2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஒரே இரவில் 43 இந்திய மீனவர்கள் கைது

Niroshini   / 2021 டிசெம்பர் 19 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றொசேரியன் லெம்பேட், செந்தூரன் பிரதீபன்

 

எல்லை தாண்டி மீன்பிடித்தக் குற்றச்சாட்டில், இராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையால் இராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில், சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, நேற்று (18) சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், இராமேஸ்வர மீனவர்கள் தமிழக அரசு வழங்கும் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் நெடுந்தீவுக்கும் இடையே  மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, நேற்று (18) இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக குற்றஞ்சாட்டப்பட்டு, தென்னரசு, லியோன் பீட்டர், கருப்பையா உள்ளிட்ட ஆறு பேருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகுகளையும் அதில் இருந்த கோபி, சக்தி, பிரபு, குட்வின், கருமலையான், ராஜு உட்பட 43 மீனவர்களையும் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாணம் - மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, பிசிஆர் பரிசோதனை செய்து, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், குறித்த மீனவர்கள் பிடித்து மீன்களையும், இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

ஒரேநாள் நள்ளிரவில், இராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்த சம்பவத்துக்கு, இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது..

தொடர்ந்து இலங்கை பிரச்சினை காரணமாக, பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு, மாற்று தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்க செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என, இராமேஸ்வரம் மீனவ சங்கம் தெரிவித்துள்ளது

'எனவே, போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசாங்கத்துடன் பேசி, நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்' எனவும், அச்சங்கம் கூறியுள்ளது.

அத்துடன், மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து, தமிழக மீனவர்களை ஒன்றிணைத்து, போராட்டமொன்றை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இராமேஸ்வரம் மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .