
உள்ளூர் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்குவதன் மூலமும் புதிய வாய்ப்புக்களை தேடுவதன் ஊடாகவும் வெற்றிகரமான முறையில் வர்த்தகத்தை முன்னெடுத்து செல்வது எவ்வாறு என்பது தொடர்பில் லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனம் அதன் விநியோகத்தர்கள், சில்லறை வர்த்தகர்களை இலக்கு வைத்து இரண்டு செயலமர்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த லபார்ஜ் நிறுவனத்தின் விநியோகத்தர்கள், சில்லறை வர்த்தகர்கள் ஆகியோரை அறிவுறுத்தும் நோக்கில் கம்பஹா மாவட்ட செயலமர்வு கிரிபத்கொடை கிளரியன் ஹோட்டலிலும், கொழும்பு மாவட்ட செயலமர்வு பிட்டகோட்டை சோலிஸ் ஹோட்டலிலும் நடைபெற்றதுடன் இரண்டு செயலமர்வுகளிலும் 600 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சுயதிறமையை வளர்த்துக் கொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் அத்துறை சார்ந்த பிரபல ஆலோசகர் சந்தன குணவர்தன இந்த இரண்டு செயலமர்வுகளிலும் தமது கருத்துக்களை முன்வைத்தார். புதிய சந்தையை நோக்கி வர்த்தகர்கள் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு சந்தைகளில் வர்த்தகர்கள் தமது நடவடிக்கைகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இதனை பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு தமது வியாபாரம் போன்றே குடும்பமும் முக்கியமானது. வர்த்தகர்களின் பெறுமதி குடும்பம் ஊடாகவே வெளிப்படும். பெறுமதி தொடர்பாக வர்த்தகர்கள் சிந்திக்க வேண்டியது அவசியம். வர்த்தகம் முன்னேற்றமடைந்தால் நாடு தானாகவே முன்னேற்றமடையும் என சந்தன குணவர்தன தெரிவித்தார்.
செயலமர்வுகளில் கலந்துகொண்ட விநியோகத்தர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் லாபர்ஜ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தவும் சந்தர்ப்பம் கிடைத்தது. விற்பனை பிரதிநிதிகளுக்கிடையில் நட்புறவை வளர்க்கும் நோக்கிலேயே இந்த செயமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்போது கருத்து தெரிவித்த லபார்ஜ் மஹாலி சீமெந்து நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் பிரதானி சுசந்த பெரேரா, விற்பனை பிரதிநிதிகள் செயற்படும் விதம் தொடர்பில் லாபர்ஜ் நிறுவனம் நன்றிகளை தெரிவிக்கின்றது. அவர்களின் சேவையை பாராட்டும் அதேநேரம் அவர்களை ஊக்குவிக்க வேண்டியது லபார்ஜ் நிறுவனத்தின் கடமையாகும் என குறிப்பிட்டார்.