2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பேச்சு வார்த்தை இடைநிறுத்தம்

Gavitha   / 2014 டிசெம்பர் 04 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


பண்டிகைக்கால தெருவோர வியாபாரத்தை நடாத்த அனுமதி வழங்குவது தொடர்பான அவசர கலந்துரையாடல் புதன்கிழமை (03) மன்னார் நகரசபையில் இடம்பெற்ற போது அங்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக கலந்துரையாடல் இடைநிறுத்தப்பட்டது.

பண்டிகைக்கால தெருவோர வியாபாரத்தை நிறுத்தக்கோரி மன்னார் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் வர்த்தகர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு பேரணி ஒன்றை செவ்வாய்க்கிழமை (02) மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் தலைமையில், மன்னார் வர்த்தக சங்க பிரதி நிதிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வர்த்தக சங்க பிரதிநிதிகள், மன்னார் நகரசபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட், நகரசபையின் உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகரசபை உறுப்பினர்களான இ.குமரேஸ், எஸ்.பிருந்தாவனநாதன், என்.நகுசீன், நகரசபை பணியாளர்கள் மற்றும் மாதர் சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், மீனவசங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏற்கெனவே மன்னார் நகரசபையின் இறுதி கூட்டத்தில் மக்களின் நலன் கருதியும் மன்னாரில் உள்ள நிரந்தர வர்த்தகர்களின் நலன் கருதியும் பண்டிகைக்கால தெருவோர வியாபார நடவடிக்கைகளின் கால எல்லையை மட்டுப்படுத்தி எதிர்வரும் 21ஆம் திகதி தொடங்கம் 31ஆம் திகதி வரையிலான 10 தினங்களுக்கு, குறித்த வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் புதன்கிழமை (03) இடம் பெற்ற கலந்துரையாடலின் போது, மன்னார் வர்த்தக சங்க பிரதி நிதிகளும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போது கலந்து கொண்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மன்னார் மக்களின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, தொருவோர வியாபார நடவடிக்கைகள் கட்டாயம் இடம்பெறவேண்டும் எனவும் 10 நாட்களுக்கும் அதிகமான நாட்கள் வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வர்த்தக சங்க பிரதிநிதிகள், நீண்ட நேர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர்.

இதனால், அங்கு கலந்து கொண்ட பொதுஅமைப்புக்களின் கருத்துக்கள் பெறப்பட்ட நிலையில் கலந்துரையாடல் நிறைவு பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .