.jpg)
-ச.சேகர்
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தையில் தொடர்ச்சியாக சரிவான பெறுபேறுகளை அவதானிக்க முடிந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குவிற்பனையில் நாட்டம் காண்பித்திருந்தனர். அத்துடன் ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் சரிவடைந்து வரும் நிலை பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக பங்குமுகவர்கள் தெரிவித்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,834.04 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3261.33 ஆகவும் அமைந்திருந்தன.
ஓகஸ்ட் 26ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 2,427,574,218 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 26,681 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 25,356 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,325 ஆகவும் பதிவாகியிருந்தன.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் பிசிஎச் ஹோல்டிங்ஸ், பிசி பார்மா, அனிலானா ஹோட்டல்ஸ், பீசி ஹவுஸ் மற்றும் ஒஃவிஸ் எக்யுப்மன்ட்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
டச்வுட், ஷலிமர், மேர்க் சிப்பிங், கெல்சி மற்றும் ஆசியா கெப்பிட்டல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
திங்கட்கிழமை
பிரதான சுட்டி 56.18 புள்ளிகள் சரிவை பதிவு செய்திருந்ததுடன், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 15.33 சரிவை பதிவு செய்திருந்தது. மொத்த சந்தை புரள்வு பெறுமதி 366 மில்லியன் ஆக பதிவாகியிருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் புரள்வு பெறுமதி 95 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவு விற்பனையாகியிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மொத்த சந்தை பங்களிப்பு 40 வீதமாக அமைந்திருந்தது.
செவ்வாய்க்கிழமை
தொடர்ந்து ஐந்து நாட்களாக சந்தையின் பிரதான சுட்டி பதிவு செய்திருந்த மறை பெறுமதிகள் நேர் பெறுமதியாக செவ்வாய்க்கிழமை பதிவாகியிருந்தது. தினசரி சந்தை புரள்வு பெறுமதியாக 503 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 179 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், வலிபல் வன் மற்றும் நேஷன்ஸ் பினான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு விற்பனையாகியிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மொத்த சந்தை பங்களிப்பு 31 வீதமாக பதிவாகியிருந்தது.
புதன்கிழமை
புதன்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது பிரதான சுட்டிகள் அதிகளவு மறை பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் உரிமை வழங்கல்கள் குறித்த அறிவித்தலை தொடர்ந்து இந்த சரிவான நிலை அவதானிக்க முடிந்தது. சந்தை புரள்வு பெறுமதியாக 694 பில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. இதில் யுனைட்டட் மோட்டர்ஸ் 230 மில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவு கைமாறியிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 31 வீதமாக பதிவாகியிருந்தது.
வியாழக்கிழமை
வியாழக்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது சந்தையின் பிரதான சுட்டிகள் உயர்வான பெறுமதியை பதிவு செய்திருந்தன. மொத்த சந்தை புரள்வு பெறுமதி 511 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இதில் சம்பத் வங்கி 124 மில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டச் வுட் மற்றும் நேஷன்ஸ் லங்கா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் கைமாறியிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 19 வீதமாக அமைந்திருந்தது.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது பிரதான சுட்டிகள் உயர்ந்த பெறுமதியை பதிவு செய்திருந்தன. மொத்த சந்தை புரள்வு பெறுமதியாக 353 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 93 மில்லியன் ரூபாவை பதிவுசெய்திருந்தது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 48,700 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 44,671 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. ரூபாவின் மதிப்பு குறைவடைந்து செல்வதால் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 135.01 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 209.88 ஆக காணப்பட்டிருந்தது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வகையில் நலிவடைந்து கடந்த வாரம் 135 ரூபாவுக்கு மேல் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.