2025 மே 21, புதன்கிழமை

பால வேலைகள் இடைநிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயன் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலம் இரு மாதங்களாக வேலைகள் நிறுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக, போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக, அக்கராயன் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஆயிரம் பாலங்கள் அமைக்கும் திட்டத்தில், திருமுறிகண்டி அக்கராயன் வீதியில் இப்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும் இரு மாதங்களாக வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பால வேலைகள் தொடங்கும் போது கிராமத்தின் வழியான மாற்றுவழி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வீதி மழை காலங்களில் பயன்படுத்த முடியாது. இதனை விட அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வண்டி கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு குறித்த பாலம் வழியாகவே பயணத்தினை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது நோயாளர்களுடன் மாற்றுவழி ஊடாகவே பயணிக்க வேண்டி உள்ளது.

இதனைவிட அக்கராயன் மகா வித்தியாலயம், அக்கராயன் ஆரம்ப வித்தியாலய மாணவர்கள் நீண்ட தூரம் சுற்றி மாற்று வழியைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் பால வேலைகள் முடிக்க வேண்டும் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த இருபது நாள்களுக்கு முன்னரும் குறித்த பாலப்பகுதி வேலைகளைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பால வேலைகளில் ஈடுபடுகின்ற வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி இருந்தார்.

தற்போதுள்ள பிரச்சினை குறித்த பால வேலைகள் நிறுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி தொடர்ந்து மாற்று வழியைப் பயன்படுத்த முடியாது. பாடசாலை மாணவர்களும் மக்களும் மாற்று வழியினைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது.

அக்கராயன் எரிபொருள் நிலையத்துக்கு எரிபொருள் கொண்டு வருவதில் குறித்த பால வேலைகளினால் தடைகள் ஏற்பட்டுள்ளன. அக்கராயனில் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் ஒழுங்காக முன்னெடுக்கப்படுவதில்லை என்பதற்கு குறித்த பால வேலைகள் உதாரணமாக உள்ளன. ஒரு போக்குவரத்து வீதியினை தடை செய்து விட்டு வேலைகளும் இடம் பெறாமல் மக்களை மாற்று வழியினைப் பயன்படுத்துங்கள் என ஏனோதானோ என அதிகாரிகள் நடந்து கொள்வது பொது மக்கள் மத்தியில் கடும் விசனத்தினை உருவாக்கி உள்ளது.

குறித்த பால வேலையை விரைவு செய்து அக்கராயன் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி கிளிநொச்சிக்குச் செல்வதற்கும் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கும் விரைவாக பாலம் உருவாகுவதற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அக்கராயன் பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .