2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் களப்பு மீன்பிடித்தலுக்கு ஊக்குவிப்பு

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 20 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலையாண்மையுடன் கூடிய மீன் பிடித்தல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பெரன்டினா அபிவிருத்தி சேவைகள் மற்றும் PALM (கிழக்கு) ஆகியன இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த களப்பு பகுதியில் மீன்பிடித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு நிலையான மீன்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் PALM (கிழக்கு) இனால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் பெறுபேறாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பின் களப்பு பகுதியில் மீன்பிடித்தலில் ஈடுபடும் 80 சதவீதமான மீனவர்களால் பயன்படுத்தப்படும் வலைகள் சட்ட விரோதமானவையாக அமைந்துள்ளன. இதன் காரணமாக, இந்த வலைகளின் மூலமாக அளவுக்கதிகமான மீன்கள் பிடிக்கப்பட்டு, இந்த பகுதியின் மீன்பிடித் துறையின் நிலையாண்மைக்கு பங்கம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. 

செலவீனம் பகிரப்படும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்துக்கு PALM (கிழக்கு) மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்காளர் அமைப்புக்கு 1.7 மில்லியன் ரூபாவை பெரன்டினா மையம் வழங்கவுள்ளதுடன், இதில் 50 சதவீதம் PALM (கிழக்கு) அமைப்பினால் மீள செலுத்தப்படும் என்பதுடன், எஞ்சிய தொகை செயற்பாட்டு செலவீனமாக கொள்ளப்படும். மாவட்ட மீன்பிடி திணைக்களம் என்பது இந்த திட்டத்துடன் கைகோர்த்துள்ள மிகவும் முக்கிய பங்காண்மை அமைப்பாகும். அத்துடன் பயன்பெறுவோர் தெரிவு குழு, வலைகளை கொள்வனவு செய்யும் குழு மற்றும் திட்டத்தை மேற்பார்வை செய்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவது போன்றன இதன் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்த மூன்று ஆண்டு திட்டத்தின் முதல் கட்டத்தின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 189 களப்பு மீனவர்களுக்கு, வட்டியில்லாத கடன் அடிப்படையில் சட்டபூர்வமான மீன்பிடி வலைகளையும் மீன்பிடி உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி வழங்கப்படும். சட்டபூர்வமான மீன்பிடி வலைகளையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்கான உதவிக்கு மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பின்தங்கிய மீன்பிடி அமைப்புகளுக்கு கொள்ளளவு பயிற்சிகளை முன்னெடுப்பதற்கான உதவிகளையும் வழங்குவதுடன், மீன்பிடி சமூகத்துக்கு சட்ட விரோதமான மீன்பிடித்தல் செயற்பாடுகளின் காரணமாக நீண்ட கால அடிப்படையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றிய விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மண்முனை மேற்கு பகுதியிலிருந்து முதற் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. காத்தான்குடி, மண்முனை பற்று, பட்டிபொல, வெள்ளவெளி, களுவாஞ்சிக்குடி, மண்முனை வடக்கு -2  மற்றும் செங்கலடி போன்ற பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 3000 மீனவர்களுக்கு 2017 ஆம் ஆண்டின் மத்திய காலப்பகுதியினுள் இந்த திட்டத்தின் மூலம் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதை தற்போது காணப்படும் 80 சதவீதத்திலிருந்து 2017 ஆம் ஆண்டளவில் 30 வீதமாக கட்டுப்படு;த்துவது என்பது நோக்கமாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X