.jpg)
சவால்மிக்க வெளிப்புற சூழலுக்கு மத்தியிலும் செலான் வங்கியானது, 2013 ஜூன் 30 திகதியன்று முடிவடைந்த 6 மாத காலப்பகுதியில் வருமான வரிக்கு முன்னரான இலாபமாக ரூபா 1,483 மில்லியனை பெற்றுக் கொண்டதன் மூலம் மற்றுமொரு மனதில் பதியத்தக்க நிதிச் செயற்பாடுகளை நிலைநாட்டியுள்ளது. இந்த முதலாம் அரையாண்டில் வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 1,002 மில்லியனை எட்டியுள்ளதுடன், 2012இன் தொடர்புபட்ட முதல் ஆறு மாதங்களிலும் பெறப்பட்ட ரூபா 960 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 4.32% அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளது. LKAS / SLFRS விதிமுறைகளுக்கு அமைவாக இடைக்கால நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தங்கத்தின் விலைகளில் ஏற்பட்ட கடுமையானதும் நிலையானதுமான வீழ்ச்சியின் விளைவாக, அடகு பிடித்தல் சேவைத் தளத்தில் தாக்கம் ஏற்பட்டதுடன், கடன்பெறுவதில் மந்தநிலை காணப்பட்டது. அதேநேரம் வட்டிவீத எல்லைகள் மீதான அழுத்தம் துறை வாரியாக காணப்பட்டது மட்டுமன்றி, இதனால் 2013 ஜூன் 30இல் முடிவடைந்த 6 மாதங்களுக்கான தேறிய வட்டி வருமானமானது ரூபா 4.33 பில்லியனாக 3% இனால் வீழ்ச்சியடைந்தது. எவ்வாறிருந்த போதிலும், மேற்படி நிலைமையை ஓரளவுக்கு எதிரீடு செய்யக்கூடிய விதத்தில் கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் ரூபா 763 மில்லியனில் இருந்து ரூபா 973 மில்லியனாக 28% இனால் அதிகரித்தது. வணிக நிதியியல் சேவை மற்றும் கட்டண வருமானம் உழைத்துத் தருகின்ற உற்பத்திகள் மற்றும் சேவைகள் மீது செலான் வங்கி அதிக கவனத்தை செலுத்திச் செயற்பட்டமையால் இவ் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 6 மாத காலத்தில் செலவு (கிரய) கட்டுப்படுத்தல் விடயத்திலும் வங்கி குறிப்பிடத்தக்களவுக்கு அதீத கவனமெடுத்துச் தொழிற்பட்டது. செயற்றிறன்மிக்க கட்டுப்படுத்தல் முன்னெடுப்புக்களின் பயனாக, 2013இன் 1ஆவது அரையாண்டு காலப்பகுதியில் தனிப்பட்ட மற்றும் மேந்தலை செலவுகள் வெறுமனே 3.4% என்ற குறைந்த அதிகரிப்புடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் வைப்புத் தளமானது ரூபா 146.7 பில்லியனில் இருந்து ரூபா 155.6 பில்லியனாக வளர்ச்சி கண்டது. தேறிய முற்பணத் தொடர் ரூபா 124.7 பில்லியனில் இருந்து, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 6 மாதங்களிலும் ரூபா 130.5 பில்லியனாக வளர்ச்சியடைந்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டிருந்ததை விடவும் குறைந்த கடன் கேள்வி மற்றும் தங்கத்தின் விலை வீழ்ச்சியால் அடகுபிடித்தல் தொடர்பான செயற்பாடுகளில் ஏற்பட்ட பாதகமான தாக்கம் ஆகியவற்றுக்கு மத்தியிலேயே வங்கி இப் பெறுபேறுகளை பெற்றுக் கொண்டுள்ளது.
செலான் வங்கி முன்னெடுத்த செயற்றிறன் வாய்ந்த மீளப்பெறல் மற்றும் புனரமைப்பு முயற்சிகளின் ஊடாக தனது சொத்து தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு வங்கியால் முடியுமாக இருந்தது. இது, வங்கியானது தனது மொத்த செயற்படா சொத்துக்களை (இடைநிறுத்தப்பட்ட வட்டிகளின் தொகை நீங்கலாக) 2012 டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட 12.99% இலிருந்து 2013 ஜூன் மாத இறுதியில் 11.15% ஆக குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைத்துக் கொள்ள வழிவகுத்தது.
எதிர்கால வளர்ச்சிக்காக தயாராகும் பொருட்டு, 'மைய வங்கியியல் முறைமை தரமேம்படுத்தல்' நடவடிக்கை ஒன்றினையும் 2013 பெப்ரவரி மாதத்தில் வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. எதிர்வரும் வருடங்களில் செயன்முறை மேம்படுத்தல்களின் ஊடாக வங்கிக்கு குறிப்பிடத்தக்க செலவுச் செயற்றிறன்களை இது கொண்டுவரும். இந்தத் தரமேம்படுத்தலானது, வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த உற்பத்தி மற்றும் சேவை வழங்கலை மேற்கொள்வதற்கு வழிவகுக்கக் கூடிய பல்;வேறு மேலதிக செயற்பாடுகளுக்கும் வசதி அளிப்பதாக அமையும்.
செலான் வங்கியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு. நிஹால் ஜயமன்ன கூறுகையில், '2013 இன் முதல் அரையாண்டு காலப்பகுதியில் வரிக்குப் பின்னரான இலாபத்தில் வளர்ச்சியை பதிவு செய்ததன் மூலம் மற்றுமொரு உறுதியான நிதிப் பெறுபேறுகளை வங்கி வெளிப்படுத்தியுள்ளது. நிலைபேறான வளர்ச்சியை வங்கி அடைந்து கொள்வதற்கு எமக்கு மிகச் சிறந்த அடித்தளம் ஒன்றை இந்தப் பெறுபேறுகள் அளிக்கின்றது' என்றார்.
2013 ஜூன் 30ஆம் திகதியன்று இருந்தபடி செலான் வங்கியின் சேவை வலைப்பின்னல், 149 கிளைகளையும் 156 ATM மையங்களையும் 78 மாணவர் சேமிப்பு நிலையங்களையும் உள்ளடக்கியுள்ளது.
வழங்கல் ஆரம்பித்த தினத்திலேயே மிகையாக கோரப்பட்ட ரூபா 2 பில்லியன் பெறுமதியான வெற்றிகரமான தொகுதிக்கடன் பத்திர வழங்கலைத் தொடர்ந்து, செலான் வங்கியின் 'மூலதன போதுமானதன்மை வீதம்' ஆனது 2013இன் 2ஆம் காலாண்டு இறுதியில் 15.24% ஆக முன்னேற்றம் கண்டது. உள்நாட்டு வங்கியியல் துறையில் மிகவுயர்ந்த மூலதன போதுமானதன்மை வீதங்களுள் ஒன்றாக இது திகழ்கின்றது.
செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. கபில ஆரியரத்ன கூறுகையில், 'தூரநோக்குடனான உபாயங்கள் மற்றும் தொடர்ச்சியான சேவை மேம்படுத்தலை மேற்கொள்வதில் கடைப்பிடித்துவரும் அர்ப்பணிப்பு ஆகியவையே, சவால்மிக்க வெளிப்புறச் சூழல் ஒன்றுக்கு மத்தியிலும் எம்முடைய வளர்ச்சிப் போக்கினை பேணிக் கொள்வதை சாத்தியமாக்கியுள்ளன. எமது விசுவாசமிக்க வாடிக்கையாளர்கள் இப்போது எம்மிடமிருந்து எதிர்பார்க்கும் உயர்ந்த மட்டத்திலான பிரத்தியேகமாக்கப்பட்ட மற்றும் நட்புறவான சேவைகளை அவர்களுக்கு வழங்குவதற்காகவும் அதேபோன்று எம்முடனான பெறுமதிமிக்க ஒன்றிணைவுக்காக எமது பங்குதாரர்களுக்கும் அதிகரித்த வெகுமதிகளை வழங்கும் வகையிலும், வங்கியின் எதிர்கால வளர்ச்சி உபாயங்களின் அடிப்படையிலான அடையாளம் காணப்பட்ட முக்கிய துறைகளில் நாம் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவற்றுள் - புதிய உற்பத்தி உருவாக்கம், கிளை வலையமைப்பு விஸ்தரிப்பு, சேவைத் தரமேம்படுத்தல், நிறுவன ஊழியர் பயிற்சி மற்றும் அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பம்சார் உட்கட்டமைப்பு மேம்படுத்தல் போன்றனவும் உள்ளடங்குகின்றன' என்று தெரிவித்தார்.
2013 இன் 1ஆவது அரையாண்டில் செலான் வங்கி பதிவு செய்துள்ள மனதில் பதியத்தக்க நிதிச் செயற்பாடுகளின் பலனாக, பங்கு ஒன்றின் மீதான உழைப்பு ரூபா 2.93 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை சொத்துக்கள் மீதான பங்கிலாபம் (வரிக்கு முன்னரான இலாபம்) மற்றும் உரிமைப் பங்குகளின் முதலீடு மீதான பங்கிலாபம் போன்றன முறையே 1.53% ஆகவும் 10.36% வீதமாகவும் உயர்ந்த மட்டத்தில் உள்ளன.