.jpg)
ஹம்பாந்தோட்டை, ஆலோகபுர பிரதேசத்தில் அமைந்துள்ள 'அபே படவந்த பியவரக்' எனும் முன்பள்ளிப் பாடசாலையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளான 22 சிறுவர்களின் ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் ஒரு புதுமையான கண்காட்சியை அண்மையில் நடாத்தியதன் ஊடாக, ஹேமாஸ் நிறுவனமானது இப் புதுவருடத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடியது.
ஹேமாஸ் அவுட்ரீச் ஒன்றியத்தினால் (HOF) நடாத்தப்பட்ட இந்த கண்காட்சி கொழும்பு 02, பிரேபுறூக் பிளேசில் உள்ள 'ஹேமாஸ் ஹவுஸ்' இல் இடம்பெற்றது. ஐ.சீ.சீ. கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் நடுவரும் ஹேமாஸ் அவுட்ரீச் ஒன்றியத்தின் (HOF) வர்த்தக குறியீட்டு நல்லெண்ண தூதுவருமான ரொஷான் மஹாநாம மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தனர்.
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹுசைன் யூசுப் அலி மற்றும் புதிதாக நியமனம் பெற்றுள்ள பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவன் என்டர்பை ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாராட்டுத் தெரிவிக்கும் பண்புடைய பொது மக்களுக்கு இச் சிறுவர்கள் தமது கைவேலைப்பாடுகளை காண்பித்தமையால், அவர்களது வாழ்க்கையில் இந்த நாள் உண்மையிலேயே ஒரு விஷேடமான நாளாக அமைந்தது. ஓவியங்களை விற்பனை செய்யும் செயன்முறையின் மூலம் கிடைக்கப்பெற்ற ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நிதி, மேற்குறிப்பிட்ட முன்பள்ளிப் பாடசாலையை பராமரிப்பதற்காக பயன்படுத்தப்படும்.
தற்செயலாக, இக் கண்காட்சியுடன் இணைந்ததாக ஹேமாஸ் அவுட்ரீச் ஒன்றியத்தின் இணையத்தளமும் (www.hemasoutreach.com) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள 'பியவர' செயற்றிட்டங்கள் பற்றிய உள்ளடக்கங்களைக் கொண்டதாக இது காணப்படுகின்றது.
ஹேமாஸ் அவுட்ரீச் ஒன்றியத்தின் தலைவரான அப்பாஸ் யூசுப் அலி, பியவர செயற்றிட்டத்தை மேலும் விஸ்தரிக்கும் முயற்சியாக இது அமைந்தது என்றார். அவர் மேலும் கூறுகையில், 'இலங்கை முழுவதிலும் வாழ்கின்ற வசதிகுறைந்த சிறுவர்களுக்கு திடமானதும் முழுமையானதுமான கல்வியை பெற்றுக் கொடுக்கும் அடிப்படை நோக்கிற்கு அமைவாக நாம் 2002ஆம் ஆண்டு 'பியவர' செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தோம். அவர்கள் தம்மளவில் ஆற்றல் படைத்தவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை கடந்த பல வருடங்களில் நாம் உணர்ந்து கொண்டோம். சில நேரங்களில், பிரதான சமூகத்தில் வாழும் அவர்களைப் போன்ற ஏனைய சிறுவர்களின் திறமைகளுக்கு சமமானவையாக இவர்களது திறமைகள் இருப்பதையும் அறிந்து கொண்டோம். இம் முயற்சியானது அவர்களுக்கு வலுவூட்டுவதற்கு மேலதிகமாக - இச் சமுதாயத்தில் ஒரு அங்கமாக திகழ்தல் மற்றும் கண்ணியம் பற்றிய உணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை அவதானிப்பதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்' என்று குறிப்பிட்டார்.
ஹேமாஸ் அவுட்ரீச் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சிரோமி மசக்கோரள கூறுகையில், 'கடந்த பன்னிரண்டு வருடங்களாக இப் புதுமையான முன்னெடுப்பிற்கு உதவுவதற்காக ஒன்றுதிரண்ட மற்றும் உறுதிமிக்க விதத்தில் ஆதரவு வழங்கிய எமது அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். நாம் காலடி எடுத்து வைத்துள்ளது ஒரு நீண்ட பயணத்திலாகும். இலங்கையின் ஒட்டுமொத்த புவியியல் நிலப்பரப்பிற்கும் தனது பிரசன்னத்தை பரவலாக்கும் விடயத்தில் ஹேமாஸ் அவுட்ரீச்; ஒன்றியம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. மொனராகலை பிரதேசத்தில் 40ஆவது 'பியவர' முன்பள்ளிப் பாடசாலையை நிறுவும் நடவடிக்கையில் நாம் தற்போது ஈடுபட்டுள்ளோம். இம் முயற்சியானது, இதுபோன்ற மேலும் பல சிறுவர்களை எமது திட்டத்திற்குள் உள்வாங்கச் செய்யும்' என்றார்.
'பியவர' ஆனது இன்று ஒரு வெற்றிகரமான முன்னெடுப்பாக முன்னேறியுள்ள அதேநேரம், ஹேமாஸ் நிறுவனம் மற்றும் சிறுவர்கள் செயலகம் ஆகியவற்றின் நிலைபேண்தகு மற்றும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் ஒரு செயற்றிட்டமாகவும் திகழ்கின்றது. அதுமட்டுமன்றி –தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுதல் அதேபோல் புவியியல் ரீதியான வேறுபாடுகளை கடந்து பயணித்தல் ஆகிய விடயங்களில் அரச – தனியார் துறை பங்காளித்துவ முயற்சியின் வெற்றிக் கதையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்ற ஒரு முயற்சியாகவும் அமைகின்றது.