2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'OnThree20' அடுக்குமாடியின் பணி முன்கூட்டியே நிறைவு

A.P.Mathan   / 2013 ஜூலை 17 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜோன் கீல்ஸ் லாண்ட் நிறுவனமானது, தனது 'OnThree20' எனும் வானுயர்ந்த அடுக்குமாடி குடிமனைத் தொகுதியின் மிகவும் மேம்பட்ட கட்டமைப்புப் பணிகள் நிறைவடைவது தொடர்பில் அறிவித்துள்ளது. இதன்படி, திட்டமிட்டிருந்ததை விடவும் முன்கூட்டியே இப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
 
'கொழும்பு நகர மத்தியிலமைந்த ஒரு பாலைவனச்சோலை' என வர்ணிக்கப்படும் 'OnThree20' ஆனது, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சொத்து தொடர்பான வணிகப் பிரிவாக திகழும் ஜோன் கீல்ஸ் லாண்ட் நிறுவனத்தின் மனநிறைவைத் தருகின்ற மற்றுமொரு நவீன குடியிருப்புத் தொகுதி அபிவிருத்தித் திட்டமாகும்.
 
பரபரப்பான தலைநகரும் வர்த்தக மாவட்டமுமான கொழும்பின் மையப் பகுதியாகவுள்ள யூனியன் பிளேஸில் உபாய ரீதியாக அமைக்கப்பட்டுள்ள 'OnThree20' அடுக்குமாடித் தொகுதியானது 475 குடியிருப்புக்களை உள்ளடக்கிய ஒவ்வொன்றும் 37 மாடிகளைக் கொண்ட மூன்று கோபுரங்களைக் கொண்டுள்ளது. அதேவேளை ஹோட்டல்கள், சுப்பர் மார்க்கட் விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றுக்கு மிகவும் அண்மித்ததாகவும் அமைந்துள்ளது. 
 
நேர்த்தி மற்றும் நவீன காலத்திற்கேற்ற பண்புகளை ஒருங்கே கொண்டதாக அமைக்கப்பட்ட 'OnThree20' அடுக்குமாடித் தொகுதியானது, சமகால வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான வசதிகளை ஒன்றாக இணைத்துள்ளது. நவீன வாழ்க்கை முறை தொடர்பான எதிர்பார்ப்புக்கு பொருந்தும் விதத்தில் இந்த குடிமனை கட்டிடத் தொகுதி நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படுகின்ற உலக நடப்புகளுக்கேற்ற கட்டிடக் கலை நுட்பம் மற்றும் சமகாலத்திற்கு அவசியமான வசதிகள் போன்றவை நகரில் வசிப்பதற்கு மிகப் பொருத்தமான இடமாக இதனை மாற்றியமைக்கின்றன. 
 
'திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே இந்த செயற்றிட்டத்தை முடிவுறுத்துவதற்கு எம்மால் முடியுமானதையிட்டு நாம் மிகுந்த மன மகிழ்ச்சியடைகின்றோம். உட்புற வேலைகள் மற்றும் செப்பனிடும் பணிகள் எற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. வாடிக்கையாளர்களுக்கு இங்குள்ள குடிமனைகள் ஒவ்வொன்றையும் டிசெம்பர் 2014 இல் கையளிப்பதற்கு தயாராக இருக்கும் வகையில் நாம் திட்டங்களை வகுத்துள்ளோம். இந்த செயற்றிட்டம் தொடர்பில் பெருமளவான ஆர்வம் காணப்படுகின்றது. எமது விற்பனை முயற்சிகளின் போது நாம் பெற்றுக் கொண்ட வெற்றிகளில் இருந்து அது தெளிவாகின்றது. தற்போது இங்குள்ள 80 வீதமான குடிமனைகளை நாம் விற்பனை செய்துள்ளதுடன், தொடர்ந்தும் உறுதிமிக்க வகையில் விற்பனை நடவடிக்கை முன்னேறிச் செல்கின்றது. தலைநகரில் மேலும் பல செயற்றிட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவுசெய்த எமது ஜோன் கீல்ஸ் லாண்ட் வர்த்தக குறியீட்டின் மீது கடந்த பல வருடங்களாக வாடிக்கையாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தமை குறித்து நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்' என்று ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சொத்துக்கள் குழும தலைவரான சுரேஸ் ராஜேந்திரா தெரிவித்தார். 
 
இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தொகுதி பிரதானமாக இரண்டு முதல் மூன்று வரையான படுக்கையறைகளை கொண்டதாக அமைந்திருக்கும். இப் படுக்கையறைகள் 907 சதுர அடி தொடக்கம் 1312 சதுர அடி வரையான பரப்பளவைக் கொண்டவையாக காணப்படும். இங்குள்ள குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளுள் - விசாலமான இயற்கை தோற்றமுள்ள பூந்தோட்டம், ஒரு வணிக நிலையம், ஒரு நடை பாதை, ஒரு மிகவும் முன்னேற்றகரமான உடற்பயிற்சி மையம், ஒரு நீராவி பிடிக்கும் அறை, ஒரு ஸ்குவாஷ் விளையாட்டுத் தளம், ஓர் உள்ளக விளையாட்டு அறை, ஒரு பெரிய கழக இல்லம், செழிப்பான பசுமைக்கு மத்தியலமைந்த மூன்று நீச்சல் தடாகங்கள் மற்றும் பல வசதிகள் உள்ளடங்குகின்றன. இதன்மூலம், கொழும்பு நகரின் இதயத்தில் அமையப்பெற்ற ஒரு 'பசுமை நுரையீரலாக' (Green Lung) இந்த அடுக்குமாடிக் கட்டிடத் தொகுதி மாற்றப்படுகின்றது. 
 
இவற்றிற்கு மேலதிமாக – காற்று சீராக்கி, சுடுநீர், 24 மணிநேர பாதுகாப்பு, வாகனத் தரிப்பிட வசதி, standby power மற்றும் ஏனைய அபரிமிதமான நவீனகால வசதிகள் அனைத்தையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறான சிறப்பம்சங்கள், கொழும்பிலுள்ள மிகவுயர்ந்த குடிமனைத் தொகுதிகளில் ஒன்றாக 'OnThree20' இனை மிளிரச் செய்கின்றன. ஆதலால், கிட்டத்தட்ட 80 வீதமான குடிமனைகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
 
சன்கன் (Sanken) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான பொறியியலாளர் ரஞ்சித் குணதிலக்க கூறுகையில், 'உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் துறைசார் அனுபவத்தைப் பெற்றுள்ள இலங்கையின் 'நம்பர் 1' கட்டிட நிர்மாண நிறுவனம் என்ற வகையில், 'வடிமைப்பு– நிர்மாண' பணிகளை ஒருங்கே கொண்ட இந்த ஒப்பந்தத்திற்காக ஜோன் கீல்ஸ் நிறுவனத்துடன் பங்காளியாக ஒன்றிணைந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இதனது அனைத்துப் பணிகளையும் திட்டமிட்டதை விடவும் முன்கூட்டியே நிறைவு செய்வதை இலக்காகக் கொண்டு நாம் செயற்படுகின்றோம். இந்த செயற்றிட்டத்தின் மிகச் சிறப்பான முன்னேற்றமானது சன்கன் பணிக் குழுவின் பரந்தளவிலான அனுபவம், அறிவு மற்றும் தொழில்சார் நிபுணத்துவம் என்பவற்றுக்கு ஓர் அத்தாட்சியாக அமைகின்றது என்பதை தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமிதம் அடைகின்றேன். இத் திட்டத்தின் இறுதி உற்பத்தியான 'OnThree20' அடுக்குமாடித் தொகுதியை திட்டமிட்டிருந்ததை விடவும் முன்னதாக, அதாவது 2014ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் வழங்கக் கூடியதாக இருக்கும் என்று நாம் இப்போது நம்பிக்கை கொண்டுள்ளோம்' என்றார்.
 
'OnThree20' அடுக்குமாடித் தொகுதியின் உருவாக்குனரான ஜோன் கீல்ஸ் லாண்ட் (John Keells Land) நிறுவனம், மிகப் புகழ்பெற்ற கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் ஓர் உப நிறுவனமாகும். 'OnThree20' ஆனது, குழுமத்தின் மூன்றாவது அபிவிருத்தித் திட்டமாக அமைவதுடன் மேலும் பல செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. 
 
இலங்கையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப் பெரிய கம்பனியாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் திகழ்கின்றது. அத்துடன் பிட்ச் ரேட்டிங் லங்கா லிமிட்டெட் இடமிருந்து AAA (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு, விடுமுறைகால வசதிகள், சொத்து, நுகர்வோர் பொருட்கள் மற்றும் சில்லறை வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதியியல் சேவைகள் போன்ற துறைகளில் இக் குழுமமானது வணிக ரீதியிலான ஆர்வத்தைக் கொண்டியங்குகின்றது. 
 
இச் செயற்றிட்டம் தொடர்பான விபரங்களை www.onthree20.com என்ற இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ள முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .