2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

எமது மூன்று மீனவர்களின் நிலை என்ன?: ஆலம்

Gavitha   / 2014 நவம்பர் 23 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்திய மீனவர்கள் 5 பேரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எமது மீனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. எமது மூன்று மீனவர்களின் நிலை என்ன? என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் ஞாயிற்றுக்கிழமை (23) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 2011ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 5 பேரும் இலங்கை மீனவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக மேற்படி வழக்கு நடைபெற்று வந்தது.

இறுதியில் கடந்த 30.10.2014 திகதி கொழும்பு உயர் நீதிமன்றம் மேற்படி 8 நபர்களுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இத்தண்டனை வழங்கப்பட்டது முதல், இதற்கு எதிரான கருத்துக்களும் போராட்டங்களும் இந்தியாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இலங்கை மீனவர்களின் குடும்பங்களும் யாழ். ஆயர் இல்லத்துக்கு முன்பாக தமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இருந்தும் வடமாகணத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் எதுவித அக்கறையும் காட்டாது மௌனம் காத்தனர்.

ஆனால், இந்திய தழிழக அரசு மத்திய அரசும் இவ்விடயத்தில் தமது தரப்பு விடயத்தை இலங்கை அரசுக்கு மிகவும் அழுத்தமாக தெரிவித்து வந்துள்ளது.

இதன் பயனாக இந்திய மீனவர்களின் விடுதலை, இலங்கை ஜனாதிபதியின் கருணையின் அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளது.
இதில் எம் நாட்டு மூன்று மீனவர்களும் விடுவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எமக்குள் உள்ளது.

ஏனெனில், இவர்கள் வட பகுதி மீனவர்கள் என்பதாலா? அல்லது வடமாகாண அரசு இதற்கான அழுத்தத்தை கொடுக்கவில்லை என்பதாலா?. அல்லது இம் மீனவர்கள் தொடர்பாக எந்த குழுவும் அரசின் உயர் மட்டங்களை அனுகவில்லை என்பதாலா என்ற பல கேள்விகள் எம்முள் உள்ளன.
விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் தங்கள் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடன் இணையும் அதேவேளை, எமது மக்கள் நாம் இந்திய மக்களாக இருந்திருக்க கூடாதா? அல்லது நாம் தமிழராக பிறந்தது குற்றமா? என்ற பல கேள்விகளுடன் கண் கலங்கி கண்ணீருடன் நிற்கின்றனர்.

எமது மீனவர்கள் மற்றும் பல வருடங்களாக எதுவித விசாரணைகளுமின்றி சிறையில் வாழும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களும் சமூக ஆர்வலர்களும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .