.jpg)
-ச.சேகர்
திங்கட்கிழமை
திங்கட்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது பிரதான சுட்டி 21.68 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 6130.24 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. அதுபோன்று மிலங்க விலைச்சுட்டெண் 18.71 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 3451.45 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. தினசரி மொத்தபுரள்வு பெறுமதியாக 373 மில்லியன் பதிவாகியிருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (67 மில்லியன்), ஹற்றன் நஷனல் வங்கி (60மில்லியன்), நெஸ்லே (29மி்ல்லியன்) போன்றன பங்களிப்பை வழங்கியிருந்தன. அதிகளவு வியாபாரமான பங்குகளாக டெக்ஸ்சர்ட் ஜேர்சி, நேஷன் லங்கா ஃபினான்ஸ் மற்றும் சணச அபிவிருத்தி வங்கி போன்றன காணப்பட்டன. மொத்த வெளிநாட்டு பங்களிப்பு 33 வீதமாக அமைந்திருந்தது.
செவ்வாய்க்கிழமை
செவ்வாய்க்கிழமை பங்குப் பெறுமதிகள் உயர்வாக நிறைவடைந்திருந்தன. லங்கா ஐஓசி, டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி, அக்சஸ் என்ஜினயரிங் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு விற்பனையாகியிருந்தன. சந்தை புரள்வு பெறுமதி 403 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 100 மில்லியன், அக்சஸ் என்ஜினியரிங் 63 மில்லியன் மற்றும் லயன் பிரெவரி 31 மில்லியன் ரூபா பங்களிப்பை வழங்கியிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 25 வீதமாக சந்தையில் பதிவாகியிருந்தது.
புதன்கிழமை
புதன்கிழமை கொடுக்கல் வாங்கல்கள் நேர் பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. இதில் நெஸ்லே லங்கா, சிலோன் டொபாக்கோ மற்றும் கார்சன் கம்பபெட்ச் போன்றன உயர்வான பங்கு பெறுமதிகளை பதிவுசெய்திருந்தன. சந்தை புரள்வு பெறுமதியாக 1.9 பில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. இதில் ஹற்றன் நஷனல் வங்கியின் வாக்குரிமையற்ற பங்குகள் 704 மில்லியன், எயிட்கன் ஸ்பென்ஸ் 369 மில்லியன் மற்றும் சம்பத் வங்கி 356 மில்லியன் ஆகிய பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. பிசி ஹோல்டிங்ஸ், டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி மற்றும் எக்ஸ்போலங்கா போன்ற நிறுவனங்கள் அதிகளவு விற்பனையாகிய பங்குகளாக பதிவாகியிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 57 வீதமாக பதிவாகியிருந்தது.
வியாழக்கிழமை
வியாழக்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது சந்தை தொடர்ந்தும் உயர்வான பெறுமதியை பதிவு செய்திருந்தது. மொத்த சந்தை புரள்வு பெறுமதி 647 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இதில் ஹற்றன் நஷனல் வங்கி 156 மில்லியன் ரூபாவையும், சம்பத் வங்கி 64 மில்லியன் ரூபாவையும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 56 மில்லியன் ரூபாவையும் பதிவு செய்திருந்தன. பீசி ஹவுஸ், நேஷன் லங்கா ஃபினான்ஸ் மற்றும் சிலோன் டொபாக்கோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் கைமாறியிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 37 வீதமாக அமைந்திருந்தது.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை கொடுக்கல் வாங்கல்கள் கலப்பான பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. பெருமளவான முன்னணி நிறுவனங்களின் பங்குபெறுமதிகள் மறைவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. மொத்த சந்தை புரள்வு பெறுமதியாக 596 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 204 மில்லியன் ரூபாவையும், நெஸ்லே லங்கா 106 மில்லியன் ரூபாவையும் வலிபல் வன் 36 மில்லியன் ரூபாவையும் பதிவுசெய்திருந்தன.
கடந்த வாரம் முழுவதும் பெருமளவான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு நிதியறிக்கைகள் வெளியானதை தொடர்ந்து, குறித்த நிறுவனங்களின் பெறுபேறுகள் சந்தையின் செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது. கொழும்பு பங்குச்சந்தையில் அதிகளவு புரள்வு பெறுமதியை கொண்ட நிறுவனம் எனும் நிலையில் மாற்றம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,233.21 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3491.55 ஆகவும் அமைந்திருந்தன.
ஓகஸ்ட் 12ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,964,732,407 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 24,867 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 23,600 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,267 ஆகவும் பதிவாகியிருந்தன.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஒடோட்ரோம், சிலோன் பிரின்டர்ஸ், சுவதேஷி, கார்கோ போட் மற்றும் சிலோன் டொபாக்கோ போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
என்வி றிசோர்சஸ்(உரிமை) (0.30), என்வி றிசோர்சஸ்(உரிமை) (1.00), பிசிஎச் ஹோல்டிங்ஸ், பீசி ஹவுஸ் மற்றும் செரண்டிப் லாண்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,200 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 133.09 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 208.48 ஆக காணப்பட்டிருந்தது.