2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இரணைமடுக் குளமும் வற்றியது

Yuganthini   / 2017 ஜூலை 27 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்  
900 ஏக்கர் பயிர்ச்செய்கைக்கும் ஒரு தடவை மாத்திரமே நீர் விநியோகம் செய்வதற்கு இரணைமடுக் குளத்தில் நீர் உள்ளது என, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.  

இரணைமடுக் குளத்துக்கு இன்று (27) சென்ற பிரதிப் பணிப்பாளர், அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.  

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம், அடிநிலையைச் சென்றடைந்ததையடுத்து, இக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கை மட்டுமல்ல, கிளிநொச்சி நகரையும் நகரை அண்டிய பகுதிகளிலும் கிணறுகளின் நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்து, பெரும் நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  

“இரணைமடுக் குளத்தின் நீர் மட்டத்தில்தான், கிளிநொச்சி நகரத்தின் நிலத்தடி நீர் தங்கியுள்ளது. இந்நிலையில் கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சிக்குளம் என்பன ஏற்கெனவே நீர் மட்டம் குறைந்த நிலையில், இரணைமடுக் குளமும் நேற்று முதல் நீர்ப்பாசனம் மேற்கொள்ள முடியாதளவுக்கு, நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் இரணைமடுக் குளத்தின் கீழான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.  

இதன்படி, இரணைமடுக்குளத்தின் கீழான 900 ஏக்கர் பயிர்ச்செய்கைக்கும், குளத்தின் நடுப்பகுதியில் உள்ள நீரை, இயந்திரங்களின் உதவியுடன் ஒரு தடவை மாத்திரமே நீர்ப்பாசனம் செய்ய வழங்கக்கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X