2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அரச காணிகளில் குடியிருப்போரின் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே அநுராதபுரத்தில் கூட்டம்

A.P.Mathan   / 2013 நவம்பர் 04 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி. சிவகருணாகரன்
 
நீண்டகாலமாக அரச காணிகளில் குடியிருக்கும் மக்களின் பிணக்குகளுக்குத் தீர்வு காணும் முகமாகவே இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவினால் அநுராதபுரத்தில் விசேட கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதை ஊடகங்கள் திரிவு படுத்தியிருக்கின்றன என வடமாகாண காணி ஆணையாளர் என்.தயானந்தா தெரிவித்துள்ளார். 
 
எதிர்வரும் 05, 06, 07ஆம் திகதிகளில் அநுராதபுரத்தில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் படையினருக்கான காணிச் சுவீகரிப்பைப் பற்றி ஆராயப்படவுள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் தவறானது எனவும் அவர் மேலும் தெரிவித்தனர். இந்தத் தகவலை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கும்போது,
 
2013/1 இலக்க காணி சுற்றுநிருபத்திற்கு அமைவாக அரச காணிகளில் குடியிருக்கும் மக்களின் பிணக்குகளுக்கு அந்தந்த பிரதேச செயலாளர்கள் தீர்வுகளைக் கண்டு வருகின்றனர். இருந்த போதிலும் பல பிணக்குகளுக்கு பிரதேச செயலாளர்களால் தீர்வுகள் காணமுடியாதுள்ளது.
 
எனவேதான் பிரதேச செயலாளர்கள் இவ்வாறான பல இடங்களில் கொள்கை ரீதியான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அவ்வாறான பிணக்குகளை எவ்வாறு கொள்கை ரீதியாக தீர்த்து வைப்பது என்பது தொடர்பில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவினால் எற்பாடு செய்யப்பட்ட ஒரு பயிற்சிக் கலந்துரையாடலே எதிர்வரும் 05, 06, 07ஆம் திகதிகளில் அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கிறது என வட மாகாண காணி ஆணையாளர் தயானந்தா, யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மவாட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 
நேற்று (03.11.2013) பத்திரிகைகளில் வெளியான மேற்படி காணி சம்பந்தமான கூட்டம் தொடர்பிலான செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
 
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான கலந்துரையாடல்கள் காலத்திற்கு காலம் நடைபெறுவது வழமை எனவும், அந்த வகையிலேயே மேற்படி திகதிகளில் அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கின்ற கூட்டமும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட காணி தொடர்பான பிணக்குகளும், புதன்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட காணி பிணக்குகளும், வியாழக்கிழமை மன்னார், வவுனியா மாவட்ட காணிப் பிணக்குகளும் ஆராயப்படவிருக்கின்றன. இதனைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.  
 
காணி தொடர்பிலான இவ்வாறான கூட்டங்கள் அடிக்கடி கடந்த காலங்களில் கொழும்பிலும் நடந்துள்ளன. எனவே உண்மைத்தன்மை அவ்வாறிக்க சில ஊடகங்கள் ஏன் இவ்வாறு தவறான செய்தியினை வெளியிட்டுள்ளன என அவர்களைதான் கேட்க வேண்டும் என வட மாகாண காணி ஆணையாளர் தயானந்தா தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை இங்கு கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், எதிர்வரும் வாரம் அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் காணி தொடர்பான கூட்டமானது 2013/1 காணி சுற்று நிருபத்திற்கு அமைவாக பிரதேச செயலாளர்களால் தீர்வுகள் காண முடியாத அரச காணிகள் தொடர்பான பிணக்குகளுக்கு கொள்கை ரீதியாக எவ்வாறு தீர்வுகளைக் காண்பது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமே நடைபெறவுள்ளது. மாறாக காணி சுவீகரிப்பு சம்பந்தமான கூட்டம் அதுவல்ல எனத் திட்டவட்டமாக கூறமுடியும், எனத்தெரிவித்தார். மேலும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவானது காணி சுவீகரிப்புக்கு ஆதரவாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்யவில்லை. அவர்கள் அதனை எற்றுக்கொள்ளப் போவதும் இல்லை. கடந்த முப்பது வருடங்களாக வடக்கில் காணிகள் தெடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்து வைப்பது சம்பந்தமான ஒரு பயிற்சிக் கூட்டமாகவே எதிர்வரும் 5, 6, 7ஆம் திகதிகளில் அநுராதபுரத்தில் நடக்கவிருக்கிறது என அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, நீதியமைச்சின் கீழ் உள்ள இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவானது வடக்கு, கிழக்கில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களின் பிணக்குகளை தீர்க்கின்ற போது பிரதேச செயலாளர்கள் கொள்கை ரீதியான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கொள்கை ரீதியாக எதிர்கொள்கின்ற பிணக்குகளை எவ்வாறு தீர்த்து வைக்கலாம் என்பது தொடர்பிலான ஒரு பயிற்சி கூட்டமாகவே எதிர்வரும் வாரம் அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கிறது தவிர, காணி சுவீகரிப்பு சம்பந்தமான கூட்டம் அல்ல என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X