்.
இந்த கருத்தரங்களின் வளவாளராக செயலாற்றிய TAMAP இன் e-விவசாய நிபுணர் பந்துல நிஸ்சங்க குறிப்பிடுகையில், இந்தியாவின் விவசாய தந்திரோபாயத்தின் சில உள்ளம்சங்களினூடாக விவசாய வருமானத்தை அதிகரித்துக் கொள்வதில் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். உதாரணமாக, இந்தியாவின் மரபணுவியல் திட்டமான ஆதார் ஊடாக, நலன்புரிக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, சிறியளவில் இயங்கும் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் டிஜிட்டல் விவசாயத்துக்கு பொருத்தமான மாறுபட்ட கட்டமைப்பு, கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் இடையீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவ்வாறான இடையீடுகளினூடாக இலங்கை எவ்வாறு பயன்பெறலாம் என்பது தொடர்பில் புரிந்து கொள்ளலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது.
இந்த வெபினார் கருத்தரங்களின் விருந்தினர் பேச்சாளராக இந்தியாவின் விவசாயத் திணைக்களத்தின் National Rainfed Area Authority (NRAA) பிரதம நிறைவேற்று அதிகாரியும், இந்தியாவின் பிணையங்கள் பரிவர்த்தனை சபையின் (SEBI) Commodities Derivative Advisory Committee (CDAC) இன் தவிசாளருமான கலாநிதி. அசோக் தல்வாய் கலந்து கொண்டார். e-விவசாயத்தில் கவனம் செலுத்தி, கிராமிய விவசாயத் துறையில் மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதில் தல்வாயின் அறிவு, நன்மதிப்பு மற்றும் அனுபவம் போன்றன இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அவரை மிகவும் பொருத்தமான அங்கத்தவராக வெளிப்படுத்தியிருந்தது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே காணப்படும் விவசாயத்துறைசார் ஒற்றுமைகள் தொடர்பில் கலாநிதி தல்வாய் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை மற்றும் இந்தியா இடையே நான் பல ஒற்றுமைகளைக் காண்கின்றேன். குறிப்பாக, இந்தத் துறையில் தங்கியிருக்கும் மக்கள் தொடர்பில் பெருமளவு ஒற்றுமைகள் காணப்படுகின்றன. உங்களின் விவசாயக் கொள்கையை நான் பார்வையிட்ட போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சவால்கள் மற்றும் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டால், நாம் அனைவரும் ஒரே மாதிரியான பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதைப் பற்றி கவனம் செலுத்துகின்றோம். விவசாயத்தினூடாக உணவு பாதுகாப்பு ஏற்படுத்துப்படுவது மாத்திரமன்றி, விவசாயிகளுக்கு இலாபமீட்டக்கூடிய வாய்ப்புகளை எம்மால் எவ்வாறு உறுதி செய்ய முடியும்? எமது விவசாயக் கட்டமைப்பை மீளமைப்பு செய்வதனூடாக, அனுகூலமான தொழில் வாய்ப்புகள் மற்றும் இலாபமீட்டக்கூடிய வருமானங்களை ஏற்படுத்துவதனூடாக, சாதாரண தொழில் என்பதற்கு மாறாக அவர்களை விவசாயத்தில் நிபுணத்துவமானவர்களாக நிலைத்திருக்கச் செய்ய முடியும்.” என்றார்.
கலாநிதி. தல்வாய் மேலும் குறிப்பிடுகையில், விவசாயத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை பிரயோகித்து, அதன் வினைத்திறன் மற்றும் ஆற்றலை மேம்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்பது தொடர்பில் விளக்கமளித்திருந்ததுடன், சிறு விவசாயிகளை வியாபாரங்களாக கட்டியெழுப்ப இவ்வாறான நடவடிக்கைகள் உதவியாக அமைந்திருப்பதுடன், விவசாயசார் தொழில் முயற்சியாளர்களாக மாற்றம் பெற இவை உதவியாக அமைந்திருக்கும் என்பதையும் குறிப்பிட்டார். “டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் எம்மால் விவசாய பெறுமதிக் கட்டமைப்பில் காணப்படும் சவால்களை உடனுக்குடன் சென்றடைந்து அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.” என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கை அதன் e-விவசாயக் கொள்கையில் காணப்படும் சகல அம்சங்களையும் செயற்படுத்தினால், நாட்டின் விவசாயத்துறையில் ஆற்றலை வெளிப்படுத்தி பெருமளவு முன்னேற்றத்தை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும்.” என மேலும் குறிப்பிட்டார்.
இலத்திரனியல் முறைமையின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் விவசாய செயற்பாடுகள் தொடர்பில் இந்தியா கொண்டுள்ள அனுபவம் பற்றி அவர் மேலும் விவரிக்கையில், நுகர்வோர் நிலையங்களுக்கு பண்ணை படலைகளை இணைப்பதில் டிஜிட்டல் சாதனங்கள் தொடர்பான அறிவை இந்தியா எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்பது தொடர்பில் அவர் விவரித்திருந்தார். 15 வருடங்களுக்கு முன்னதாக இந்தியா அதன் தேசிய விவசாய கொள்கையை பின்பற்றியிருந்தது, தேசிய விவசாய கட்டமைப்புகளில் டிஜிட்டல் இலத்திரனியல் கட்டமைப்புகளை உள்வாங்குவதில் ஒன்பது தூண்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன. “விவசாயத்துக்காக மாத்திரமன்றி, தேசத்தின் சமூக மற்றும் பொருளாதார பிரிவுகளுக்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பின்பற்றுவதில் இந்தியா தன்னை அர்ப்பணித்துள்ளது.” என அவர் மேலும் விவரித்தார்.
இது வரையில், இந்தியாவில் எழுபதுக்கும் அதிகமான சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அடிப்படை விவசாய உற்பத்திகளை உறுதி செய்ய முடிந்துள்ளது. இதில் தொடர்ச்சியாக மெருகேற்றப்பட்டு கிடைக்கும் தகவல்கள் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளன. “சகலரும் அணுகக்கூடிய ஒரே தகவல் மற்றும் தரவுகள் என்பது எமக்கு அவசியமாகின்றது.” என கலாநிதி. தல்வாய் மேலும் குறிப்பிட்டார்.
பன்முகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்பு கட்டமைப்புகளின் முக்கியத்துவம் பற்றி அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி நாம் கவனம் செலுத்தும் போது, அர்த்தமுள்ள வகையில் நாம் பெருமளவு தொழில்நுட்பங்களை ஒன்றிணைக்க வேண்டும். அடிப்படை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திலிருந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பமான Internet of Things போன்றவற்றுக்கு மாற வேண்டியுள்ளது.” என்றார். வானிலை மற்றும் காலநிலை எதிர்வுகூறலுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் ஸ்பேஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விளைச்சல்களை மதிப்பிடுவது போன்ற உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். “விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதனூடாக பண்ணை உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதுடன், புதிய சந்தைகளை தொடர்ச்சியாக உருவாக்கவும் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.
இந்தியாவின் ஒன்லைன் வியாபார கட்டமைப்பான eNAM (electronic National Agriculture Market) என்பதை கலாநிதி. தல்வாய் அறிமுகம் செய்திருந்தார். இது திறந்த வரைவுக்கட்டமைப்பினூடாக தேசிய மட்டத்தில் இயங்குகின்றது. தேசிய விவசாய சந்தை என்பது இதர கட்டமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயலாற்ற முடிந்துள்ளது. Indian Direct Trade Act ஐ இவர் அறிமுகம் செய்திருந்ததுடன், கட்டமைப்புகள் அடிப்படை வியாபார நியமங்களுக்கு உட்படுவதை உறுதி செய்யும் வகையில் இவை அமைந்துள்ளன. இந்த அனைத்து கட்டமைப்புகளின் காரணமாக, “இந்தியா ஒரே தேசம் மற்றும் ஒரு சந்தைப்பகுதியாக அமைந்துள்ளது.” எனக் குறிப்பிட்டார்.
Blockchain தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் கலாநிதி. தல்வாய் குறிப்பிட்டிருந்தார். விவசாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் முன்னோக்கிய நகர்வுக்கு இது முக்கியமானது என்பதில் இவர் நம்பிக்கை கொண்டுள்ளார். “தொழில்நுட்பத்தில் தேசிய நியமங்களை நாம் தற்போது வரையறுக்கின்றோம், அனைவரையும் பின்பற்றுவதற்கு இது வழிகோலுவதாக அமைந்துள்ளது.” என்றார்.
இந்தியாவின் அனைத்து வதிவாளர்களும் பின்பற்றும் ஆதார் எனும் 12 இலக்கமிடல் திட்டம் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், “சுமார் 120 மில்லியன் விவசாயிகள் இதர குடிமக்களைப் போன்று பிரத்தியேகமான அடையாள இலக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆதாரைப் பயன்படுத்தி, சகல நில, மண் வளம் மற்றும் பயிர்ச்செய்கை தொடர்பான தரவுகள் ஒரு தனிக் கட்டமைப்பில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் மொபைல், வங்கி மற்றும் பிரத்தியேகமான அடையாள இலக்கங்கள் போன்றன ஒரு மையப்படுத்தப்பட்ட பகுதியில் பேணப்படுகின்றமையினூடாக, விவசாயிகளுக்கு நிவாரணங்கள் மற்றும் கிடைக்க வேண்டிய சலுகைகள் போன்றன முறையாக கிடைப்பதை உறுதி செய்கின்றது. இலத்திரனியல் மற்றும் நிதி அறிவை வழங்குவது, டிஜிட்டல் கட்டமைப்புகளை வலிமைப்படுத்துவது, இணைந்து இயங்கும் நிலையை ஒன்றிணைப்பது மற்றும் உடனடித் தரவுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய தன்மை போன்றன விவசாயிகளை விவசாய பெறுமதிக் கட்டமைப்பில் அங்கமாக இணைப்பதற்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இணைப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கும் என்பதில் கலாநிதி. தல்வாய் நம்பிக்கை கொண்டுள்ளார்.
விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி. அஜந்த டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இது போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்து, இந்தியாவில் பின்பற்றப்படும் நவீன முறைகள் தொடர்பான அறிவை எம்முடன் பகிர்ந்து கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக TAMAP க்கு நன்றி தெரிவிக்கின்றேன். இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவல் இடர் காணப்படும் நிலையில், உள்நாட்டு உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிகளவு கவனம் செலுத்துகின்றதுடன், மிருதுவான விவசாய உற்பத்திக்கு அவசியமான உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்து செயலாற்றுகின்றது. e-விவசாயம் தொடர்பான சகல உதவிகளையும் இலங்கை அரசாங்கம் வழங்குவதுடன், e-விவசாய கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விவசாய அமைச்சு வலியுறுத்தியுள்ளது.” என்றார்.
கலாநிதி. அஜந்த மேலும் குறிப்பிடுகையில், “அரச மற்றும் தனியார் துறைகளினால் பல்வேறு e-விவசாயத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் இவை வெவ்வேறு நிலைகளில் பரந்து காணப்படுகின்றன. இந்தியாவினால் அந்நாட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்க முடிந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு விசேட இடம் கிடைத்துள்ளதுடன், தடங்கல்களில்லாத விநியோக சங்கிலிகளை பேண முடிந்துள்ளது. இந்தியாவிலிருந்து எம்மால் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.
கல்வி, விஞ்ஞானம் மற்றும் சிவில் சமூகம் போன்ற துறைகளைச் சேர்ந்த பலர் இந்த வெபினாரில் கலந்து கொண்டு, இந்திய விவசாயத்தில் தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பது தொடர்பில் அறிந்து கொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து TAMAP இன் திட்ட முகாமையாளர் பார்ட் புரோவூஸ்ட் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த வெபினார் நிகழ்வுக்கு கிடைத்திருந்த வரவேற்பினூடாக, இலங்கையில் விவசாயத்துறையைச் சேர்ந்தவர்கள் பெருமளவானோர் e-விவசாயம் தொடர்பில் அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளனர் என நான் கருதுகின்றேன். டிஜிட்டல் தொழில்நுட்பம் அடங்கலாக துறையின் நவீன மயப்படுத்தலுக்கு அவசியமான புத்தாக்கங்களுக்கு உதவிகளை வழங்குவது TAMAP இன் தன்னேற்புத்திட்டத்தின் அங்கமாக அமைந்துள்ளது. தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
10 minute ago
15 minute ago
26 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
26 minute ago
39 minute ago