2025 மே 22, வியாழக்கிழமை

‘மாங்குளம் வைத்தியசாலையின் வளங்கள் பெருக்கப்படும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் வளங்களைப் பெருக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வைத்தியசாலையில் விபத்துப் பிரிவையும் பிரேத அறையையும் அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.

ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில், நேற்று (05) நடைபெற்றது.

இதன்போது, குறித்த வைத்தியசாலையில் பிரேத அறை இல்லாததன் காரணமாக, சடலங்கள் திறந்த வெளியில் ஓர் ஓரத்தில் வைக்கப்படுவதாகவும் பின்னர், இச்சடலங்கள் முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும், மாங்குளம் வைத்தியசாலைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரியை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், மகப்பேற்றுக்காக மாங்குளம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குச் செல்லும் பெண்கள் போக்குவரத்து நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாக, அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டினர்.

மக்களின் கருத்தை கேட்டறிந்து கருத்துரைத்த போதே, சி.சிவமோகன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதையடுத்து, கருத்துரைத்த சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா என்.பி, மாங்குளத்தில் திடீர் மரண விசாரணை அதிகாரியை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .