சென் லுக்காசில் அமைந்துள்ள ரியூ ஹோட்டல்
மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், தெற்கு அதிவேக பாதை ஆகியவற்றை கேந்திரப்படுத்தி அவுங்கலையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஹோட்டலொன்றை நிர்மாணிப்பதற்கு எயிட்கன்ஸ் ஸ்பென்ஸ் நிறுவனம் ரியூ ஸ்பெயினுடன் கைகோர்த்துள்ளது.
ஏழு மாடிகளைக் கொண்ட இந்த சுற்றுலா ஹோட்டலில் 500 அறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஸ்பெயினை தளமாக கொண்ட ரியூ ஹோட்டலினால் இதன் முகாமைத்துவம் முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் 16 நாடுகளில் ரியூ ஹோட்டல்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் ஆசிய பசுபிக் வலயத்தில் இத்தகைய நடவடிக்கையொன்றில் ஈடுபடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
'இந்த ஹோட்டலை நிர்மாணிப்பது காலத்தின் தேவையாகும். தெற்கு அதிவேக பாதை ஹம்பாந்தோட்டை வரை நீடிக்கப்படவுள்ளதால் இது முக்கியமானது. அத்துடன் மத்தல சர்வதேச விமான நிலையம் அமைந்திருப்பதும் இந்த ஹோட்டலை அமைப்பதற்கு காரணம். நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதை எப்போதுமே எயிட்கன்ஸ் ஸ்பென்ஸ் நிறுவனம் ஊக்குவிக்கும். அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒத்துழைப்பை வழங்குவதே எமது முதலீடுகளின் நோக்கமாகும்' என நிறுவனத்தின் பிரதித் தலைவர் ராஜன் பிறிட்டோ தெரிவித்தார்.
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் தரிசனத்துக்கு அமைய தனியார் துறையினர் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எயிட்கன்ஸ் ஸ்பென்ஸ் நிறுவனத்தின் கருத்தாகும்.
இலங்கையை ஆசியாவின் சுற்றுலா மத்திய நிலையமாக மாற்றியமைப்பதற்கு இந்த திட்டத்தின் ஊடாக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த திட்டத்தின் நோக்கமாக சுற்றுலாத்துறைக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட விமானங்கள் (ஊhயசவநன குடiபாவள) மத்தளை விமான நிலையம் ஊடாக வருவதால் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர முடியும் என்பதுடன் ஒரு தடவையில் 700 முதல் 800 பயணிகள் வருகை தருவதற்கான வாய்ப்புக்கள் நிலவுகின்றன.
இந்த திட்டம் தெற்கில் மாத்திரமல்ல நாட்டின் சுற்றுலாத்துறைக்கு முக்கிய பங்காற்றும் என தெரிவித்துள்ள ராஜன் பிறிட்டோ இதன்மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும் என்பதையும் குறிப்பிட்டார்.
மெக்ஸிகோவில் அமைந்துள்ள ரியூ ஹோட்டல்