.jpg)
-ச.சேகர்
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தையில் தொடர்ச்சியாக சரிவான பெறுபேறுகளை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக டச்வுட் மற்றும் சென்ரல் இன்வெஸ்ட்மன்ட் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனங்களுக்கு எதிராக வாடிக்கையாளர்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாடுகளை தொடர்ந்து, குறித்த நிறுவனங்களின் பங்குகள் சரமாரியாக கையிருந்ததுடன், கடந்த வியாழக்கிழமை டச்வுட் நிறுவனத்தின் பங்கு விற்பனையை மூன்று தினங்களுக்கு இடைநிறுத்துவதாக இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,672.64 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3177.17 ஆகவும் அமைந்திருந்தன.
செப்டெம்பர் 02ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 1,728,463,487 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 26,681 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 22,791 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 21,917 ஆகவும் பதிவாகியிருந்தன.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஆசியா சியாகா, பேருவள வோல்கின், செலிங்கோ இன்ஸ்., மேர்க். சிப்பிங் மற்றும் கஹவத்த போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
டச்வுட், ஃபர்ஸ்ட் கெப்பிட்டல், செரண்டிப் என்ஜி. குருப்., பிசிஎச் ஹோல்டிங்ஸ் மற்றும் டீ ஸ்மோல் ஹோல்டர்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
திங்கட்கிழமை
வாரத்தின் முதல் நாள் செயற்பாடுகள் மந்த கதியில் ஆரம்பமாகியிருந்தது. பங்குச்சந்தை நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெற்றிருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதியாக 277 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. நெஸ்லே லங்கா, சிலோன் டொபாக்கோ மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிவு காரணமாக சந்தை மறைப்பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வியாபாரம் அவதானிக்கப்பட்டிருந்ததுடன், டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் அதிகளவில் கைமாறப்பட்டிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு சந்தை கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்ததுடன், வெளிநாட்டு கொள்வனவுகள் மொத்தப்புரள்வில் 51% பங்களிப்பை வழங்கியிருந்தன.
செவ்வாய்க்கிழமை
சிறியளவிலான கொடுக்கல் வாங்கல்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியிருந்தன. அதிகளவு பெறுமதி வாய்ந்த பங்குகளான சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் நெஸ்லே லங்கா போன்றவற்றின் பங்குகள் உயர்ந்த பெறுமதியை பதிவு செய்திருந்த போதிலும், சந்தையின் பிரதான சுட்டெண்கள் மறை பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. மொத்தப்புரள்வில் சிறியளவிலான கொடுக்கல் வாங்கல்கள் பங்களிப்பை வழங்கியிருந்தன. டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ், சென்ரல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் பான் ஏசியன் பவர் போன்ற நிறுவனங்களின் பங்குகள் பங்களிப்பை வழங்கியிருந்தன. அதுபோன்று ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் எச்என்பி அஷ்யூரன்ஸ் போன்றன அதிகளவு விற்பனையாகியிருந்தன.
புதன்கிழமை
பங்குச்சந்தை செயற்பாடுகள் மந்தகதியில் புதன்கிழமை பதிவாகியிருந்தது. தெரிவு செய்யப்பட்ட சில ப்ளுசிப் கம்பனிகளின் பங்குகளில் விலைச்சரிவு பதிவாகியிருந்ததை தொடர்ந்து, சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் சரிவான பெறுமதியை பதிவு செய்திருந்தது. ஆனாலும், சிலோன் டொபாக்கோ கம்பனியின் பங்குகளில் அதிகளவு நாட்டம் காணப்பட்டமையின் காரணமாக சந்தையில் கலப்பான போக்கு பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் நெஸ்லே லங்கா போன்ற பங்குகளின் மீது நிறுத்தி வைக்கப்பட்ட வியாபாரம் அவதானிக்கப்பட்டிருந்தது. சிறியளவிலான கொடுக்கல் வாங்கல்கள் மந்தகதியில் இடம்பெற்ற போதிலும், டச்வுட் இன்வெஸ்ட்மன்ட் பங்குகளில் ஓரளவு நாட்டம் காணப்பட்டது. தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் போன்ற பங்குகளின் விற்பனையின் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு விற்பனையில் ஈடுபட்டவர்களாக பதிவாகியிருந்தது.
வியாழக்கிழமை
நிறுத்தி வைக்கப்பட்ட வியாபார நடவடிக்கைகள் மொத்தப்புரள்வு பெறுமதியில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியிருந்தன. சிலோன் டொபாக்கோ கம்பனி, செலிங்கோ இன்சூரன்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் லயன் பிரெவரி போன்ற பங்குகளின் விலைகளில் வீழ்ச்சி காரணமாக, சந்தை மறைப்பெறுமதியில் நிறைவடைந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், வட்டவளை பிளான்டேஷன்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி போன்ற பங்குகளின் மீது மொத்த வியாபாரம் அவதானிக்கப்பட்டது. இவற்றின் மூலம் சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியின் 49% எய்தப்பட்டிருந்தது. செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் போன்ற பங்குகளின் மீது அதிகளவு நாட்டம் காணப்பட்டது. இதேவேளை, ஹோல்டிங்ஸ் மற்றும் பான்ஏசியன் பவர் போன்ற பங்குகளில் சிறியளவிலான முதலீட்டாளர்கள் அதிகளவு ஈடுபாட்டை காண்பித்திருந்தனர். வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது பிரதான சுட்டிகள் தொடர்ந்து மறை பெறுமதியை பதிவு செய்திருந்தன. மொத்த சந்தை புரள்வு பெறுமதியாக 239 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 126 மில்லியன் ரூபாவை பதிவுசெய்திருந்தது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 47,400 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 43,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 134.75 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 210.73 ஆக காணப்பட்டிருந்தது.