2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலவச மண்ணினை பெற அனுமதி மறுப்பு: சி.சிவமோகன்

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

மீள்குடியேறியுள்ளவர்கள் வீடுகளை அமைப்பதற்கு மண்ணினை பெற்றுக்கொள்வதற்கு மாந்தை கிழக்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மீள்குடியேறியள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த  வீட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியானது தற்போது உள்ள சூழ்நிலையில் வீட்டினை முழுமையாக அமைப்பதற்கு போதுமானதாக இல்லை.

இதனால் மக்கள் மிகுந்த கஷ்டத்துடனேயே வீடுகளை அமைத்து வருகின்றனர். அத்துடன் இந்த வீட்டுத திட்டங்களை குறிப்பிட்ட கால எல்லைக்குள் அமைத்து முடிக்க வேண்டும் எனவும் மக்களுக்கு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க, வீட்டுத் திட்டத்திற்கான மணலைப் பெற்றுக் கொள்வதற்கு தமக்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த இலவச மணல் ஏற்றும் அனுமதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் இதனால் தமது வீட்டுத் திட்ட நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளது எனவும் மீள்குடியேறியுள்ள மாந்தை கிழக்கு மக்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே, எமது வீட்டுத்திட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான மணலைஇலவச மணல் பெறும் அனுமதியை பெற்றுத் தருமாறும் மக்கள் என்னிடம் கோரிக்கை விட்டுள்ளனர். அண்மையில், அனுமதி பெற்று தமது வீட்டு நிர்மாணத்திற்கு மணல் அள்ளச் சென்ற பொதுமக்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினர். நீதிமன்றத்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் ஒப்பந்தக்காரர்கள் தமது இஸ்டத்திற்கு மணலை ஏற்றி வேறு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை யாரும் இதுவரை தடுக்கவில்லை. மீள்குடியேறியுள்ள மக்களுக்கு ஒரு சட்டமும், ஒப்பந்தக் காரருக்கு ஒரு சட்டமுமா இந்த நாட்டில் இருக்கின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் அங்கலாய்கின்றனர். எனவே, மேற்பட்ட அநீதிகளை கட்டுப்படுத்தி மீள்குடியேறியுள்ள மக்களின் வீட்டு நிர்மாணத்தை பூர்த்தி செய்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X