
இயற்கை மூலிகைகள் அடங்கிய சுகாதார பாதுகாப்பு தயாரிப்புகளை தயாரிப்பதில் இலங்கையில் முன்னணியில் திகழும் சுவதேஷி நிறுவனத்தின் மூலம் தம்பதெனிய ரஜமஹா விஹாரையின் 'ஒளியூட்டல் பூஜை' நிகழ்வுக்கு தொடர்ச்சியான 13ஆவது வருடமாக அனுசரணை வழங்கியிருந்தது.
இலங்கையின் மூன்றாவது இராஜதானியாக தம்பதெனிய விளங்கியதுடன், மகா பராக்கிரமபாகு 2 அரசனின் காலப்பகுதியில் இந்த விஹாரை தாபிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. தலதா பெரஹெர புனித தந்தத்தை கௌரவிக்கும் வகையில் இடம்பெறுகிறது, இந்த தந்தம் சிறிது காலம், இந்த விஹாரையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 'சுவதேஷி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய' நிகழ்வு 2013 ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இந்த ஒளியூட்டல் நிகழ்வு 'சுவதேஷி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய' எனும் தொனிப்பொருளுக்கு அமைய இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வு குறித்து சுவதேஷி நிறுவனத்தின் தலைவரான அமரி குணவர்த்தன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை நிறுவனம் என்ற வகையில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதன் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்' என்றார்.
'எமது பாரம்பரியம் குறித்து எமது எதிர்கால சந்ததியினருக்கும் உணர்த்துவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அத்துடன் யாத்திரிகர்கள் அனைவரினதும் நலன் கருதி நாம் இந்த ஒளியூட்டலை மேற்கொண்டு வருகிறோம்' என மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஒளியூட்டல் நிகழ்வுக்கு மேலதிகமாக, புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட தம்பதெனிய ஸ்ரீ தலதா மாளிகையை திருமதி. அமரி விஜேவர்தன அவர்கள் திறந்து வைத்திருந்தார். இலங்கை தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தின் வழிகாட்டலுடன் இந்த மாளிகை புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது.
திருமதி. அமரி விஜேவர்த்தன, 1927ஆம் ஆண்டு களனி விஹாரையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்திருந்த ஹெலெனா விஜேவர்த்தன லமாதெனி அவர்களின் பூட்டப்பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவதேஷி நிறுவனத்தின் வருடாந்த சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்துக்கு அமைவாக நாட்டில் இடம்பெறும் 4 காப்பு கடவுளுக்கான திருவிழாக்களின் ஒளியூட்டல் செயற்பாட்டை ஒவ்வொரு வருடமும் முன்னெடுத்து வருகிறது. களனி ரஜமஹா விஹாரை (விபீஷண தெய்வம்), றுகுணு கதிர்காம ஆலயம் (முருகன்), இரத்தினபுரி சமன் ஆலயம் (சமன் தெய்வம்) மற்றும் தெவுந்தர உத்பலாவரண ஸ்ரீ விஷ்ணு மஹா ஆலயம் (விஷ்ணு தெய்வம்) ஆகிய நான்கு தெய்வங்களுக்காக இடம்பெறும் திருவிழாக்களின் போது ஒளியூட்டலை சுவதேஷி மேற்கொண்டு வருகிறது.
1941ஆம் ஆண்டு கந்தானையில் தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. நூற்றுக்கு நூறு வீதம் உள்நாட்டு மூலப்பொருட்களை கொண்டு தனது தயாரிப்புகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கும் பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சேஃப்பிளஸ், கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், பிளாக் ஈகள் பர்ஃவியும், லேடி மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் சிறுவர்களுக்கான 'லிட்டில் ப்ரின்சஸ்' ஷவர் ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் மூலமாக உயர்தர மூலிகை சவர்க்காரமான கொஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.