2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரேரணை நிறைவேற்றுங்கள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'சிறைச்சாலைகளிலும் நெடுங்காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரேரணை ஒன்றை நிறைவேற்றுமாறு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்களாகிய நாம் பற்றுரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்' என வடக்கு மற்றும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசியல் கைதிகளின் உறவினர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

'கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் யாழ் மாநாகரசபை மற்றும் இதர நகரசபைகள், பிரதேசசபைகள் ஆகியவற்றில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளை முன்மாதிரியாக கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுகைக்குட்பட்ட மாநாகர சபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேசசபைகளிலும் இதுபோன்று பிரேரணைகளை நிறைவேற்றி தமிழ் கைதிகளின் விடுதலை அவசியத்தை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் புத்துணர்ச்சியுடன் மலர்ந்திருக்கும் வடக்குமாகாண சபை தமிழ்க்கைதிகள் விடயத்தில் பற்றுறுதியுடன் செயற்பட்டு ஆக்கபூர்வமான அவசர நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதனை வெளிப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண சபையில் பெரும் பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் எனவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

'தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை' எனற சொற்றொடர்களின் கீழ் எத்தனை விதமான துன்பங்களும் துயரங்களும் மறைந்திருக்கின்றன என்று சற்று சிந்தித்து பாருங்கள். அவர்களின் பிள்ளைகள் அடங்கலான ஒரு சந்ததியே சீரழிந்து கொண்டிருக்கின்றது. அவர் தம் குடும்ப உறவுகள் இணைந்த சமூகமே வாழ வழியின்றி வெறுமையாகியுள்ளது.

இன்று நேற்று என்று இன்னும் எத்தனை வருடங்கள் இந்த அவல வாழ்வு? என்ற வினாவுக்கு யாரிடம் விடை கேட்பது? ஏன் எமக்கு மட்டும் இந்த ஓர வஞ்சகம்? மூன்றரை தசாப்த கால யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்களை அண்மித்து முழு நாடும் இன்று சுமூக சூழலை நுகரும்போது நாம் ஒரு பிரிவினர் மட்டும் எமது அன்பான  உறவுகளை பிரிந்து கண்ணீரும் கவலையுமாக நாட்களை நகர்த்துகின்றோம். நாளாந்தம் நடை பிணங்களாக சிறைவாசல்களிலும் நீதிமன்ற படிகளிலும் நிரையாக நிற்கின்றோம்.

ஆகவே எமது அவலக்கண்ணீரை துடைத்து எம் உறவுகளை மீட்க இனம், மதம், கட்சி, கொள்கை வேறுபாடின்றி அனைவரும் பழைய பகைமை பாராட்டாது ஒன்றிணைந்து ஒருமித்த குரலாக  ஜனாதிபதியிடம் விடுதலை வேண்டுகோளினை பிரேரணையாக முன்வைத்து இந்த மனிதாபிமான வரலாற்றுக் கடமையினை நிறைவேற்றுமாறு கருணை கலந்த உரிமை அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்' என அக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X