
பொதுநலவாய மாநாட்டிற்கு இலங்கை தயாராகி வரும் இவ் வேளையில், இலங்கையின் அன்பளிப்பு மற்றும் நினைவுச்சுவடுகளை வடிவமைப்பதில் பிரபல்யம் பெற்ற லக்சல நிறுவனமானது மாநாட்டிற்காக தமது காட்சியறைகளை விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளது. திவி நெகும சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய, பேராதனை தாவரவியல் பூங்காவின் நுழைவாயிலில் இப் புதிய லக்சல காட்சியறை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இக் காட்சியறையானது, பொதுநலவாய மாநாடு ஆரம்பிக்க முன்னர் திறக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள், பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவருவதே எதிர்பார்ப்பாகும்.
இலங்கையின் தேசிய சொத்தாக கருதப்படும் பேராதனை பூங்காவானது அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ளதுடன், வருடாந்தம் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1.4 மில்லியன் பார்வையாளர்களை கவருகின்றது. இலங்கையின் கைப்பொருட்கள் துறையை வெளிநாடுகளில் பிரபல்யப்படுத்தும் நோக்கில், லக்சல தனது புதிய காட்சியறையை பூங்காவின் நுழைவாயிலில் அமைக்க தீர்மானித்துள்ளது.
'அழகிய மலைத்தொடர்கள் சூழ இக் காட்சியறை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இப் புதிய லக்சல காட்சியறையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச்சுவடுகள் மற்றும் கலைப்பொருட்களை உள்ளடங்கிய சுமார் 15,000 இற்கும் அதிக கையிருப்பு அலகுகளை கொண்டு நிர்மாணிக்கப்படுகிறது' என லக்சலவின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் கொஸ்வத்த தெரிவித்தார்.
பின்னவல மற்றும் கண்டியில் அமைந்துள்ள காட்சியறை தொடரின் மூன்றாவது காட்சியறையாக இப் பேராதனை காட்சியறை நிர்மாணிக்கப்படுகிறது. 'அமைவிடத்துடன் ஒத்த பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் இந்த காட்சிறையை நிர்மாணிப்பது விசேட அம்சமாகும்' என மேலும் கொஸ்வத்த தெரிவித்தார்.
இலங்கையானது காலணித்துவ ஆட்சிக் காலத்திலிருந்து பண்டைய வரலாற்றைக் கொண்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களை கவர்ந்துள்ள பல இடங்கள் காணப்படுகின்றன. அத்தகைய இடங்களில் ஒன்றான பேராதனை தாவரவியல் பூங்காவானது காலணித்துவ ஆட்சி மற்றும் கைத்தொழில் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. எனவே, இப் பூங்காவின் நுழைவாயிலில் லக்சலவை திறப்பதனானது இலங்கை சொத்துடன் இணைந்து கொள்வதற்கான அரிய வாய்பாகும்' என மேலும் கொஸ்வத்த தெரிவித்தார்.
இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் திவிநெகும திட்டத்தின் கீழ் லக்சல செயற்பட்டு வருகிறது. இந்த வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் காலி, வெலிபென மற்றும் அருங்காட்சியக வளாகத்தில் லக்சல காட்சியறைகள் திறந்து வைக்கப்பட்டன.
இந்த விஸ்தரிப்புகள் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுவடையச் செய்யவும், கிராமிய கைவினைஞர்கள் மற்றும் கிராமிய சப்ளையர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கவும் முடியும். தற்போது நாடுபூராகவும் உள்ள 7,500 கலைஞர்கள,; கைவினைஞர் மற்றும் சப்ளையர்கள் ஆகியோர் லக்சல நிலையத்தில் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளனர்.