2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வன்னிப் பெண்கள் மீளவும் சாதித்துக் காட்டுவர்: ஐங்கரநேசன்

Thipaan   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களைத் தொழில் முனைவோர்களாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இதனை பயணிகள் ஓய்வகத்துக்கு, நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு தொகையும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர். அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

மாங்குளம், கண்டி வீதியில் கைப்பணிப் பொருட்களின் காட்சியறை மற்றும் பாரம்பரிய உணவகத்துடன் கூடிய பயணிகள் ஓய்வகம் ஒன்றை, பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னி வள சுய அபிவிருத்தி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

யு.எஸ்.எய்ட் மற்றும் எஸ்.டி.சி நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இப்பயணிகள் ஓய்வகம் திங்கட்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்;டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வன்னி மண் யாருக்கும் இலகுவில் அடிபணியாது. பண்டாரவன்னியனின் படைகள் மன்னாரில் இருந்து மாங்குளம் ஊடாக முன்னேறிய ஆங்கிலேயப் படைகளை பதினெட்டுத் தடவைகள் முறியடித்ததாக வரலாற்றில் இருந்து அறிய முடிகிறது.

இப்போது நடந்து முடிந்த போரிலும் இலங்கை அரசு இலகுவில் வெற்றிபெறவில்லை. எத்தனையோ தடவைகள் படையெடுப்புகளை நடத்தியிருக்கிறது. அதனை எதிர்கொண்டதில் வன்னிப் பெண்களின் தீரமும் தியாகமும் பெருமளவுக்கு இருக்கிறது.

கடின உழைப்பாளிகளான இந்த வன்னிப் பெண்களே போரினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள். தொழில் வாய்ப்பு இல்லாதவர்களாகவும், அங்கவீனர்களாகவும், குடும்பத் தலைவர்களை இழந்தவர்களாகவும் பாதுகாப்பு அற்றவர்களாகவும் இவர்கள் எதிர்நீச்சல் போடவேண்டியுள்ளது.

போருக்குப் பின்னர் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏராளமான உதவிகளை வழங்கிய போதும் பெண்களின் வாழ்க்கைத்தரம் பெருமளவுக்கு முன்னேறவில்லை.

பெரும்பாலான உதவிகள், மீனை பிடிப்பதற்குக் கற்றுக் கொடுப்பதற்கு பதிலாகச் சாப்பிடுவதற்கு மீனைக் கொடுப்பது போல் இருந்ததே இதற்கான காரணம் ஆகும்.

பெண்களைப் பங்குதாரர்களாகவும் தொழில் முனைவோராகவும் கொண்டு வன்னி வள சுய அபிவிருத்தி நிறுவனம் உருவாக்கப்பட்டு, அவர்களின் தொழில் முயற்சியொன்றுக்கு  உதவி வழங்கும் நிறுவனங்கள் நிதிப்பங்களிப்புச் செய்துள்ளன.

ஏறத்தாழ 13 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் பயணிகள் தங்ககம், மிகப்பொருத்தமான ஒரு இடத்தில் கண்டி வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.

வன்னியின் சுவையைப் பறைசாற்றும் உணவகமும் அமைய இருப்பதால் பொருளாதார ரீதியான வெற்றியை இந்த உணவகம் எமது பெண்களுக்குப் பெற்றுத்தரும்.

இதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய மாதர் அமைப்புகளும் உதவிகளை மற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து பெற்றுக்கொண்டிருப்பவர்களாக இல்லாது தொழில் முனைவோராகவும் தொழில் வழங்குநர்களாகவும் மாற்றம் பெற வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மான் வோங், எஸ்.டி.சி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மார்ட்டின் ஸ்டுடர், எஸ்.ஏ.எச் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டானியல் புரொன்கல், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சோ.கோகுலதாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .