
2013 நவம்பர் 27ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் விதத்தில் செலான் வங்கி பி.எல்.சி.யின் நிறைவேற்று-அந்தஸ்தற்ற பணிப்பாளராக ஹிமாசி இசுறு பாலபட்டபெந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
செலான் வங்கியின் பணிப்பாளர் சபையில் இருந்து பியதாச குடபாலகே இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்தே இந்நியமனம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொழில்சார் ரீதியில் ஒரு சட்டத்தரணியான திரு. பாலபட்டபெந்தி அவர்கள், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையில் ஒரு பணிப்பாளராக அங்கம் வகிக்கின்ற அதேநேரம் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின்; பென்சில்வேனியா, பிட்ஸ்பேர்க் நகரத்தில் உள்ள பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழக சட்டக் கலாசாலையில் L.L.M. பட்டத்தைப் பெற்றுக் கொண்டவராவார்.
இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒரு அரச சட்டவாதியாக கடமையாற்றிய இவர், நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இராஜதந்திரியாக (2008 தொடக்கம் 2010 வரை) சேவையாற்றியுள்ளார். அதேவேளை முதலீட்டு ஊக்குவிப்பு கௌரவ பிரதியமைச்சரின் ஆலோசகராகவும் கடமையாற்றுகின்றார்.
ரோயல் கல்லூரியினால் உருவாக்கப்பட்டவரான திரு. பாலபட்டபெந்தி, ரோயல் கல்லூரியிலும் அதேபோன்று இலங்கை சட்டக் கல்லூரியிலும் ஒரு செயற்றிறன்மிக்க மெய்வல்லுனராகவும் ரக்பி மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுக்களில் சிறந்த திறமைசாலியாகவும் மிளிர்ந்தார்.