2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆரம்ப பொதுப்பங்கு விநியோகம் மற்றும் நிதிச்சந்தை மீதான பட்டியலிலும் அமானா வங்கி இணைந்துள்ளது

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இஸ்லாமிய வங்கிக் கொள்கையுடன் முற்றிலும் இணங்கி செயற்பட்டு வரும் இலங்கையின் உத்தரவுபெற்ற முன்னணி வர்த்தக வங்கியான அமானா வங்கி ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் ஊடாக நிதிச் சந்தையின் பட்டியலில் இடம்பிடிப்பதற்காக கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்திடமிருந்து இணக்கப்பாட்டை பெற்றுள்ளது. திரி சவி சபையின் பட்டியலில் இடம்பிடிப்பதற்கு எதிர்பார்க்கும் இந்த வங்கி ரூபா 7 வீதம் 214,300,000 புதிய சாதாரணப் பங்குகளை விநியோகிக்க உள்ளதுடன் மிகை கொள்வனவின்போது மேலதிகமாக 71,500,000 புதிய சாதாரணப் பங்குகளை விநியோகிப்பதற்கும் உத்தேசித்துள்ளது. குறிப்பிட்ட பங்குகள் முழுதும் விநியோகிக்கப்படுவதன் மூலம் 1,500,100,000 ரூபா திரட்டப்படும் அதேவேளை மேலதிக விருப்பத் தெரிவு செயற்படுத்தப்பட்டு, மேலதிக பங்குகள் முழுவதும் விநியோகிக்கப்பட்டால், அதன் மூலம் 2,000,600,000 ரூபா பெற்றுக் கொள்ளப்படும். அமானா வங்கியின் ஆரம்ப பொதுப் பங்கு விநியோகம் என்பது கடந்த இரண்டு வருடங்களில் ஒரு உத்தரவு பெற்ற வர்த்தக வங்கி விநியோகிக்கும் முதலாவது ஆரம்ப நிலைப் பொதுப் பங்கு விநியோகத்தை குறிக்கும். தற்போதைய உலக கட்டமைப்பில் வளர்ச்சி கண்டு வரும் இஸ்லாமிய வங்கித் துறையில் முதலீடு செய்வதற்கு இலங்கைச் சந்தைக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்தை இந்த ஆரம்ப பொதுப் பங்கு விநியோகம் வழங்குகின்றது. 
 
இந்த ஆரம்ப பொதுப் பங்கு விநியோகம் பற்றி உரையாற்றிய வங்கியின் தலைவர், திரு. ஒஸ்மான் காசிம் அவர்கள், 'வங்கியின் தற்போதைய மற்றும் எதிர்கால வெற்றி இந்த பிரத்தியேகமான வட்டியில்லாத, சொத்துக்களை அடிப்படையாகக் கொண்ட அதாவது இடர்களும், வெகுமதிகளும் வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய வங்கியியல் மாதிரியிலேயே தங்கியுள்ளது. வாழ்க்கையில் பல்வேறு நம்பிக்கைகளை கொண்டுள்ள மக்கள் எம்மீதும் எமது வங்கி முறை மீதும் நம்பிக்கை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த ஆரம்பப் பொது பங்கு விநியோகம் வங்கியின் உரிமையில் பங்கெடுத்துக் கொள்வதற்காக பலருக்கு சந்தர்ப்பமளிக்கும்' என்றார். 
 
அமானா வங்கியின் முகாமைப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி பைசல் சாலிஹ் கருத்து வெளியிடுகையில், எமது பிரத்தியேக வங்கி முறை மூலம் நாம் வங்கியியல் துறையில் ஒரு வித்தியாசமான பாதச்சுவடை பதித்துள்ளதுடன் நாட்டின் பொருளாதார மூலோபாயத்திற்கு ஏற்ற ஒரு வர்த்தக உத்தியுடன் நாம் ஒரு துரித பயணத்தில் ஈடுபட்டுள்ளோம். எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கக் கூடிய வாடிக்கையாளர்களிலும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிலும் நாம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த ஆரம்பப் பொதுப் பங்கு விநியோகத்தின் மூலம் திரட்டப்படும் நிதி 2013 ஆம் ஆண்டிலும், 2015ஆம் ஆண்டில் தேவைப்படும் குறைந்தபட்ச மூலதன தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதோடு, வங்கியின் வளர்ச்சிக்காகவும், விரிவாக்கலுக்காகவும் பயன்படுத்தப்படும்' என்றார். 
 
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் ' கடந்த இரண்டு வருட தொழிற்பாடுகளில் அமானா வங்கி வாடிக்கையாளர் நிதியளிப்பில் 188 சதவீத வளர்ச்சியையும், வாடிக்கையாளர் வைப்புக்களில் 70 சதவீத வளர்ச்சியையும் அடைந்திருப்பதோடு, மூலோபாய அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள 24 கிளைகளின் வலையமைப்பு ஊடாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 100,000 இற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் மாத்திரம் வங்கியானது வாடிக்iயாளர் நிதியளிப்பில் ஏறக்குறைய 410 கோடி ரூபா வளர்ச்சியையும் (57%), அதன் வைப்பு பிரிவில் 360 கோடி ரூபா வளர்ச்சியையும் (27%) பதிவு செய்துள்ளது. எமது வங்கி முறைக்கும், சந்தைக்கு நாம் கொண்டுவந்த பிரத்தியேக பெறுமானப் பகிர்விற்கும் பாரிய வரவேற்பு உள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. எமது பணிக்குரிய வர்த்தக மாதிரியும், கொள்கைகளும் அனைத்து சமூகங்களாலும் பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது தெளிவான விடயமாகும்' எனக் குறிப்பிட்டார். 
 
தற்போது வங்கியானது 5 வர்த்தக மூலோபாய முதலீட்டாளர்களைக் கொண்டுள்ளது. அவற்றில் 3 சர்வதேச வங்கி நிறுவனங்களான சவுதி அரேபியாவின் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, மலேஷpயாவின் இஸ்லாமிய வங்கி, பங்களதேஷpன் ஏ.பி.வங்கி என்பனவைகளாகும். இந்த வங்கிகள் தமது முதலீடுகளுக்கு முன்னர் இலங்கையில் இஸ்லாமிய வங்கித் துறைக்கான அமானா வங்கியின் செயலாற்றுகைக்கும், ஆற்றலுக்கும் ஊக்குவிப்பு வழங்கின. 
 
ஆரம்ப பொதுப் பங்கு விநியோகம் 2013 டிசம்பர் 11ஆம் திகதி ஆரம்பமாகும். விவரணக் குறிப்புக்களையும் விண்ணப்பப் படிவங்களையும் 2013, நவம்பர் 28ஆம் திகதி முதல் அனைத்து பங்குத் தரகர்களிடமும், அமானா வங்கிக் கிளைகளிலும், தெரிவு செய்யப்பட்ட எச்.என்.பீ. கிளைகளிலும் அல்லது www.cse.lk மற்றும் www.amanabank.lk என்ற இணையத்தளங்கள் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம். பங்கு விநியோகத்திற்கான முகாமையாளர்களாக வரையறுக்கப்பட்ட அக்கியூட்டி பாட்னர்ஸ் தனியார்க் கம்பனியும், பதிவாளர்களாக வரையறுக்கப்பட்ட எஸ்.எஸ்.பீ. கோப்பரேட் சேர்விஸஸ் தனியார் கம்பனியும்  செயற்படுகின்றன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .