2025 மே 16, வெள்ளிக்கிழமை

Green Energy சம்பியன் 2019 வெற்றிகரமாக நிறைவு

Gavitha   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கல் தொடர்பில் பின்பற்றக்கூடிய புத்தாக்கமான வழிமுறைகளை இனங்காணும் வகையில் முன்னெடுக்கப்பட்ட Green Energy சம்பியன் 2019 ஸ்ரீ லங்கா போட்டி வெற்றிகரமாக முடிவடைந்திருந்தது.

Green Energy சம்பியன் 2019 ஸ்ரீ லங்கா போட்டிக்கு ஜேர்மன் கூட்டரசு வெளிநாட்டு அலுவலகம் நிதி வழங்கியிருந்ததுடன், Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH மற்றும் இலங்கை நிலைபேறான வலு அதிகாரசபை மற்றும் வலு அமைச்சு ஆகியன செயற்படுத்தியிருந்தன. 

இந்த போட்டியின் நிறைவு செய்யும் நிகழ்வை GIZ ஏற்பாடு செய்திருந்ததுடன், இதில் வலு இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஜேர்மனியின் தூதுவர் ஹொல்கர் சியுபேர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ”இந்தப் போட்டியை முன்னெடுத்தமைக்காக ஜேர்மனிய கூட்டரசு வெளிநாட்டு அலுவலகம் மற்றும் GIZ ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடாக அமைந்துள்ளது. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த அரசாங்கம் ஆகியன இணைந்து, காபன் வெளியேற்றத்தைக் குறைக்கும் பரிஸ் உடன்படிக்கையின் அம்சங்களை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். எனவே, எமது இலக்குகளை எய்துவது தொடர்பான கொள்கைக் கட்டமைப்புகளை நிறைவேற்றுவது என்பதற்கு பெருமளவு முன்னுரிமை வழங்கப்படும் என்பதுடன், இலங்கை எரிபொருள் சார் வலுப்பிறப்பாக்கல் என்பதிலிருந்து, நிலைபேறான புதுப்பிக்கத்தக்க வலுப்பிறப்பாக்கலை நோக்கி நகரும் நிலையில் இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.” என்றார்.

”மேலும், புதிதாக நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க வலு இராஜாங்க அமைச்சினூடாக, இது போன்ற திட்டங்களையும், பாரிஸ் மாநாட்டின் அர்ப்பணிப்புகளையும் முன்னெடுப்பது தொடர்பில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய அரசாங்கத்தின் சூழலுக்கு நட்பான வலுப் பிறப்பாக்கல் எனும் நோக்கத்தின் பிரகாரம் இவை முன்னெடுக்கப்படும். படிப்படியாக புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கலுக்கு மாறிக் கொள்வதனூடாக, அனைவருக்கும் பயன் பெறக்கூடியதாக இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். குறிப்பாக, புதிய தொழில் வாய்ப்புகள் தோற்றம் பெறும், வறுமை ஒழிப்பை ஏற்படுத்த முடியும், வலுப் பாதுகாப்பு மற்றும் அந்நியச் செலாவணியை சேமித்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.” என்றார்.

தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக முன்னெடுக்கப்பட்ட Green Energy சம்பியன் 2019 ஸ்ரீ லங்கா போட்டியில் நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருந்தது. இதிலிருந்து மூன்று சம்பியன்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அரச, தனியார் மற்றும் சிவில் சமூகம்/சமூக அடிப்படையிலான நிறுவனத் துறை போன்றவற்றிலிருந்து தலா ஒரு வெற்றியாளர் வீதம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந்த வெற்றியாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் முன்னணி நடுவர் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். வெற்றியாளர் ஒருவருக்கு தலா 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் உதவிகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.

இந்தத் திட்டத்தின் போது, எதிர்காலத்துக்கான வலுத் தேவையை நிவர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க வலு அடிப்படையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும் எனும் நிலைப்பாட்டை GIZ ஏற்படுத்தியிருந்தது.

இந்த போட்டி தொடர்பில் வலு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், ”இந்தத் திட்டத்தினூடாக தூய வலு மூலங்களை புத்தாக்கமான முறையில் பயன்படுத்துவது தொடர்பான ஆக்கபூர்வமான சிந்தனைகளை வெளிக் கொணர முடிந்துள்ளதுடன், வலுவை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பில் அனைவருக்கும் தமது சிந்தனைகளை வெளிப்படுத்த வாய்ப்பை வழங்கியிருந்தது. சகல துறைகளும் ஈடுபட்டுள்ள நிலைபேறான அபிவிருத்திக்கு இந்தப் புத்தாக்கங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. இந்தப் போட்டியினூடாக, ஒரு தகவலை சகல சமூகங்களிலும் பரவச் செய்ய முடிந்துள்ளதுடன், அணியின் அனைவரும் பங்கேற்று, சம்பியன் நிலையை பேண பங்களிப்பு வழங்கியிருந்தனர். மேலும், பங்காளர்கள் மற்றும் அணியினரிடையே காணப்பட்ட ஒற்றுமையும் பாராட்டுதலுக்குரியது.” என்றார்.

குளியாப்பிட்டிய பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தில் அதன் உயிரியல் வாயு கழிவு முகாமைத்துவ கட்டமைப்பு, கூரை மீதான சூரிய படல் கட்டமைப்பு மற்றும் சமூகத்தார் மத்தியில் நிலைபேறான செயற்பாடுகளின் ஊக்குவிப்பு போன்றவற்றுக்கு அரச துறையில் வழங்கப்பட்ட விருது வழங்கப்பட்டிருந்தது.

ஆரம்பநிலை நிறுவனமான தேர்மல் ஆர் இன்டர்ட்ரீஸ் (பிரைவட்) லிமிடெட், தனியார் துறையின் விருதை பெற்றுக் கொண்டது. ஐந்து 2 ஸ்ரோக் முச்சக்கர வண்டிகளை, மின்சாரத்தில் இயங்கும் வண்டிகளாக மாற்றியமைத்த புத்தாக்கமான பரீட்சார்த்த திட்டத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.

சமூக அடிப்படையிலான துறை பிரிவில், சப்ரகமுவ மக்கள் மையம் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. உள்ளூர் கித்துள் பாணி உற்பத்தித்துறைக்கு வலுவூட்டுவதற்கு நீர்மின்பிறப்பாக்கலை அதிகரிப்பது மற்றும் அருகாமையிலுள்ள பாடசாலைக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுக்க கூரைமீது சூரிய படல் மின்பிறப்பாக்கல் திட்டத்தை நிறுவியிருந்ததனூடாக மாணவர்களுக்கு தடையில்லாமல் கல்வியைத் தொடர வசதி ஏற்படுத்தியிருந்தமைக்காக வழங்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டம் தொடர்பில் இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஹொல்கர் சியுபேர்ட் கருத்துத் தெரிவிக்கையில், ”காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எதிர்மறைத் தாக்கங்கள் மற்றும் நிலைபேறற்ற வாழ்க்கை முறைகள் போன்றவற்றை அதிகளவு காண முடிகின்றது. நாம் தற்போதே செயலாற்றுவதனூடாக மாத்திரமே எமது எதிர்கால தலைமுறையினருக்கு இந்த உலகை வாழக்கூடியதாக ஒப்படைக்க வேண்டும். இந்த மாற்றத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம். ஒன்றிணைந்த அர்ப்பணிப்பினூடாக மாத்திரம் இந்த உலகின் அழகை எம்மால் பேணக்கூடியதாக இருக்கும் என்பதுடன், எதிர்காலத்திலு்ம உயிர்வாழ உகந்த பகுதியாக பேணக்கூடியதாக இருக்கும். புதுப்பிக்கத்தக்க வலு மற்றும் வலு வினைத்திறன் ஊடாக நாம் எதிர்நோக்கியுள்ள சூழல்சார் சவால்களுக்கு எம்மால் முகங்கொடுக்கக்கூடியதாக இருக்கும். ஜேர்மன் கூட்டரசு வெளிநாட்டு அலுவலகத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்ட Green Energy சம்பியன் திட்டத்தினூடாக எமது இலங்கையின் பங்காளர்களின் இலக்குகளுக்கு உதவிகளை வழங்க எதிர்பார்த்தோம். அதனூடாக, முழுமையாக புதுப்பிக்கத்தக்க வலுக்களுக்கு மாறும் இலங்கையின் நோக்கம் தொடர்பில் செயலாற்றுவது மற்றும் பசுமையான எதிர்காலத்துக்கு இலங்கையை நகர்த்துவது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு நாம் உதவிகளை வழங்கினோம்.” என்றார்.

இலங்கையில் நிலைபேறான தூய தீர்வுகளினூடாக வலு புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கு சிறந்த வாய்ப்பை இந்த போட்டி ஏற்படுத்தியிருந்தது. GIZ இன் உதவியுடன் சில புத்தாக்கமான வலு முன்னோடிகளால், தமது திட்டங்களை முன்னெடுக்க முடிந்துள்ளதுடன், எதிர்காலத்துக்கு உகந்த நிலைபேறான மாதிரிகளை வெளிப்படுத்தி அவற்றுக்காக விருதுகளையும் வெற்றியீட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .