2025 மே 17, சனிக்கிழமை

’யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை குண்டுசட்டிக்குள்ளே குதிரை ஓட்டுகிறதா?’

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தமிழ் துறையில் இருப்பவர்கள், குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றார்களா?” என, வவுனியா தமிழ் சங்கத்த் தலைவர் தமிழருவி த.சிவகுமார் கேள்வியெழுப்பினார்.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்னால், இன்று (10) நடைபெற்ற திருவள்ளுவர் குரு பூஜை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அனைத்தையும் இறக்குமதி செய்யும் இந்திய தேசம், திருவள்ளுவரை மாத்திரமே உலகுக்கு ஏற்றுமதி செய்ததாகவும் வள்ளுவரை அனைத்து மதமும் சொந்தம் கொண்டாடுகின்றனவெனவும் கூறினார்.

ஆனால் இன்று திட்டமிட்டு, வள்ளுவரின் பெருமையைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வதற்காக, சமஸ்கிருத அறிஞர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனரெனவும், அவர் சாடினார்.

அண்மையில், யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் கைலாசபதி அரங்கில் நடைபெற்ற திருவள்ளுவர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், தமிழ் நாட்டிலிருந்தும் பலர் கலந்துகொண்டிருந்தனரெனத் தெரிவித்த அவர், அந்த மாநாட்டால் பயனடைந்தவர்கள் மிகவும் குறைவெனவும் சாடினார்.

அத்துடன் நிகழ்ச்சிகளில், யாருக்கும் சரியான அறிவித்தலும் அழைப்புகளும் வழங்கப்படவில்லையெனக் குற்றஞ்சாடிய அவர், யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தினுடைய தமிழ் துறை என்ன செய்கிறதெனவும் அந்த துறையிலே இருப்பவர்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓடிக்கொண்டிருக்கின்றார்களா எனவும் கேள்வியெழுப்பினார்.

யாழ்ப்பாண மக்களுக்கு திருக்குறளிலே அக்கறையில்லையென்று, மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளதாகவும் உண்மையில் வள்ளுவரைப் போற்றுகின்ற தன்மையை பார்க்க வேண்டுமானால், அந்தப் பேராசிரியர் வவுனியாவுக்கு வர வேண்டுமென்றும், சிவகுமார் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .