
இலங்கையில் நிதிச்சேவைகளை வழங்குவதில் மக்களின் நம்பிக்கையை வென்ற நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்துக்கு அமைவாக கல்விசார் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி முன்னெடுத்து வருகிறது.
அண்மையில் இந்நிறுவனம் இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்காக கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. கிராண்ட்பாஸ் கிளையின் மூலம், வசதி குறைந்த பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அனுகூலம் வழங்கும் வகையில் இந்த இலவச கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக இந்த கருத்தரங்கு கொழும்பு, கொட்டாஞ்சேனை குமார கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கருத்தரங்கில் 200க்கும் அதிகமான மாணவர்கள் தமது பெற்றோருடன் பங்குபற்றியிருந்தனர். முன்னைய கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவடைந்திருந்ததை தொடர்ந்து, இந்த கருத்தரங்கிலும் மாணவர்கள் பங்குபற்றுவதற்கு அதிகளவு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். ஒவ்வொரு மாணவருக்கும் மாதிரி வினாத்தாள் கண்கவர் கோப்பில் இட்டு வழங்கப்பட்டிருந்ததுடன், சிற்றுண்டிகள் மற்றும் பான வகைகளும் வழங்கப்பட்டிருந்தன.
ஊடகவியலாளர் கல்வி மையத்தின் மூலம் இந்த கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இந்த கருத்தரங்கில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் உதவி பொது முகாமையாளர் லக்சந்த குணவர்தன, சிரேஷ்ட முகாமையாளர் அன்டி ரத்நாயக்க, கிராண்ட்பாஸ் கிளையின் முகாமையாளர் காஞ்சன வாரியபொல மற்றும் கிராண்ட்பாஸ் கிளையின் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த கருத்தரங்கின் மற்றுமொரு விசேட அம்சமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிங்கள பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். சுரத் விஜேசூரிய அவர்களின் மூலம் பெற்றோர் – பிள்ளைகள் உறவு முறை தொடர்பில் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு சொற்பொழிவு, பங்குபற்றியிருந்த பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
இந்த நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் லக்சந்த குணவர்தன கருத்து தெரிவிக்கையில், 'நாட்டின் வௌ;வேறு பிரதேசங்களில் பல்வேறு விதமான சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இதற்கு அமைவாக, இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் பின்தங்கிய வசதி வாய்ப்பு குறைந்த மாணவர்களின் நலன் கருதி தொடர்ச்சியான இரண்டாவது தடவையாகவும் இந்த கல்விசார் கருத்தரங்களை கிராண்ட்பாஸ் கிளை ஏற்பாடு செய்துள்ளது'.
'இந்த கருத்தரங்கின் மூலம் மாணவர்கள் அனைவரும் சிறந்த பயனடைவதுடன் வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாக தேர்ச்சியடைவார்கள் என எதிர்பார்க்கிறோம். மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளில் சிறப்பான ஈடுபாட்டை காண்பிப்பதற்கு பெற்றோரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை குறிக்கும் வகையில் பேராசிரியர் விஜேசூரிய அவர்களின் உரை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது' என்றார்.
இந்த கருத்தரங்கை முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய குமார கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு பீப்பள்ஸ் லீசிங் நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
வங்கியியல் அல்லாத துறையில் இலங்கையில் இயங்கும் மிகப்பெரிய நிதிசார் கம்பனியாக பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
