2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

த.தே.கூ.வுக்கு காமராஜர் திட்டம் அவசியம்: வி.எஸ்.சிவகரன்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 26 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு காமராஜர் திட்டம் அவசியம் என தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று (26) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அங்கத்துவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில். 'எமக்கு ஏற்றமிகு அரசியல் சிந்தனையுள்ள இலட்சியம்மிகு சிந்தனை உருவாக்கப்பட்ட வேண்டும். அவ்வாறான சூழல் ஏற்படுவதற்கு இளைஞர்களின் வகிபாகம் மிகவும் இன்றியமையாதாக உள்ளது.

நல்லவர்கள் நேர்மையானவர்கள் சமூக சிந்தனையுள்ளவர்கள் தமிழ் தேசியத்தில் விசுவாசமுள்ளவர்கள் என எம்மை நாம் மாற்றும் போதுதான் நாம் எங்களுடைய நிலைப்பாட்டை தக்க வைத்துக்கொண்டு அரசிலினை முன்னகர்த்த முடியும்' என்றார்.
 
'உப்புச்சப்பு இல்லாத மாகாணசபையிலே தமிழ் தேசியம் என்ற உயர்ந்த இலச்சியத்துடன் உயர்ந்த கோட்பாட்டுடன் 5 இலட்சம் மக்களை பலிகொடுத்து 47 ஆயிரம் போராளிகளை இழந்து 89 ஆயிரம் விதவைகள் வடக்குகிழக்கில் வைத்துக்கொண்டு 32 ஆயிரம் தபுதாரர்களையும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான அநாதைகளையும் 27 ஆயிரம் அங்கவீனர்களையும் வைத்தக்கொண்டு எங்களுடைய நிலங்கைளயும் நாங்கள் இழந்துகொண்டு மாகாணசபையின் இலக்கு அல்லது அலகு எமக்கு தீர்வாக அமையுமான என்று சிந்திக்க வேண்டும் என்பதுடன் தீர்வின் தொடக்க புள்ளியாக கூட கருத முடியாது.

ஆதிகாரமில்லாத அமைச்சுப் பதவிக்காவும் சத்தியப்பிரமாணத்திலும் எம்மவர்களின் கொள்கை கோட்பாடுகளை சந்தி சிரித்தது என்பதனை யாராலும் மறந்து விட முடியுமா? தமிழ்த் தேசிய இனவிடுதலை அரசியல் கோட்பாட்டிற்கு பதவி மோக போட்டி எமக்கு ஏற்புடையதா? 
ஆனால் இந்த தேர்தல் அழித்தவர்களக்கும் அழிந்தவர்களுக்குமான தேர்தல் என்பதனாலும் அழிந்தவர்கள் அழித்தவர்களை தோற்றகடிக்க வேண்டிய தேவையிருப்பதனாலும் வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முகம்கொடுத்தோம்.

ஆனால் தேர்தல் முடிந்து விட்டது என்ற நிலையில் இருந்துகொண்டு இந்த மாகாணசபையால் செயலாற்ற முடியுமா என்ற கேள்வி உள்ளது. ஆளுனர் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பாரா? இந்த மாகாணசபை இயங்குமா? இயங்கக்ககூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்துமா? என்ற கேள்விகள் நிறையவே உள்ளது. ஆனாலும் தன்னால் கொண்டு வரப்பட்ட மாகாணசபையை தமிழர்களுக்கு திணித்து அதற்கு மேல் தமிழர்கள் சிந்திக்காத வகையில் இந்த மாகாணசபையை இயங்க வைக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு நிறையவே உள்ளது' என்றார்.

ஆனால், வடக்கிலே மாகாணசபை சிறப்பாக இயங்குமாக இருந்தால் தெற்கிலே மகிந்த அரசுக்கு ஆட்சியை நடத்துவதற்கு திரிசங்கு நிலை எற்படும். இந் நிலையில் வடக்கு கிழக்கில் ஜனநாயகமற்ற சூழலையும் குழப்பகரமான நிலையையும் உருவாக்கி வைத்திருத்தல் என்ற தெற்கு அரசியலின் செயற்பாடு 70 களிலேயே தொடங்கி விட்டது. அவ்வாறு குழப்பமான நிலையிருந்தாலேயே தெற்கில் இனவாத அரசியலை தக்க வைத்திருக்க முடியும்.

இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியாவை சமாளிக்க வேண்டிய நிலையும் தனது பதவியையும் காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கின்றது. அவ்வாறு பார்க்கின்றபோது தனது பதவிதான் முக்கியம் என்கின்ற நிலைப்பாடு காணப்படும் இவ்வாறான நிலையில் எதுவும் இல்லாத மாகாணசபையையும் இயங்கவிடாத நிலை தேவையாக உள்ளது. ஆனால் மகிந்தவே 13 தருகின்றேன் இதற்கு மேல் பிளஸ் தருகின்றேன் என எவரும் கேட்காமல் தெரிவித்திருந்தார். இன்று அதையும் நீக்க முனைகிறார்.

இந்த நிலையில் தான் இந்தியாவும் தற்போது ஓடிவந்து நிற்கின்றது. நாங்கள் 58 ஆயிரம் கோடியை வடக்கு கிழக்கில் கொட்டியுள்ளோம் என. யாருக்காக கொட்டினீர்கள். நீங்களும் யத்தத்தில் பங்கேற்று எங்களை அழித்தமையால் வீதி போட்டுத்தருகின்றோம், வீடு கட்டித்தருகின்றோம் என நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள். இதனை ஏன் சொல்கின்றேன் என்றால் எங்களுடைய சிலரும் இதற்கு தற்போது உடன்படுகின்றார்கள் போல் இருக்கின்றது. இது ஆபத்தான கட்டம்.

அண்மையில் வந்து சென்ற பிரித்தானிய பிரதமரோடு எங்கள் தலைவர்கள் பேசிய பேச்சு 13 ஐ வலுப்படுத்துங்கள் என்பதாகும். அதை எவ்வாறு வலுப்படுத்துவது. அதில் தானே ஒன்றுமே இல்லையே. அவ்வாறு இருக்கும் போது எவ்வாறு வலுப்படுத்துவது என்று எங்கள் தலைவர்கள் கேட்பார்கள். சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வழியுறுத்த தயங்குவது ஏனோ?
எனவே தான் எங்கள் தலைவர்கள் திசை மாறி செல்கின்றபோது அவர்களை கடிவாளம் போட்டு இழுத்துவந்து எமது நிலைப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

நடந்து முடிந்த பொதுநலவாய மாநாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. வெறுமனே போராடுவோம் போராடுவோம் என்று கூறிக்கொண்டு அடுத்தமுறை பாராளுமன்ற கதிரையை தக்க வைப்பதற்கு செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

ஏனெனில் வந்திருந்த 53 நாடுகளுக்கும் எங்களுடைய இனப்பிரச்சனை தெர்டர்பாக மிகத்தெளிவாக திட்டவட்டமாக தீர்க்கமாக இங்கு நடந்தது. இன அழிப்பு தொடர்பாகவும், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் அத்துடன் எமது பிரதேசம் அங்குலம் அங்குலமாக அபகரிக்கப்பட்டு வருகின்ற நிலைமையை மிகவும் விரிவாக எழுத்து மூலமாக வழங்கியிருக்கலாம் இல்லையேல் தூதுவர்களிடமாவது வழங்கியிருக்கலாம். ஆனால் எங்கள் தலைவர்;கள் அதனை செய்யவில்லை என்கின்ற குற்றச்சாட்டும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகின்றது.

அவர்களிடத்தில் முறையான நிகழ்ச்சி நிரல்கள் இருப்பதுமில்லை. திடமான கொள்கைத்திட்டங்களும் வகுத்ததுமில்லை. ஆனால் பதிய வேண்டும் பதிய வேண்டும் என்று மட்டும் உரத்துக்குரலிடுகிறார்கள் இது பாராளுமன்ற கதிரையை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே என மக்கள் விமர்சிக்கிறார்கள். மக்களுடைய பிரச்சினை வேறு இவர்களுடைய பிரச்சினை வேறு ஏனெனில் கூட்டமைப்பு மக்;கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. இவை தமிழ்த் தேசியத்தின் அடிப்படை இருப்புக்கு ஆபத்தானவை.

எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு மாற்றம் தேவை. அதாவது காமராஜர் இளையோருக்கு இடம்விட்டு போக வேண்டும் என்பதற்காக பதவியையும் தலைமையையும் விட்டுச்சென்றது போல் கூட்டமைப்புக்குள்ளும் காமராஜர் திட்டம்கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த மாற்றத்தினை கொண்டு வந்தால்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு புத்துயிர் அளிக்கப்படும். நல்ல போராட்டங்களை நடாத்துகின்றனர். தங்களுடைய பதவிகளை தக்கவைப்பதற்காக. ஆனால் மக்களின் உணர்வுகளும் நிலைமைகளும் இவர்களுக்கு புரிவதில்லை என்பதே உண்மை. தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாட்டை கூட்டமைப்பு மேற்கொள்ள கூடாது. இவைகள் தொடர்பில் இளையோர்கள் சிந்திக்க வேண்டும்.

அது மாத்திரமில்லை தமிழ் தலைவர்களிடம் ராஜதந்திரம் என்பதே இருந்ததில்லை. 60 ஆண்டுகளாக சிங்கள புத்திஜீவிகளுக்கு கூட எங்களது பிரச்சனைகளை தெளிவாக எடுத்துக்கூற தலைமைகள் தவறிவிட்டது. சரியான சர்வதேச சிந்தனைக்குள் தமிழர்கள் கொண்டு செல்லப்படவில்லை.

விடுதலைப்புலிகளின் ஆயதப்போராட்டமும் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இறந்து போனதும் அல்லது காணாமல்போன சுமார் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரத்து அறுநூற்றி தொன்னூற்று இரண்டு பேரின் தியாகமுமே ஐ.நா வரை எமது பிரச்சனையை கொண்டு சென்று சர்வதேச மயப்படுத்தியதே தவிர இவர்களது போராட்டங்கள் எமது பிரச்சனையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லவில்லை என தெரிவித்தார்.

எனவே கலாசார பண்பாட்டு மாற்றத்தை தடுப்பதுடன் நில அபகரிப்பை தடுப்பதற்கும் இனப்பிரச்சனை தீர்வுக்கும் இராணுவப் பிரசன்னத்தை வடக்கு கிழக்கிலிருந்து அகற்றுவதற்கும் முறையான செயற்பாட்டுத் திறனுடைய கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டு இலக்கு நோக்கி நகர வேண்டியதும் யுத்தத்தால் பெரிதும் அழிந்து போன எமது ஏதிலிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் செயலாற்றுவதே இன்றைய அவசியமான நிலைப்பாடாகும்' என்று அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் வட மாகாண சகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம். தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் வை. கருணாநிதி கலைஞர் மாணிக்கம் ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X