2025 ஜூலை 28, திங்கட்கிழமை

மன்னாரில் கைதான மூவரையும் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் முருங்கன் பகுதியில் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 72 மணித்தியாலம் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள வீதி மதில்களில் நேற்று புதன்கிழமை மாவீரர் தினம் என எழுதிக்கொண்டிருந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை இராணுவத்தினர் கைதுசெய்து முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

முருங்கன் பொலிஸார் விசாரணைகளின் பின் குறித்த மூவரையும் இன்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குறித்த மூவரும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும், இன முரண்பாட்டிற்கு வழியமைக்கும் வகையிலும் முருங்கன் பகுதியில் 'மாவீரர் தினம'; என எழுதியதாக கூறி இவர்களை மன்றில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது மன்னார் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த  வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் குறித்த 3 சந்தேக நபர்களையும் தங்களுடைய தடுப்பில் வைத்து 72 மணித்தியாலங்கள் மேலதிக விசாரணைக்கு  உற்படுத்த வேண்டும் என மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த 3 நபர்களையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிமை வரை 72 மணித்தியாலங்கள் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள பதில் நீதவான் அனுமதி வழங்கினார்.

இவர்கள் மூவரையும் மீண்டும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும் பதில் நீதவான் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான பிரிமூஸ் சிறாய்வா, ஜெபநேசன் லோகு, எஸ்.வினோதன் ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X