2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

Giti டயர் இலங்கையில் டயர் பரிசோதனை விழிப்புணர்வு திட்டம் முன்னெடுப்பு

A.P.Mathan   / 2015 ஜூலை 02 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 ஜுன் மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகளில், GT Radial இன் உற்பத்தியாளரான Giti Tire, பொது மக்கள் மத்தியில் டயர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டயர் பரிசோதனை திட்டத்தை முன்னெடுத்திருந்தது. மோட்டார் வாகனங்களை செலுத்துவோர் மத்தியில் அடிக்கடி டயர்களை பரிசோதித்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த செயற்திட்டம் அமைந்திருந்தது.

வீதியுடன் தொடர்பை ஏற்படுத்தும் காரின் ஒரே பாகம் எனும் வகையில், பாதுகாப்பான மற்றும் வினைத்திறன் வாய்ந்த வாகனத்தின் முக்கிய பாகமாக டயர்கள் அமைந்துள்ளன. பாதுகாப்பான வாகன செலுத்துகைக்கு அடிக்கடி டயர்களை பரிசோதித்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக நீண்ட தூர பயணங்களுக்கு முன்னரும், பின்னரும் இது முக்கியமானதாகும். வாகன சாரதிகளை தமது வாகன டயர்களை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில், Giti டயர் மூலமாக இந்த பரிபூரண டயர் பரிசோதனை சேவை வழங்கப்பட்டிருந்தது. 

இலங்கையில் GT Radial டயர்களை விநியோகிக்கும் டக்லஸ் அன்ட் சன்ஸ் (பிரைவேற்) லிமிடெட், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன், பொது மக்கள் மத்தியில் டயர் பராமரிப்பு பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தது. இந்நிகழ்வு ஜுன் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் ரேஸ்கோர்ஸ் சர்வதேச ரக்பி மைதானத்தின் வாகன தரிப்பிட பகுதி மற்றும் ஆர்கேட் இன்டிபென்டன்ஸ் ஸ்குயார் வாகன தரிப்பிட பகுதியிலும் இடம்பெற்றன.

மேற்படி பகுதிகளில் தரித்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு இலவச பரிசோதனைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் மூலம், அவை முறையான நிலையில் காணப்படுகின்றவா என்பது பற்றி உறுதி செய்யப்பட்டிருந்தன. டயர்களை கொள்வனவு செய்வதற்கான விசேட விலைக்கழிவு வவுச்சர்களும் விநியோகிக்கப்பட்டிருந்தன. DSL நிறுவனத்தின் ஊழியர்கள், சாரதிகளுக்கான விளக்கங்களை வழங்க தயாராக இருந்ததுடன், டயர்களின் பராமரிப்பு, அழுத்தம், வயது, தவாளிப்புகளின் ஆழம் மற்றும் வெளியே தென்படும் பழுதுகள் பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தனர். இந்த செயற்திட்டத்தை மோட்டார் வாகன சாரதிகள் பெருமளவில் வரவேற்றிருந்தனர். ஒவ்வொரு பங்குபற்றுநருக்கும் பிரத்தியேகமான டயர் பராமரிப்பு ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததுடன், தமது வாகனங்களுக்கு பொருத்தமான டயர்களை எவ்வாறு தெரிவு செய்வது என்பது தொடர்பிலான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டிருந்தன.

உலகின் முன்னணி டயர் உற்பத்தியாளர்களில் ஒன்றான Giti Tire, நுகர்வோருக்கு நம்பிக்கை வாய்ந்த டயர்களை உற்பத்தி செய்வதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், வீதிப் பாதுகாப்பு தொடர்பிலும் பெருமளவு கவனம் செலுத்தி வருகிறது. வீதிப் பாதுகாப்பு தொடர்பில் Giti Tire இன் விழிப்புணர்வை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஒன்றாக இந்த செயற்திட்டம் அமைந்துள்ளது. டயர்கள் பராமரிப்பு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.gtradial.com எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X