2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செலான் வங்கிக்கு புதிய பணிப்பாளர்கள்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கியானது, தனது பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாக பி.எல். சிசிர குமார் பெரேரா மற்றும் திருமதி கொரலி பீற்றர்ஸ் ஆகியோரை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. 
 
இலங்கை மத்திய வங்கியில் நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவ பதவிகளில் 22 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டவரான பெரேரா, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் (சிறப்புக் கற்கையுடன்) விஞ்ஞான இளமாணி பட்டத்தைப் பெற்றவராவார். அதேவேளை, இபடான் பல்கலைக்கழகத்தில் இருந்து புள்ளிவிபரவியலில் முதுமாணி பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளியல் மற்றும் சமூக கல்வியில் (பொருளாதாரம் மற்றும் பொருளாதார கணிதவியல்) முதுகலைமாணி பட்டமொன்றையும் பெற்றவராக இவர் திகழ்கின்றார். 
 
மூலதன சந்தைகள், 'போர்ட்போலியோ முகாமைத்துவம்' மற்றும் புதிய நிதியியல் கருவிகள் போன்றவை தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரந்துபட்ட பயிற்சியையும் அறிவையும் இவர் பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியிலிருந்து ஓய்வுபெறும் வேளையில் நாணயமாற்று நடவடிக்கைக்கான மேலதிக கட்டுப்பாட்டாளராக இவர் பதவி வகித்தார். அத்துடன், இலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றுவதற்கு முன்னதாக இவர் விவசாய அபிவிருத்தி அதிகார சபையில் சந்தைப்படுத்தல் பிரதிப் பணிப்பாளராக பதவி வகித்துள்ளார். இப்போது பிரபலமான தனியார் துறை நிறுவனங்களின் ஆலோசகராக திரு. பெரேரா கடமையாற்றுகின்றார். 
 
நாணயமாற்றுக் கட்டுப்பாட்டை மறுசீரமைப்பதற்காக மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட செயலணியில் திரு. பெரேரா சேவையாற்றிய அதேநேரம், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 'பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குறூப் 3 வருடாந்த கூட்டத்தொடர்' 2003ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 'இந்திய - இலங்கை பணிப்பாளர் நாயகம் மட்டத்திலான கடத்தலுக்கு எதிரான கூட்டத்தொடர்' ஆகியவற்றில் இலங்கை மத்திய வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார். 
 
இதேவேளை திருமதி கொரலி பீற்றர்ஸ் - தனியார் மற்றும் அரச துறைகளிலுள்ள பல்வேறு நிறுவனங்களில் சிரேஷ்ட மட்டத்திலான பதவிகளை வகித்தவராவார். இப்பதவிகளுள் வங்கியியல் துறையில் சிரேஷ்ட மட்டங்களிலான அதிகாரியாக பெற்றுக் கொண்ட அனுபவமும் உள்ளடங்கும். அந்தவகையில், கூட்டாண்மை நிதி, கணக்கியல் மற்றும் கணக்காய்வு போன்ற துறைகளில் 20 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தை இவர் தன்னுடன் கொண்டு வருகின்றார். 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் இணை உறுப்பினராகவும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் ஒரு அங்கத்தவராகவும் செயற்படுகின்ற திருமதி கொரலி பீற்றர்ஸ், பல்வகைப்பட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கூட்டு நிறுவனமான பின்லேய்ஸ் கொழும்பு பி.எல்.சி. இன் நிதிப் பணிப்பாளராக தற்போது கடமையாற்றுகின்றார். இவர் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து பௌதீகவியலில் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தைப் பெற்றுள்ளதுடன் எடின்பேர்க், ஹெரியொட்-வட் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (MBA) பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார். 
 
பின்லேய்ஸ் கொழும்பு பி.எல்.சி. நிறுவனத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக திருமதி. கொரலி பீற்றர்ஸ், றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பி.எல்.சி. குழும பிரதம நிதி அதிகாரியாக பதவி வகித்தார். போகொல கிராபைட் லங்கா பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் ஒரு சுயாதீன பணிப்பாளராகவும் இவர் தற்போது சேவையாற்றி வருகின்றார். அதுமட்டுமன்றி, பின்லேய்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் மேலும் பல கம்பனிகளின் பணிப்பாளர் சபைகளிலும் அங்கம் வகிக்கின்றார். 
 
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் செயற்படு நிலையிலுள்ள ஒரு அங்கத்தவராக திருமதி. கொரலி பீற்றர்ஸ் திகழ்கின்றார். CA Srilanka இன் பல்வேறு குழுக்களில் இவர் உறுப்பினராகவுள்ள அதேநேரம், நிதியியல் அறிக்கையிடல் பீடத்திலும் உயர்பதவி வகிக்கின்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .