2025 மே 17, சனிக்கிழமை

தடைகளையும் மீறி நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன், செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் படுகொலையின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, பொலிஸாரின் தடைகளையும் மீறி, சுதந்திரபுரம் - வெள்ளப்பள்ளம் இந்து மயானத்தில், இன்று (10) முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.

இந்தப் படுகொலையின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்றைய தினம் முற்பகல் 9.30 மணியளவில், சுதந்திரபுரம் நிரோயன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதன்போது, நினைவேந்தல் நிகழ்வுக்கு வருகை தந்தவர்களை, புதுக்குடியிருப்பு பொலிஸார் இவ்விடத்தில் இருந்து செல்லுமாறு பணித்ததுடன், நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கும் தடைவிதித்தனர்.

இதையடுத்து, சுதந்திரபுரம் சந்தி பகுதியின் இருமருங்கிலும் விளையாட்டுக்கழக மைதானத்தைச் சூழவும் பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, அவ்வழியே சென்றவர்கள் அனைவரது அனுமதிப் பத்திரங்களும் பரிசோதிக்கப்பட்டதுடன், நினைவேந்தல் நிகழ்வு நிறுத்தப்பட்டு, ஏற்பாட்டாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், இந்த இடத்திலிருந்து திரும்பிச் சென்ற ஏற்பாட்டாளர்கள், உயிரிழந்த உறவுகளில் ஒரு பகுதியினரை அடக்கம் செய்த சுதந்திரபுரம் - வெள்ளப்பள்ளம் இந்து மயானத்துக்குச் சென்று, நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர்.

இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கனகராசா ஜீவராசா, விசுவமடு - தேராவில் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் குழுவின் தலைவர் தம்பையா யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .