2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இந்திய ரூபாய் தொடர்ந்தும் சரிவு - இந்திய பங்குச்சந்தையும் சரிவு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழல், கோல்ட்மன் சாக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட அண்மைய எதிர்வுகூறல் போன்ற நிலைகளின் காரணமாக டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி 67.96 ஆக பதிவாகியிருந்தது. இது திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் 3.5 வீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியை நாம் இந்த ஆண்டுக்கான எதிர்வுகூறலை 6 வீதத்திலிருந்து 4 வீதமாக குறைத்துள்ளோம் என குறிப்பிட்டிருந்தது. தொடர்ந்து ரூபாவின் பெறுமதி சரிவடைந்து, 6 மாத காலப்பகுதியில் 72 எனும் நிலையை அடையும் எனவும், பின்னர் 70 எனும் நிலையில் உறுதியடையும் எனவும் குறித்த அறிக்கையில் கோல்ட்மன் சாக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் வங்கிகள் மற்றும் கூட்டாண்மை துறைகளில் இந்த ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி வேகமான தாக்கத்தை ஏற்படுத்துமாயின் தமது எதிர்வுகூறல்கள் மேலும் நலிவடையும் எனவும் அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

மத்திய கிழக்கை வேகமாக சூழ்ந்து வரும் போர்ச்சூழல், இந்திய பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக பதிவாகியிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைந்த வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி சரிவான நிலையில் காணப்பட்டதாக எச்எஸ்பிசி வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் ஆரம்பித்து, ஐரோப்பாவை தொடர்ந்து, தற்போது ஆசிய நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடி தலைதூக்க ஆரம்பித்துள்ளமையை அவதானிக்க முடிவதாக பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .