2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மனிதாவிமான பணியாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை கண்டித்து கண்டனப் பேரணி

Menaka Mookandi   / 2013 நவம்பர் 22 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை என்பவருடைய வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை அதிகாலை சென்ற இனந்தெரியாத குழுவினர் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டமையினை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் கண்டன பேரணி இடம்பெற்றது.

மன்னார் பிரஜைகள் குழு, தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவை மற்றும் மன்னார் மாவட்ட காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த கண்டனப் பேரணியினை நடத்தினர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் குறித்த கண்டனப்பேரணியில் ஈடுபட்டனர்.

இதன்; போது குறித்த போரணியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்;னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி வி.சத்தியலிங்கம், வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சார் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா, தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.ஜேசுதாசன், நீர்கொழும்பு காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவர் எஸ்.பிரிட்டோ, அருட்தந்தையினர், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கண்டனப் பேரணியானது மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை என்பவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் காணாமல் போனவர்களது பிரச்சினைகள் தொடர்பாக கடமையாற்றுகின்ற பணியாளர்களுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை கண்டித்தே முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கண்டனப் பேரணி மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தை சென்றடைந்தது. இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை சமூகமளித்தார்.

இந்த நிலையில் குறித்த பேரணியில் வருகை தந்த முக்கியஸ்தர்களுக்கும், மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.டி.பி.சுகதபால மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துசார தலுவத்தவிற்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் பணியாற்றுகின்றவர்களுக்கு 'புலனாய்வுத்துரை' என்ற பெயரில் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பாக அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த பேரணி மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கு மகஜர் வழங்கும் முகமாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மெல்லிடம் கையளித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X