2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸின் 2ஆம் காலாண்டில் வரிக்குப்பிந்திய நிகர இலாபம் 402 மில்லியன் ரூபாய்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013/14 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 14.9 பில்லியன் ரூபாவை வருமானமாக பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த பெறுமதி 12.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் 18 வீத வளர்ச்சியை எய்தியுள்ளது. குழுமத்தின் வரிக்குப்பிந்திய நிகர இலாபம் 402 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், பங்குதாரர்களுக்கான நிகர இலாபம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் வழங்கப்பட்ட தொகையான 289 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 342 மில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனிஃவ் யூசுஃவ் கருத்து தெரிவிக்கையில், 'இரண்டாம் காலாண்டில் பதிவாகியுள்ள நிதி பெறுபேறுகளின் மூலம் கப்பற் சரக்கு துறையில் இந்திய உபகண்டத்தில் சரிவான நடவடிக்கைகள் பதிவாகிய போதும், புதிய சந்தைகளில் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் நிலையான செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தளம்பல்களை கொண்ட சந்தை சூழ்நிலைகளிலும் குழுமத்துக்கு உயர்ந்த இலாப பெறுமதிகளை பதிவு செய்ய முடிந்துள்ளது. கப்பற் சரக்கு துறையில் புதிய சந்தை வாய்ப்புகளை எய்துவதும், ஏனைய துறைகளில் முன்னெடுக்கும் வர்த்தகங்களில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்துவதும் எமது நோக்கமாக அமைந்துள்ளது' என்றார்.
 
குழுமத்தின் பிரதான துறையான, கப்பற்சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளல் துறை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சீரான ஆரோக்கியமான வருமானத்தையும் இலாபத்தையும் பதிவு செய்துள்ளது. இலாபத்தில் பெருமளவு பங்களிப்பு அதிகரித்த அளவுகளின் மூலம் பெறப்பட்டிருந்தது. ஹொங் கொங், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட புதிய வர்த்தக முயற்சிகளின் மூலம் வருமானம் திரட்டப்பட்டிருந்தது. பிரதான சந்தைகளிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட உயர்வான வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய பிராந்தியங்களிலிருந்து குறிப்பிடத்தக்களவு நேர்த்தியான பங்களிப்பு கிடைத்திருந்தமை அவதானிக்க முடிந்தது.
 
பயணங்கள் மற்றும் விடுமுறை வசதிகள் ஒழுங்குபடுத்தல் துறையானது உயர் வருமான அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் 823 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த இந்த தொகை, நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1313 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. ஆனாலும் வளர்ச்சியடையும் சந்தைகளில் அதிகரித்துச் செல்லும் செலவீனங்களின் காரணமாக இலாபம் 77 மில்லியன் ரூபாவிலிருந்து 61 மில்லியன் ரூபாவாக குறைவடைந்திருந்தது. மேலும் எல்லை முகாமைத்துவ செயற்பாடுகளில் போட்டிகரமான வெளிக்கள வியாபாரங்கள் இலாபத்தை நலிவடையச் செய்திருந்தன. ஆயினும் கடந்த காலாண்டு பகுதியில் இந்த துறை நேர்த்தியான போக்கில் அமைந்திருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 21 மில்லியன் ரூபாவை இலாபமாக பதிவு செய்திருந்த இந்த துறை, இரண்டாவது காலாண்டில் 40 மில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தது. 
 
சர்வதேச வியாபாரம் மற்றும் உற்பத்தித்துறை வருமானம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 6 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. நடப்பு ஆண்டில் இந்த பெறுமதி 8.3 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு, இலகுவில் பழுதடையும் பொருட்கள், தேயிலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு பிரதான காரணியாக அமைந்திருந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் தளம்பல்கள் ஏற்பட்டதன் காரணமாக எல்லைகளை நிர்வகிப்பதில் இந்த துறை சவால்களை எதிர்நோக்கியிருந்தது. முதல் ஆறு மாத காலப்பகுதிக்கான துறை இலாபம் கடந்த ஆண்டில் பதிவாகியிருந்த 83 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 86 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யூசுஃவ் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'எக்ஸ்போலங்கா கொமோடிட்டீஸ் மற்றும் லங்கா ப்ரீமியர் ஃபூட்ஸ் ஆகிய நிறுவனங்களிலிருந்து நாம் வெளியேற காரணமாக, இவை இரண்டும் வருமானமீட்டுவதில் அதிக மாறும் தன்மையை கொண்டிருந்தமையால், எமது கொள்கை மீளாய்வு செயற்பாட்டின் மூலம் தீர்மானம் மேற்கொண்டிருந்தோம். இந்த தீர்மானத்தின் மூலம், குழுமத்துக்கு அதிகளவு மூலதனத்தை விடுவித்து, இந்த துறையில் வருமானத்தில் அதிக மாறும் தன்மையை குறைப்பதாகவும் அமைந்திருக்கும். இந்த கொள்கை ரீதியிலான செயற்பாடானாது எமது பிரதான வர்த்தகத்தில் நாம் அதிகளவு கவனத்தை செலுத்த ஏதுவாக அமைந்திருக்கும். நாம் குழுமத்தின் இலாபத்தன்மையை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், ஏற்கனவே அமுலில் இருக்கும் வியாபாரங்களில் ஆதிக்கத்தை செலுத்தி, சிக்கனத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .