2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

‘வாக்குறுதியை மீறிவிட்டார் இராஜாங்க அமைச்சர்’

Yuganthini   / 2017 ஜூலை 26 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
உரிய பதிலை வழங்குவதாகத் தெரிவித்துச் சென்று, ஒரு மாத காலமாகியும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியவாறு உரிய பதிலை இதுவரை வழங்கவில்லை என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள், தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி, மே மாதம் 1ஆம் திகதி முதல், முழங்காவில் இரணைமாதா நகரில், தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த 28 ஆம் திகதி இங்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இரண்டு வாரங்களுக்குள் உரிய பதிலை வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஒரு மாத காலமாகியும், எமக்கான பதிலை இதுவரை தெரிவிக்கவில்லை.

“இதேவேளை பல அரசியல்வாதிகளும் எம்மைச் சந்தித்தனர். எனினும் எவரும் எமக்கான தீர்வைப் பெற்றத்தரவில்லை. நாம், 3 மாத காலமாக இவ்வாறு வீதியில் இருக்கின்றோம்” என தெரிவித்தனர்.

இரணைதீவு மக்கள், ஜூன் மாதம் 23 ஆம் திகதி, ஏ-32 வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் குறித்த இடத்துக்கு விரைந்த பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், “எதிர்வரும் புதன்கிழமை (ஜூன் 28ஆம் திகதி), பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் நானும் கலந்து கொள்வேன். கலந்துரையாடலில் இரணைதீவு தொடர்பாகத் தெரிவிப்பேன். அப்போது பாதுகாப்புக் அமைச்சு கூட்டத்தில் தெரிவிக்கின்ற முடிவை உங்களிடம் தெரிவிக்கின்றேன். அதுவரை அமைதி காக்கவும்” எனத் தெரிவித்தமைக்கு அமைய, வீதி மறியல் போராட்டத்தைக் கைவிட்ட மக்கள், தாம் வழமை போன்று, இரணைமாதா நகரில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1992ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்த இடம்பெயர்ந்த 336 குடும்பங்களைச் சேர்ந்த 1,214 பேர், மீள்குடியேறுவதற்கு விண்ணப்பங்களைச் செய்துள்ளபோதும், மீள்குடியேறுவதற்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X