2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

போர்க்கால இழப்பீடுகள் தொடர்பான பதிவு உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டு வராது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் போர்க்கால இழப்பீடுகள் தொடர்பான பதிவுகள் உண்மையான தகவல்களை வெளிக்கொண்டு வராது.
இது அரசின்  ஏமாற்றும் செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கல்நாட்டியகுளம் முத்தமிழ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கல்நாட்டியகுளத்தில் பொழுதுபோக்கு மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே  அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், சர்வதேச ரீதியில் இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்காகவும் யுத்த கால இழப்பீடுகள் தொடர்பான பதிவுகளை இந்த அரசாங்கம் அவசர அவசரமாக மேற்கொண்டுள்ளது.

கடந்தகால யுத்தங்களில் பல குடும்பங்கள் முழுமையாக கொலை செய்யப்பட்டுள்ளன. அவர்களின் பதிவுகள் இதில் உள்வாங்கப்படவில்லை. அதாவது யுத்தத்தில் இழப்பீடுகளைச் சந்தித்தவர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கும்போது குடும்ப உறுப்பினர் ஒருவரே வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது பெற்றோர்களையும் சகோதரர்களையும் இழந்த ஒருவர் தற்போது திருமணமாகி இருந்தால் அவர் தனது பெற்றோர் தொடர்பாகவோ அல்லது சகோதரர்கள் தொடர்பாகவோ பதிகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவ்வாறான ஒருவர் திருமணமாகிய குடும்பம் தொடர்பாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியிருப்பதும்  யுத்தப் பாதிப்புக்கள் தொடர்பாக எவ்வாறு முழுமையான தகவல்களை பெற முடியும் என்ற சந்தேகத்தையும் யுத்த இழப்பீடுகளை அரசு மறைக்க முயல்வதையும் சுட்டிக் காட்டுகிறது.

இதைவிட, எமது நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக எமது உறவுகள் பல இடம்பெயர்ந்து இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் வசித்து வரும் நிலையில் அவர்களது பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் உள்வாங்கப்படுவதற்கு எந்தவொரு வழிமுறைகளும் ஏற்படுத்தப்படவில்லை.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த பல மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படவில்லை. இராணுவத்தினரால் மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் பல குடும்பங்கள் பிற மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றன.  அவர்கள் அனைவரும் முறையாக யுத்த இழப்பீடுகளை பதிவு செய்வது தொடர்பிலும் சரியான முறை எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.

யுத்த இழப்பீடுகள் தொடர்பாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டியது அவசியானது தான். ஆனால் அது நேர்மையாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். அதை விடுத்து சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கான வெறும் கண்துடைப்பாக அமையக் கூடாது' என்றார்.

வவுனியா சிறிநாகராஜா வித்தியாலய உபஅதிபர் எஸ்.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த  நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.பார்த்தீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X