2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஓகஸ்ட் 5இல் தேர்தல்; மீண்டும் உறுதிபட தெரிவித்தார் தவிசாளர்

Editorial   / 2020 ஜூலை 14 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் முல்லைத்தீவுக்கு, இன்று மாலை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்த தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, உதவி தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்ததோடு, தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்ட பின்னர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளரைச் சந்தித்து மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் தேர்தல் திணைக்கள உயரதிகாரிகள் ஆகியோருடன்  கலந்துரையாடல் ஒன்றையும்  மேற்கொண்டிருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் இதன்போது கேட்டறிந்து கொண்டு இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காக வடமாகாணத்தின் மாவட்டங்களில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலர்கள் உதவி தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடும் முகமாக, இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதெனவும் கூறினார்.

“அந்த வகையில், நேற்றைய தினம் காலையில் மன்னார் பின்னர் வவுனியா அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இயங்கும் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது” எனவும், அவர் தெரிவித்தார்.

“இதனைவிட தேர்தல் திணைக்களத்தில் இருக்கின்ற மேலும் இரண்டு பிரதி தேர்தல் ஆணையாளர்கள்  கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் நாளையும் நாளை மறுதினமும் கலந்துரையாட உள்ளார்கள்.

“இப்போதைய சூழ்நிலையில் இந்த நாட்டிலே  ஓகஸ்ட் 5ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்குரிய முழு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணைக்குழு முன் எடுத்திருக்கின்றது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொடர்பில்  அனைவரும் இரண்டாவது அலை  என்று கூறப்பட்டாலும், அது சுகாதார தரப்பினரால் இதுவரை இரண்டாவது அலை  என தெரிவிக்கப்படவில்லை. தற்போதும் முதலாவது அலையினுடைய தாக்கம் என்றே  தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்தக் காலப்பகுதியில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு உள்ளது” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .