2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'78 முதல் 82 சதவீதமான தமிழ் மக்கள், மைத்திரிக்கே வாக்களிப்பர்'

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 04 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


ஜனாதிபதித் தேர்தலில் 78 முதல் 82 சதவீதமான தமிழ் மக்கள், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களிப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி அமைப்பாளர் ரோகண கமகே தெரிவித்தார்.

வவுனியா, கோவில்குளத்திலுள்ள விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (03)  மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதைக் கூறினார்.

இங்கு  அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆய்வை, நான் கற்ற பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும் மாணவர்களும்  மேற்கொண்டிருந்தனர். இந்த ஆய்வின் மூலம் வடக்கு, கிழக்கை சேர்ந்த 90 முதல் 92 சதவீதமான தமிழ் மக்கள்; இம்முறை வாக்களிப்பார்கள். இதில் 78 முதல் 82 சதவீதமானவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.

நடைபெறவுள்ள  தேர்தல் சுதந்திரமானதாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதன் காரணமாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியமாக உள்ளனர்.

இந்த நாட்டில் பொலிஸாரினாலோ,  அரசாங்கத்தினாலோ வேறு எவராலுமோ எமக்கு பாதுகாப்பு இல்லை. எமக்கு ஊடகமொன்றே பாதுகாப்பானது. இதைச்; சொல்ல நான் தயார். இதனால் வரும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதற்கும் தயார். சிறையில் அடைத்தால், அடைக்கட்டும். அதிலும் மனிதர்கள்தானே இருக்கவேண்டும். சிறைகளை கட்டிவிட்டு நாய்கள் இருக்கமுடியாது.

யுத்தம் முடிந்த பின்னர் நாடு பல அபிவிருத்திகளை கண்டிருக்கவேண்டும். ஆனால், இன்று நாடு மிக மோசமாக சென்றுவிட்டது. மக்களின் பொருளாதாரம், பாதுகாப்பு, அபிவிருத்தி, நீதித்துறை, மக்கள் கலாசாரம், ஆகியவற்றுக்கு பாதுகாப்பு வேண்டும். ஆனால், இன்று அது இல்லை.
தற்போது 3,000 முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்களை சந்தித்து நீங்கள் இத்தேர்தலில் வாக்களிக்காதுவிட்டால், சிறப்பானது எனவும் அவ்வாறு செய்தால், சம்பளம் அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் சமுர்த்தி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் பொருட்கள் வழங்குவதற்கு பெயர்கள் கோரப்பட்டு, இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்காதுவிட்டால் அவர்களுக்கு பொருட்கள் வழங்குவதாக பிரசாரம் செய்யப்படுகின்றது.

அத்துடன், கிளிநொச்சியில் உள்ள பண்ணையில் 6,000 குடும்பங்கள் உள்ளன. அவர்கள் அரசாங்க கட்சிகளை தவிர, வேறு எவரும் சென்று சந்தித்து கலந்துரையாட முடியாத வகையில்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே, இவர்களையும் வாக்களிக்கவிடாது செய்வார்கள். யாழ்ப்பாணத்திலும் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல முடியாதவாறு தடுக்கப்படுவார்கள்.

அண்மையில் காணி வழங்குவதாக மக்களுக்கு ஜனாதிபதி கடிதமொன்றினையே வழங்கினார். இந்த தேர்தலில் அவர்கள் வாக்களிக்காதுவிட்டால், அவர்களுக்கு உறுதி தரப்படும் என பிரசாரம் செய்யப்படுகின்றது.

இதன் மூலமாக இந்த அரசாங்கம் 3 இலட்சம் வாக்குகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இல்லாமல் செய்து தாம் வெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், இத்தடைகளை தாண்டி மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.ஐக்கிய தேசியக்கட்சியானது இலங்கை மக்களுக்கான இன, மத, மொழிகளை கடந்த கட்சி' என்றார். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .