2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னார் தீவுப்பகுதி கிராமங்களுக்கு கடல் நீர் புகுந்தது; 1,428 குடும்பங்கள் இடம்பெயர்வு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 28 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, 1,428 குடும்பங்களைச் சேர்ந்த 5,658 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.ஏ.சி.முஹமட் றியாஸ் தெரிவித்தார்.

மன்னார் பிரிதேச செயலாளர் பிரிவில் 758 குடும்பங்களைச் சேர்ந்த 2903 பேரும், நாணாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பரிவில் 658 குடும்பங்களைச் சேர்ந்த 2,714 பேரூம் இவ்வாறு பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாக  மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.ஏ.சி.முஹமட் றியாஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று (28) வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் கடல்நீர் பல கிராமங்களுக்குள் உட்சென்றமையினால் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உப்புக்குளம் தெற்கு, கோந்தைப்பிட்டி கிராமத்தினுள் கடல்நீர் புகுந்துள்ளமையினால் அக்கிராமத்தில் வசிக்கும் 45 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இக்கிராமம் கடல் நீரினால் மூழ்கியுள்ளது. இக்கிராம மக்கள் உப்புக்குளம், கோந்தைப்பிட்டி பள்ளிவாசலில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேவேளை பள்ளிமுனை 41 வீட்டுத்திட்டம், பள்ளிமுனை 49 வீட்டுத்திட்டம், பள்ளிமுனை 50 வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களிலும் கடல் நீர் புகுந்துள்ளமையினால் 140 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மக்கள் பள்ளிமுனையில் உள்ள பொது மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சௌத்பார் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கடல்நீர் புகுந்துள்ளமையினால் 105 குடும்பங்களைச் சேர்ந்த 515 பேர் இடம்பெயர்ந்து சௌத்பார் பொது மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்களை மன்னார் பிரதேசச் செயலகம் வழங்கி வருகின்றது. அதேவேளை ஜீவபுரம், கிருஸ்ணபுரம், சாந்திபுரம் ஆகிய கிராம மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை தலைமன்னார் பியர், எருக்கலம்பிட்டி மேற்கு கிராம மக்களின் இயல்பு நிலையும் பாதீக்கப்பட்டுள்ளது.

பாதீக்கப்பட்ட மக்களை மன்னார் பிரதேசச் செயலாளர் கே.வசந்தகுமார், வடமாகாண சபை உறுப்பினர் ஞானசீலன் குணசீலன், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோ, மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், மன்னார் நகர சபை உறுப்பினர்களான இ.குமரேஸ், மெரினஸ் பெரேரா, என்.நகுசீன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதே வேளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் 120 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இடம் பெயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .