2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நீண்ட காலமாக நடத்தப்படாமை தொடர்பில் வினோ நோகராதலிங்கம் கேள்வி

Sudharshini   / 2014 டிசெம்பர் 13 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நீண்ட காலமாக நடாத்தப்படாமை தொடர்பிலும் நடாத்தப்படாமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் கடிதமொன்றை சனிக்கிழமை (13) அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாங்கள் இருவரும் நியமிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகியும் மேற்படி கூட்டங்கள் எதுவும் இதுவரை மன்னார் மாவட்டத்தில் நடாத்தப்படாமல் இருப்பதையிட்டு தங்களின் மேலான கவனதத்திற்கு கொண்டு வருவதோடு, எனது கவலையையும் ஏமாற்றத்தையும் தங்கள் முன் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

ஒரு மாவட்டத்தின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால திட்டங்கள், அபிவிருத்தியின் முன்னேற்ற நடவடிக்கைகளின் மீளாய்வு, பொது மக்களால் முன்னிலைப்படுத்தப்படும் தீர்க்கப்படாத பிரச்சனைகளை இனங்கண்டு தீர்வு காணுதல் போன்ற விடயங்களை ஆராயும் ஓரு வலுவான களமாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவும் அதற்கான கூட்டங்களும் அமைகின்றன. இக்குழுவின் நோக்கமும் அதுவே.

நிறைவடைய இருக்கும் இவ் ஆண்டில் ஒரு கூட்டடத்தையேனும்  தங்களால் நடாத்த முடியாமல் போனது மாவட்ட மக்களுக்கு சந்தேகங்களையும் உங்கள் மீதான அவ நம்பிக்கையையும் இயல்பாகவே தோற்றுவித்துள்ளது.

மாவட்டத்தின் அபிவிருத்தியிலும் நலனிலும் உண்மையான அக்கறையுடன் நீங்கள் செயற்படவில்லை என்பதற்கு இதைவிட கனமான காரணங்களை கண்டுபிடிப்பது கடினமானதே.

மேலும், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் தமது கடமைகளை பொறுப்புணர்வுடனும் சேவை நலன் கருதியும் சிறப்பாக மேற்கொள்கின்ற நிலையிருப்பினும் சில வேண்டப்படாத அரசியல் அழுத்தங்கள், தலையீடுகள் காரணமாக சில துறைகளில் எதிர் பார்க்கப்படுகின்ற முன்னேற்றத்தை காண்பதில் எமது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையீனங்களுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் கடப்பாடு மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எமக்கும் உண்டு.

குறைந்த பட்சம் திணைக்களத் தலைவர்கள், உயரதிகாரிகளின் கவனத்துக்கு இவற்றை கொண்டு வருவதற்கான வாய்ப்பும் எமக்கு மறுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் குறைந்தபட்சம் தலா மூன்று கூட்டங்களாவது நடாத்தப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒவ்வொரு கூட்டம் நடைபெற்றிருக்கின்றது. குறைந்த பட்சம் தலா இரண்டு கூட்டங்களையாவது இம்மாவட்டங்களில் நடாத்தியிருக்க வேண்டும். இதற்கான கூட்டுப் பொறுப்பினை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

எனவே, இதுவரை ஒரு முறையேனும் நடத்தாமல் புறக்கணிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை விரைவில் நடாத்துமாறு குழுவின் இணைத் தலைவர்கள் என்ற ரீதியில் தங்களை வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.

இல்லை எனில், என்னென்ன காரணங்களுக்காக இக்கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்பதை; தங்களிடம் இருந்து அறிய ஆவல் கொண்டிருக்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .